“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

ஞாயிறு, 27 மார்ச், 2011

செத்தாலும் சாகாமல் வாழலாம்...         யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன் என்று சொல்லுவார்கள். அது மனிதனுக்கும் பொருந்தும் காலம் வந்து விட்டது. உச்சியில் இருக்கிற மூளை முதல் உள்ளங்காலில் உள்ள மென்மையான தோல் வரை இறந்தாலும் பிறருக்குப் பயன் படுகிறது என்பது எத்துனை மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. அதனால் தான் இன்று இருக்கும் போது நம்மால் என்ன தானம் செய்ய முடிகிறதோ இல்லையோ இறந்த பின்னாவது மண்ணும் தீயும் தின்னும் இந்த உடலைத் தானமாக கொடுத்து மற்றவரை வாழ வைத்து நாமும் வாழலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த விழிப்புணர்வு இன்று பெரும்பாலும் எல்லாராலும் பரப்பப் பட்டு வருகிறது. உடல் உறுப்பு தானமும் பெருவாரியாக நடக்கத் தொடங்கி விட்டது எனலாம்.

வளத்திடை முற்றத்தோர் மாநில முற்றுங்
குளத்து மண் கொண்டு குயவன் வனைந்தான்
குடமுடைந் தாலவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும்வை யாரே

       என்னடா பாடல் இது என்று குழம்ப வேண்டாம். இதன் பொருள், பிரம்மன் என்ற குயவன் மாயையாகிய மண்ணெடுத்து தாயின் வயிற்றில் வனைந்த குடமே மனிதன். மட்குடம் உடைந்தால் அந்த ஓட்டுச் சில்லுகளை எதற்காவது உதவுமே என்று பாதுகாத்து வைப்பர். ஆனால் மனிதக்குடம் உடைந்தால் கணப்பொழுதும் பாதுகாக்க மாட்டார் என்று திருமூலர் திருமந்திரம் உரைக்கும்.

ஆனால் அந்தக் காலம் இப்போது இல்லை என்றே கூறலாம். மனித உடலை நீண்ட நாட்கள் பாதுகாத்து பயன் பெறுவது முடியாது என்பது உண்மைதான். ஆனால் உடல் பயனற்றது என்று ஒரு போதும் கூற முடியாது. கணப்பொழுதில் அதனை உரிய முறையில் பயன் படுத்த அறிந்தால் இறந்தவரின் உடலின் ஒவ்வொரு உறுப்பும் பயன் படுகிறது பிறருக்கு.

        சென்ற இதழில் சாவாமை பற்றி கொஞ்சம் பார்த்தோம். சாவு என்று சொல்லும் போது இப்போது இரண்டு வகையாகப் பிரிக்க வேண்டியுள்ளது. ஒன்று இதயச்சாவு. இதை இப்படியும் சொல்லாம். துடிப்பு அடங்குவது அல்லது மூச்சு அடங்குவது. மற்றொன்று மூளைச் சாவு.

      இவ்விரண்டில் உயிர்ப்பான சாவு மூளைச்சாவு. இதயம் நின்று விட்டால் மொத்தமும் முடிந்து விடுகிறது. ஆனால் சுமார் 1.5 கி.கி எடையும் 1260 கண் செண்டிமீட்டர் நீளமும் கொண்ட சாம்பல் நிறத்தில் இருக்கும் இந்த மூளையின் இயக்கம் நின்று விட்டால், அதாவது மூளை இறந்துவிட்டால் உடலின் மற்ற உறுப்புகள் வேறு உடலில் இருந்து இயங்கலாம். ஆதலால் அது பிற உறுப்புகளுக்கு உயிர் கொடுக்கிறது. அப்போது அதை உயிர்ப்பான சாவு என்று கூறலாம் அல்லவா? இதை மெய்ப்பிக்கும் சான்றுகள் பாருங்கள்.

    இது வரை இதுவரை 86 பேருக்கு மூளைச் சாவு ஏற்பட்டு, அவர்களிடமிருந்து 18 இதயம், 2 நுரையீரல்கள், 74 கல்லீரல்கள், 166 சிறுநீரகங்கள், 99 இதய வால்வுகள், 126 விழி வெண் படலங்கள் (கார்னியா) ஆகியவை தானமாக பெறப்பட்டுத் தேவைப்படும் நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மூளைச் சாவினால் இதுவரை 479 பேர் பலன் அடைந்துள்ளனர். ஒருவர் சாவும் பலர் வாழ்வும் இம்மூளைச்சாவில் மட்டும் சாத்தியம். மூளைச் சாவில் இறந்தவர்களின் கைகளை தேவையானவர்களுக்குப் பொறுத்துவது சற்று கடினம்தான் என்று மருத்துவர்கள் கூறினாலும், முயன்று கைகளையும் எடுத்து கைகள் இல்லாதவர்களுக்குப் பொருத்தலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. கைகள் பொருத்தப்படும் போது கால்கள் மட்டும் என்ன பொருந்தாமலா போய்விடும். நம்புவோமாக.

