அவன் பெயர் ரவிவர்மன்....(சிறுகதை)
வான்மதி கடலையே வெறித்துப்
பார்த்துக் கொண்டிருந்தாள். அது ஆள் அரவம் நிறந்த பீச் அல்ல. ஊரை விட்டு வெகு தொலைவில்
உள்ள கடற்கரைப் பகுதி. இறக்க வேண்டும் என்று துணிந்து எவரும் அறியாமல் வீட்டை விட்டு
வெளியேறியவள், கால் வேகமாக நடை போட எப்படி வந்தாள் என்றே தெரியாமல், எண்ணி ஐம்பத்தைந்து நிமிடங்களில்
ஊரின் எல்லையைத் தாண்டிவிட்டாள். பகல் பொழுதிலேயே இப்பகுதியில் ஆள் நடமாட்டம் இருக்காது.
தூரத்தில் ஏதாவது கட்டுமரங்களக் காணலாம். அதுவும் கடலில்தான். இந்தக் கரை கட்டுமரங்கள்
கூட ஒதுங்கும் கரையல்ல. அப்படிப்பட்ட இடத்தில் இரவு எட்டு மணிக்கு யார் வரப்போகிறார்கள்? இறப்பதற்கு முன்பு இன்ப நினைவுகளைச்
சற்று நேரம் அசை போட எண்ணுகிறது வான்மதியின் மனம். இது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான
மரணப்போராட்டம் அல்ல. இறந்த கால இன்பத்தை எண்ணீத்துடிக்கும்
மனப்போராட்டம். இறப்பைக் கண்டு வான்மதி அஞ்சவில்லை. ஏனெனில் இறப்பில் மட்டுமே வான்மதியால்
தன் காதலன் ஆதவனுடன் கலக்க முடியும்.
இந்த வெற்றுக் கடற்கரை போன்றதல்ல அவள் நினைத்து
இன்புறத் துடிக்கும் பூம்புகார் கடற்கரை. எத்தனை முறை வந்திருப்பாள் பூம்புகார் கடற்கரைக்கு
அவள் அவனுடன். அவர்கள் பூம்புகார் வரும்போதெல்லாம் சிலப்பதிகாரக் கலைக்கூடம் செல்லாமல்
இருக்கமாட்டார்கள். முதல் முறை கலைக்கூடத்தில் நடந்தது; நெஞ்சமதில் ஆழமாகப் பதிந்தது: கலக்கூடத்தில்
இளங்கோவடிகள், ஊர்
முரசறைதல் போன்ற சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே வந்தவன், கோவலன் கண்ணகியின் கரங்கள் இணைந்த
மணக்கோலச் சிற்பத்தைக் காண்கிறான். “காதலற் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல்”
என்ற அடியில் எழுதியிருந்த சிலப்பதிகார அடியை வாய்விட்டு படித்த ஆதவன், மணமகன் மணமகளின் கையைப் பிடிப்பதைப்
போல அவன்தன் கையால் வான்மதியின் இடக்கையைப் பிடித்து அவள் நிதானித்து விலகுவதற்குள்
அவள் சற்றும் எதிர்பாராது, அவள் நெற்றியில் ‘பச்’ சென்று இதழ் பதித்துவிட்ட அந்த ஈரம் அவள்
நெஞ்சில் இன்னும் உலரவில்லை. வான்மதி தன் இரு கைகளையும் இணைத்துக் கொண்டு அந்தக் காட்சியைத்
தன் கண்களுக்குள் ஓட்டிக்கொண்டிருந்தாள்.
இயல்பாகவே ஆதவன் தமிழ் ஆர்வமுள்ளவன். அவன் வான்மதியை
இந்த இன்ப அதிர்விலிருந்து மீள்ச்செய்ய, “தமிழரின்
முதல் காப்பியம் என்ற பெருமை பெற்ற சிலப்பதிகாரம் காதல் சுவையில் தொடங்கி அவலச்சுவையில்
முடிவது. இந்த உத்தியாலேயே அது படிப்பவர்களை ஈர்ப்பது” என்றெல்லாம் ஒரு சிற்றுரை ஆற்றிக்கொண்டே
வந்தான். அடுத்து நிகழ்ந்தது: மாதவியின் கூடல் காட்சி சிற்பத்தைக் கண்டவுடன், கோவலனின் கண்களில் தெரியும் கலை ஆர்வத்தைக்
கூறி சிற்பியின் திறத்தைப் பாராட்டிக்கொண்டே ரசனையோடு பார்த்தவன், கோலவலனாக மாறி தன் இதழில் இதழ் பதித்தது, அவளுக்கு நினைவாக வரவில்லை. இப்போது
நடந்துகொண்டிருக்கும் நிஜமாக உணர்கிறாள். தன் இதழில் பதிந்த அவன் இதழ்களைத் தன் விரல்களால்
ஸ்பரிசித்து ஒரு முத்தம் பதித்தாள் இரு கண்களையும்
இருக மூடியபடி. மெய்சிலிர்த்து அவள் நிமிர்ந்தபோது சுகநரகம் விழிகளில் தண்ணீர் கோலமிட்டது.
அச்சத்திலும் குளிரிலும் நடுங்கிக் கொண்டிருந்த
உதயாவின் முகத்தை அலைகளின் ஓசை ஆரவாரமாக அவள் காதில் ஒலித்தது. இரண்டாவது முறை பூம்புகார்
போனபோது அவளுக்கும் ஆதவனுக்கும் ஏற்பட்ட ஊடல் காட்சி நிழலாடுகிறது அள் கண்களில். அலையின்
ஓசை, மக்கள்
கூட்டம், பேச்சு
சத்தம் இவற்றினிடையில் காதலர்கள் ஒரு கட்டுப்பாடின்றி நடந்து கொண்ட முறை, அதனைக் கண்டு தான் அறுவறுப்பு அடைந்து
கோபத்துடன் அவ்விடத்தை விட்டு அகன்றது, அவன் பார்வை அங்கு சென்றுவிடாமல் அவனைத்திருப்பி
அழைத்து வந்தது, “ஏன் தான் இளைஞர்கள் இப்படி நாகரிகமின்றி
நடந்து கொள்கிறார்களோ என்று புலம்பிய போது, அவன் நீ மட்டும் பார்த்துட்டே அந்தக் காட்சியை
நான் பார்க்க வேண்டாமா?” என்று
போவது போல அடியெடுத்து வைக்க, ‘பளார்’ என்று அவன் முதுகில் ஒரு அடிகொடுத்து அவனை
இழுத்து வந்தது, பின்பு
”இவ்வளவு அழகான இடத்தின் அழகை இவர்கள்
கெடுக்கிறார்களே” என்று இருவரும் வருத்தப்பட்டது, “முதல் வேலையாக பத்திரிகையில் இதனைப்பற்றி
எழுத வேண்டும் என்று இருவரும் சேர்ந்து முடிவெடுத்தது என்று அலை அலையாக நினைவுகள் மேலெழ, கடலலையில்தான் இந்த நினைவலைகளைக்
கரைக்க வேண்டும் என்று கடலை நிமிர்ந்து பார்த்த போது, தொலைவில் ஓர் உருவம் கடலுக்குள் அஞ்சி
அஞ்சி இறங்குவது தெரிந்தது.
இவள் இதயம் ‘திக்
திக்’ கென்று அடித்துக்கொண்டது. “இன்னொரு தற்கொலையா? அது ஆணா பெண்ணா? எதுவும் தெரியவில்லையே. காப்பாற்றுவோமா? காப்பாற்ற நமக்கென்ன அறுகதை இருக்கிறது? நரக வேதனையில் வாழ்வது எத்தனை கடினமென்று
அறியாதவள நான்? போகட்டும்.