.      இதிலிருந்து மூளை இறந்தால் உடல் உறுப்புகள் பயன் அடைகின்றன என்பதை அறிகிறோம்.. இதயம் இறந்தாலும் உறுப்புகள் பயன்படுகின்றன என்றாலும் அவை மருத்துவ மாணவர்களுக்குப் பாடம் படிக்க மட்டுமே. முந்தையதைப் போல பிற உயிருக்கு உடல் உறுப்புகளாக இயங்க முடிவதில்லை.

      இந்த உயிர்ப்புச் சாவுக்கு என்று அரசு மருத்துவமனையில் (ஸ்டான்லி) “மூளை இறப்பு உறுப்பு தானப் பிரிவு “என்று ஒரு தனிப்பிரிவே தொடங்கப்பட்டு விட்டது. என்சான் உடலுக்கு சிரசே பிரதானம் என்று பழமொழி எழுந்தது தலைக்குள் இருக்கும் மூளையின் பாதுகாப்பு கருதியே. இவ்வளவு உயிருக்கு உத்திரவாதம் தரும் உருப்பு என்பதாலேயே மூளையைக் கடினமான மண்டை ஓட்டுக்குள் ஒளித்து வைத்தான் இறைவன். வெளியில் செல்லும் போது அதையும் நாம் வேறு ஒரு கபாலம் போட்டு மூடிக்கொண்டு அலைகிறோம் என்பது இன்னும் பாதுகாப்பு கருதியே. இல்லாவிட்டால் கபால மோட்சம் கிடைத்து விடுமே இன்றைய அதிவேக போக்குவரத்தில்.

         சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தியாகம் செய்த புனித மகன் ஏசு மூன்றாம நாள் உயிர்த்து எழுந்தார் என்கிறது விவிலியம். பாம்பு கடித்து உயிர் இழந்த சிறுவன் திருநாவுக்கரசு உயிர்த்து எழுந்ததையும், அழகி பூம்பாவை உயிர் பெற்று எழுந்ததையும், சீராளா என்று தாய் தந்தையர் அழைத்தவுடன் வெட்டிச் சமைக்கப்பட்ட சீராளன் உயிபெற்று ஓடி வந்ததையும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன என்றாலும் இவை எல்லாம் அறிவியல் ஆராய்ச்சிக்கு உடபடுத்தப் படாமல் பக்தி என்ற அளவிலேயே நின்று விட்டுள்ளன.

         சாவாமை பற்றி பேசியவர்கள் அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை இருந்து கொண்டே இருக்கிறார்கள். சித்தர்கள் சாவாது வாழ்ந்தார்கள் என்றும் இன்னும் சித்தர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் நாம் கேள்விப்படுகிறோம். திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார். ஓராண்டுக்கு ஒரு முறை ஒரு மந்திரத்தைப் பாடியருளினார் என்று திருமூலர் வரலாறு கூறுகிறது.  
“சாகாமல் இருப்பதற்குக் கல்வியுண்டு
சாக்காடு கொள்வதற்கு விபர முண்டு” 
என்று காகசபுண்டர் பெருநூல் காவியம் செப்புகிறது.

கமபரும் அக்காலத்திலேயே,

”மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும்
மெய்வேறு வரிகளாக கீண்டாலும் பொருந்துவிக்கும்
ஒருமருந்தும் படைக்களங்கள் கிளர்ப்பது ஒன்றும்
மீண்டேயும் தம்உருவை அருளுவது ஓர்மெய்ம்மருந்தும்
உளநீவீர ஆண்டு ஏகி, கொணர்கஎன
அடையாளத்துடனும் உரைத்தான் அறிவின் மிக்கான்”
 
என்ற கம்பன் கூற்றால் மாண்டாரை உயிருடன் எழுப்ப வல்லதும், உடலை இரு கூறாக வெட்டினாலும் சேர்த்து உயிர் கொடுக்கும் மருந்தும் படைக்களங்களைக் கிளர்ந்து எழச்செய்யும் மருந்தும், இழந்த உருவத்தை மீண்டும் உருவாக்கவும் கூடிய மருந்தும் இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