நிம்மதியாகச் செத்துப் போகட்டும். என்ன துன்பமோ? வாழ்நாள் முழுவதும் துன்பப் படுவதைவிட, ஒரு பத்து நிமிட வேதனைதானே இது. என்ன? எமனின் உலகத்திற்கு என்னைவிட பத்து
நிமிடம் சீனியராகச் செல்லப் போகிறார்”
என்று மனதைக் கல்லாக்கிக் கொண்டு அம்ர்ந்தவளுக்கு, “என் அலுவலகத்து நண்பன் ஒருவன் தற்கொலை செய்து
கொண்டான். அவன் இரண்டு நாட்களாகவே நான் சாக வேண்டும், நான் சாக வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தான்.
நான் அவன் ஏதோ விளையாட்டாகச் சொல்கிறான் என்று நினைத்தேன். இப்படிச் செய்வான் என்று
எதிர்பார்க்கவில்லை” என்று ஒரு தற்கொலையைப் பற்றி பேசிக்கொண்டிருந்த
போது ஆத்வன் வெடித்துச் சிதறியச் சொற்கள் அவள் காதில் மோதின.
தற்கொலை எண்ணம் தோன்றுவதும், மறைவதும் ஒரு கணப்பொழுதில்தான். அதிக
பட்சமாக அரைமணி நேரத்தில் எடுக்கும் முடிவுதான். அந்த நேரத்தில் அந்த எண்ணத்தை மாற்றி
விட்டோமானால் அவர்கள் பின் எப்போதும் தற்கொலையை நினைத்து கூட பார்க்கமாட்டார்கள். வாழ்க்கையின்
அழகையும், அவசியத்தையும், இறைவன் நம கையில் கொடுத்த வாழ்நாளை
வாழ்ந்து முடிப்பது நம் கடன், என்பதையும் உணர வைத்து விட்டால் அவர்கள் வாழ்க்கையை வாழ்வது மட்டுமன்றி, தனக்கும் பிறருக்கும் பயனுள்ளதாகவும்
வாழ்ந்து முடிப்பர். அது மட்டுமல்ல தற்கொலைக்கு முயல்கிறார் ஒருவர் என்பதறிந்து, அதனைத் தடுக்காமல் இருப்பது கொலை
முயற்சிக்குச் சமமானது என்றுதான் நான் கூறுவேன்”
என்று கூறிய ஆதவனின் கோபக்கனல் வான்மதியின் வைராக்கியத்தைச் சாம்பலாக்க அவள் வேகமாக
எழுந்து ஓடுகிறாள்.
ஏங்க!! ஏங்க!! யாருங்க அது? நில்லுங்க.. என்று அலறியவுடன் இடுப்பளவு
நீரில் வேகமாக சென்று கொண்டிருந்த அந்த உருவம் நின்றது. அது அச்சமா? இவள் அழைத்ததாலோ? அந்த உருவம் லேசாகத் திரும்பிப் பார்த்ததில்
அது பெண் என்று உறுதியானது. “நானும்
உங்களைப்போல சாகத்தான் வந்துள்ளேன்.. நில்லுங்க.. நானும் வருகிறேன்” என்று உரக்கக் கூறிக்கொண்டே அருகில் சென்று, அவள் கையைப் பிடித்து, அலைகளினூடே மெதுவாக இழுத்து வந்து
கரையை அடைந்தாள். கரையில் அமர்ந்து சாகத்துடித்த இரு இதயங்களும் உரையாடின.
அன்புடன்
தன் இரு கரங்களிலில் ஏந்திக் கொண்டு “உங்களுக்கு
என்ன பிரச்சனை? என்னிடம்
சொல்லலாம் என்றால் சொல்லுங்கள்” என்று
சொல்லி முடிக்கும் முன்னே உதயாவின் கேவல் அதிகமாயின. சற்று நேரக் கேவலின் பின்பு பேசத்துவங்கினாள்.