      வள்ளலார் வாழும் காலத்தில் பெரிதளவு விமர்சனத்துக்கு உள்ளானது., அவர் செத்தாரை மீட்டளித்தார் என்ற கருத்தினாலே. இன்றளவும் வள்ளலார் என்று கூறும் போது நம் மனக்கண்முன் வந்து போவது அவர் போற்றிய மரணமில்லா பெருவாழ்வு கொள்கையே. அவர் செத்தாரை மீட்டளித்தாரா இல்லையா என்பது அவர் வாழ்ந்த காலத்தில் பெரிய கேள்வியாக இருந்து வந்தது. இன்றும் அது விளங்காத புதிராகவும் இருந்து வருகிறது. ஆனால் அவர் வார்த்தைகளில் மரணமில்லா பெருவாழ்வு நடமாடிக்கொண்டிருந்தது என்பதை பல பாடல்கள் சான்றுரைக்கின்றன.

என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந்தானே,
என்று சாவாமைக்கு வழியைக் கூறுகிறார் ஒரு பாடலில்.

“மரணமில்லா பெருவாழ்வில் வாழ வம்மின் இங்கே

என்று அழைப்பு விடுக்கிறார் மற்றொரு பாடலில்.. இதோ பின்வரும் இந்தப் பாடலில் தூக்கம் கலைந்து எழுபவர் போல சாவில் இருந்து மீளலாம் என்று கூறுகிறார்.

துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள்
எல்லாம்
தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்
பயின்றறிய விரைந்துவம்மின், படியாத படிப்பைப்

படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே!


         இதையெல்லாம் விட சிறப்பு என்னவென்றால் ஒரு பாடலில் ஊன் நிறைந்த இந்த உடலும் அழியா நிலை வரும் என்று அவர் கூறுகிறார். உயிர் என்றும் அழியாது என்பது மூத்தோர் கருத்து. அது அவ்வப்போது சட்டையை மாற்றிக்கொள்வது போல பிறவியாகிய சட்டையை மாற்றிக்கொள்வது அனைவரும் ஏற்றுக்கொண்டது. ஆனால் உடல் அழிவது கண்கூடாகக் கண்டது. இன்னும் கண்டு கொண்டு இருப்பது. ஆனால் வள்ளலார் உடலும் அழியாது இருக்கும் நிலையான ஒரு காலம் கைகூடும் என்று கூறியிருக்கிறார். இது சத்தியமாக நடக்கும் என்றும் கூறுகிறார். எதிர்காலத்தில் நடக்க இருப்பதை அதாவது இக்காலத்தில் நடந்து கொண்டிருப்பதை இந்த மகான் அக்காலத்தே கண்டு உரைத்த ஆறுடமாக இதனைக் கொள்ள வேண்டியுள்ளது. வள்ளல் பெருமானின் எதிர்காலப் புலனை நினைத்தால் வியப்பாக உள்ளது. பாடலைப் நீங்களும் படித்துப் பாருங்கள்.

“ஊனேயும் உடலழியாது ஊழிதோறும் ஓங்கும்
உத்தம சித்தியைப் பெறுவீர் சத்தியம் சொன்னேனே

        இந்த மரணமில்லா பெருவாழ்வுக்கு உரிய மந்திரமாக சிவ சிவா என்றால் மரணமில்லா பெருவாழ்வை அடையலாம் என்று சைவ சிந்தாந்திகள் கூறுகிறார்கள். அது எப்படி சாத்தியம். கண்டிப்பாகச் சாத்தியமே.. எப்படி யென்றால் சிவா சிவா என்று தொடர்ந்து சொல்லிப் பாருங்கள். அது வாசி வாசி. என்றே ஒலிக்கும். வாசி என்றால் யோகப்பயிற்சி.

“மரண வாடை வீசா திருக்கமெய்ச்
சுரணை ஊட்டும் தென்றல்

என்கிறது ஒரு புதுக்குறள்.(நன்றி இணையம்) நெடுநாள் வாழும் வழி கூறும் யோகப்பயிற்சியானது தச வாயுக்களில் ஒன்றான "பிராணன்" என்ற வாயுவை (உயிர் காற்றை) வெளியில் விடாதவாறு கட்டுபடுத்துவதே இதனையே பிராணாயாமம் என்று கூறுவர். காற்றைக் கடவுள் என்று கூறுவதும் இதனாலேயே. 
“நாடான நாடதனிற் கடவுள் என்று
நானிலத்தில் ஆட்டுவித்தல் காற்று காற்று
கோடான கோடி தெய்வம் காற்றுக் கேதான்
கூறிவைத்தார் அல்லாது வேரொன் றில்லை
ஆடாத ஆட்டமெல்லாம் காற்று மாகும்
அது அகன்றால் அகிலம் அழிந்து போகும்”
என்று கூறி காற்றுதான் இந்த உலகம் உய்ய காரணமாக இருக்கிறது என்பர். இதனாலேயே,

"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும்
கணக்கறி வாரில்லை
காற்றை
ப் பிடிக்கும் கணக்கறி வார்க்கு
கூற்றை தைக்கும் குறியது வாமே"

என்று பாடினார் திருமூலர். ஆம் காற்றைப் பிடித்து நிறுத்தி வைக்கும் கலையை அல்லது கணக்கை அறிந்து கொண்டால் சாவு வெகு தூரத்தில். நாமும் பாரதியைப் போல காலனைக் காலால் உதைத்திடலாம். சாவு அருகில் வந்தாலும் பிடித்துத் தள்ளி விட்டு, எம்.ஜி.ஆரைப்போல நான் செத்துப் பிழைத்தவண்டா! எமனைப் பார்த்துச் சிரித்தவண்டா என்று சிரித்துக் கொண்டே பாடலாம். இந்த வாசியோகம் பற்றி விரிவாகப் பிரிதொரு பதிவில் பார்க்கலாம்.
நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்.

12 கருத்துகள்:

 1. நல்லதொரு கட்டுரை... வாழ்த்துகள்....

  இருக்கும் இந்த ஊண் உடல் என்று போய் சேரும் என்றே வாழும் மானிட கூட்டங்களாய் இன்று...

  வாழ்ந்த காலங்கள் என்று பெருமூச்சிவிடும் மக்களாய் இன்று...

  வாழும்வரை நோய்நொடி இன்றி வாழ்வோம்...

  பதிலளிநீக்கு
 2. எப்படியிருக்கீங்க நலமா?

  நோய்நொடியின்றி வாழ வாழ்ந்தாலே அதுவே வாழ்க்கையின் முக்கால்பகுதியை நிம்மதியை தந்துவிடும்..

  நல்லதொரு கட்டுரை.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. //இருக்கும் இந்த ஊண் உடல் என்று போய் சேரும் என்றே வாழும் மானிட கூட்டங்களாய் இன்று...//
  எங்களுக்குப் பொருத்தமான் வரிகள்.. தங்களுக்குப் பொருந்தாது..

  உடனடியாக வந்து கருத்து சொன்ன வாசனுக்கு என் மனமார்ந்த நன்றி..

  பதிலளிநீக்கு
 4. வாங்க மலிக்கா,
  நலமாக இருக்கிறேன் மலிக்கா..நீங்க நலம்தானே? இன்னும் கொஞ்சம் வேலை இருக்கிறது முடிந்தவுடன் வந்து விடுகிறேன். அதுவரை மன்னிக்கவும்.

  இந்தக் கட்டுரைகள் தவிர்க்க முடியாதது. தொடர். அதனால் தான் எழுதுகிறேன்.

  பதிலளிநீக்கு
 5. தமிழ் விளையாடுது. அருமை.

  எல்லாம் புரியுது, இதைத்தவிர: "சென்ற இதழில் சாவாமை பற்றி கொஞ்சம் பார்த்தோம்". நானும் தேடித் தேடிப் பாக்குறேன்...

  இறந்தவர்களெல்லாம் 2012ல் திரும்பி வரதா படிச்சேன்.

  பதிலளிநீக்கு
 6. வாருங்கள் அப்பாதுரை,
  அவசரத்தில் எழுதும் கட்டுரை. புத்தகத்துக்குக் கொடுத்ததை அப்படியே பதிவிட்டு விட்டேன். அதை முந்தைய பதிவு என்று மாற்ற வேண்டும். அந்தப் பதிவு நீங்களும் படித்ததே.
  http://tamilnimidangal.blogspot.com/2010/12/blog-post_23.html
  குமுதம் ஹெல்த்தில் தொடர்தானே எழுதுகிறேன். அதனால் அந்த வார்த்தை. மன்னிக்கவும்.

  தேடிப்பிடித்து எழுத நேரம் ஒத்துழைக்காததால் ஏதோ ஒப்பேற்றிக்கொண்டு இருக்கிறேன்.

  //இறந்தவர்களெல்லாம் 2012ல் திரும்பி வரதா படிச்சேன்.//
  எங்கே படித்தீர்கள். முடிந்தால் லின்ங் கொடுக்கவும்.