“நானும் என் கணவன் சுரேந்திரனும் காதலித்துத்
திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்குத் திருமணம் ஆகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஐந்தாறு
முறை கரு உண்டாகி அபார்ஷன் ஆகிவிட்டது. எனக்கு யூட்ரஸ் வீக்காக உள்ளதாம். அதனால் குழந்தை பெறும் பாக்கியம் எனக்கு இல்லை என்று
டாக்டர்கள் கூறி விட்டனர். என் கணவர் நல்லவர் தான். என் மாமனார் மாமியார் இருவரும்
“எங்களுக்கு இருப்பதோ ஒரு வாரிசு, அந்த வாரிசுக்கு ஒரு வாரிசு இல்லையென்றால்
இந்த தலைமுறை இவனோடு அற்று விடும்” என்று
புலம்புகின்றனர். என் கணவர் குழந்தை இல்லையென்றால் என்ன? எனக்கு அவளும் அவளுக்கு நானும் குழந்தையாக
இருந்து விட்டுப் போகிறோம்”என்று
அவர்களைச் சமாதானப் படுத்துகிறார். அவர்களோ சமாதானம் ஆவதாக இல்லை. ஆனால் அவர்கள் என்
கணவருக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்கும் நோக்கம் இருக்கும் போலத் தெரிகிறது. என்
சுரேந்தரை இன்னொருத்திக்குத் தூக்கிக் கொடுத்து விட்டு............. என்னால்..........அதை
நினைத்துப் பார்க்கவே முடியவில்........”என்று
வார்த்தையை முடிக்காமலே ஓஓஓஓஓ........ என்று அழ ஆரம்பித்தாள்...
அழுவதைப் பார்த்துக் கொண்டிருந்த வான்மதிக்கு
“திருமணம் செய்து கொண்ட கையோடு நீ
எனக்குக் குழந்தை பெற்றுக் கொடுத்துவிட வேண்டும். அதிலெல்லாம் தாமதமே இருக்கக் கூடாது.
“தம் பொருள் தம் மக்கள்” னு திருவள்ளுவர் சொல்ர மாதிரி என் மனைவி, என் குழந்தைன்னு நான் பெருமையா சொல்லிட்டு
வாழ வேண்டும். நான், நீ , நடுவுல நம்ம குழந்த, யோசிச்சுப் பாரேன்..வண்டியில போற காட்சி எவ்வளவு
நல்லா இருக்குன்னு” என்றெல்லாம் ஆதவன் ஆசைக் கோட்டைக்
கட்டியது அவள் மனத்திரையில் ஓடியது. உடனே ஒரு மின்னல் அடித்தாற் போல உணர்ந்தாள். “என் குழந்தை ஆசையை நிறைவேற்றிக் கொள்ள கிடைத்த
வாய்ப்பு இது.. பயன் படுத்திக்கொள்”என்று
ஆதவன் கூறுவது போலத் தோன்றியது அவளுக்கு.
மென்மையாக உதயாவின் தோளைத் தொட்டு “நீங்கள் கவலைப் படாதீர்கள். எல்லாம் நல்ல
படியாக முடியும். என்று கூறிவிட்டு “
உங்களுக்குக் கர்ப்பப்பைதானே வீக் என்று கூறினீர்கள்? மாதந்தோறும் கரு முட்டைகள் உரிய நாட்களில்
உருவாகின்றனவா?” என்று கேட்டாள் ஏதோ தெளிவு பெற்றவளாக..
உதயாவும் “அதெல்லாம் நார்மலாக இருக்கிறது. இரண்டு
மாதங்களுக்கு மேல குழந்தையைத் தாங்கும் வலிமை மட்டும் என் கருப்பைக்கு இல்லையாம்.” என்றாள். நீங்கள் வாடகைத்தாய் மூலம் உங்கள் குழந்தையைப் பெற்றெடுப்பதை கேள்விபட்டதில்லையா? இல்லை விரும்பவில்லையா?” என்று கேட்டாள் வான்மதி. உதயா அதற்குப் புரிந்தும்
புரியாததுமாகத் தலையை ஆட்டி “என்
கணவர் கூறினார். நான் தான் அதெல்லாம் சரிப்படுமா? என்று கேட்டு வேண்டாமென்று கூறிவிட்டேன்” என்றாள். உடனே வான்மதி உங்கள் குழந்தையை
நீங்கள் கைநிறைய எடுத்துக் கொஞ்சும் காலம் அருகில் வந்து விட்டது” என்று நம்பிக்கையாகக் கூறினாள்.”நீங்கள் என்ன சொல்றீஙக, அது நடக்குமா? என்று குழந்தை ஆசை கொண்ட ஒரு குழந்தையாகக்
கேட்டாள் உதயா..கிளம்புங்க.,நான்
பேசறேன் உங்க வீடல்’ என்று அவள் கைகளைப் பிடித்து இழுக்காத
குறையாக எழுந்தாள் வான்மதி.