  பதிலளிநீக்கு
 7. குமுதம் ஹெல்த் என்று ஒரு புத்தகம் வருவது தெரியாமல் எழுதிவிட்டேன்.. குமுதம் தளத்துக்கே போகவில்லை சில வருடங்களாய். இப்போது தான் கவனித்தேன்.
  very nice. வாழ்த்துக்கள்.

  என்ன இப்படி கேக்கறீங்க - 2012ஐப் பத்தி சினிமாவே வந்துருச்சே? mayan நம்பிக்கைகளில் ஒன்று, '2012ல் உலகம் அழியும் போது இறந்தவர்கள் திரும்பி வருவார்கள்' என்பது. (அழியும் போது திரும்பி வருந்து என்ன பயன் என்று கேட்டால் சூனியம் வைப்பார்களாம் - அதனால் கேட்கவில்லை).

  பதிலளிநீக்கு
 8. அப்பாதுரை அவர்களே,
  வலையில் குமுதம் ஹெல்த் இதழ் ஃப்ரீ டவுன்லோட் இருக்கிறதா?

  ஓ சினிமாவைச் சொல்கிரீர்களா? சூனியம் யாருக்கு வைப்பார்களாம்?

  பதிலளிநீக்கு
 9. குமுதம் ஹெல்த் பத்திரிகை இருப்பதை குமுதம் தளம் பார்த்துத் தெரிந்து கொண்டேன். டௌன்லோட் வசதி இருக்கிறதா தெரியவில்லை. சாதாரணமாக குமுதம் விகடன் தளங்களுக்குப் போவதே இல்லை. உங்களுக்காக வேண்டுமானால் படிக்கிறேன் :)
  2012 சினிமாவைச் சொல்லவில்லை - இறந்தோர் எழுந்து வருவது அசல் mayan நம்பிக்கை. நாள் நட்சத்திரம் பார்த்து அந்த தினம் 2012ல் வருவதாகச் சொல்கிறார்கள். சினிமா அதைவைத்துப் புரட்டியது தான்.

  பதிலளிநீக்கு
 10. அன்புள்ள அப்பாதுரை அவர்களே,

  //சாதாரணமாக குமுதம் விகடன் தளங்களுக்குப் போவதே இல்லை. உங்களுக்காக வேண்டுமானால் படிக்கிறேன் :)//
  விழிகள் குளிர் நீரில்.. இந்த அன்புக்கு எப்படி நன்றி சொல்ல?
  வேண்டாமே அந்தக் கட்டுரைகளை பெரும்பாலும் இங்கு பதிவிட்டு விடுகிறேனே..

  பதிலளிநீக்கு
 11. அன்புள்ள அப்பாதுரை,
  நான் தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன்.. வேறு ஒன்றும் இல்லை. என் ந்ண்பர் ஒருவர் டெல்லியில் கிடைக்கவில்லை.. என்று கூறிக்கொண்டே இருக்கிறார். வலையில் கிடைத்தால் அவர்க்கு கூறலாம் என்றுதான் கேட்டென்.

  பதிலளிநீக்கு
 12. தமிழும் நலமும் சேர்த்து அழகா எழுதுறீங்க.. அது போதுமே? நல்லா எழுதுறது நன்றி தானே ஒரு வகையில?

  தமிழ்நாட்டை விட்டு வெளியே வந்தால் - குமுதம் அதிகம் கிடைப்பதில்லை. என் அந்த நாள் favorite வார இதழ்.. மவுசு குறைந்து விட்டதோ என்னவோ! இணையம் வந்த பிறகு முப்பது மைல் தள்ளியிருக்கும் புத்தகக் கடைக்கு போவதில்லை - அதற்கு முன்பே கூட சோம்பல் தான்.

  குமுதம் தளத்துக்கு சென்று ஏதாவது படிப்பேன் - சினிமாவைத் தவிர வேறு எதுவுமே சுவாரசியமாக இல்லாதது போல் பட்டது; சினிமாவும் அத்தனை சுவாரசியமாக இல்லை, பார்க்கவும் வாய்ப்பில்லை. படிப்பதையே நிறுத்தி விட்டேன். விகடன் தளம் ஏறக்குறைய அப்படித்தான் - விகடன் spam இன்னும் மோசம். வாரத்துக்கு இரண்டு இமெயில் அனுப்புகிறார்கள், சந்தா புதுப்பிக்கச் சொல்லி.

  குமுதம் காரர்களுக்கு வலையில் இருக்கும் வாடிக்கையின் மதிப்பு புரியவில்லை என்பது ஆச்சரியம்! அந்த நாளில் புதுமையின் அடையாளமே குமுதமாக இருந்தது.

  பதிலளிநீக்கு