இருவரும் உதயாவின் வீட்டை அடைந்தனர். நடந்தவைகளை
வான்மதியே உதயாவின் மாமனார் மாமியாரிடமும் சுரேந்திரனிடமும் எடுத்துக் கூறினார். சுரேந்திரனும்
அவன் பெற்றோரும் நடந்ததைக் கேட்டு அதிர்ந்து போனார்கள். குழந்தை குறித்து சுரேந்திரனிடம்
தனித்துப் பேச வேண்டும் என்பதால் அது குறித்து எதுவும் பேசவில்லை. அன்றிரவு வான்மதியும்
உதயாவும் ஓர் அறையில் விடிய விடிய பேசிவிட்டு கண் அயர்ந்தனர். மறு நாள் புறப்பட்ட வான்மதி
சுரேந்திரனிடம் ‘உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்”என்றாள். அவளை வழியனுப்புவதாக வந்த சுரேந்திரனிடம், தான் குழந்தையைச் சுமந்து, பெற்றுத்த்ருவதாகக் கூறினாள். சில மணி நேரத்திற்குப் பிறகு அவனும்
சம்மதித்தான். இருவரும் மீண்டும் வீடு திரும்பினர்.
இது நல்ல முடிவு. இதைத்தானே நாங்கள் முன்னரே
கூறினோம்’ என்றுரைத்து
‘உடனடியாக ஏற்பாடு செய்கிறோம் என்றார் மகப்பேறு
மருத்துவத்தில் பல சாதனைகளைப் புரிந்து வரும் டாக்டர் பூமா சுரேஷ்.
உடனடியாக இருவருக்கும் எல்லா டெஸ்டுகளும்
எடுக்கப்பட்டன. மாதவிலக்கின் ஐந்தாம நாள் முதல் உதயாவுக்கு கருமுட்டையின் வளர்
நிலை ஸ்கேன் செய்து கண்டறியப் பட்டது. கருவின் கூடுதல் வளர்ச்சிக்கு மருந்தும்
இரண்டு மூன்று முறை ஊசிமூலம் கொடுக்கப்பட்டது. சரியாக பதினாறாம் நாள் கருமுட்டை
நன்கு வளர்ந்து உடையும் தருவாயில் கருப்பையிலிருந்து கருமுட்டையைச்
சோதனைக்குழாயில் சேமித்து, சுரேந்திரனின் விந்துவிலிருந்து விரைவாக நகரும்
தனமையுடைய வீரிய விந்தணுக்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு கருமுட்டையுடன்
இணைக்கப்பட்டது. சுரேந்திரன் உதயா தம்பதியினர் மகிழும் ஒரு நன்னாளில் வீரிய
விந்தணு கருமுட்டையின் வெளிச்சுவரைக் கிழித்துக்கொண்டு முன்னேறி கருவுடன் இணைந்து
உயிர்கொண்டது. உருவான உயிர்க்கரு வான்மதியின் கருப்பைக்குள் குடியேற்றப்பட்டது.
இனி எந்தப் பொறுப்பும் உதயா சுரேந்திரனுக்கு இல்லை. முழுப்பொறுப்பும் வான்மதியின்
வசம் வந்தடைந்தது. நாளொரு பரிசோதனை வான்மதியின் வயிற்றுக்கு நடந்தது. நாளொரு
மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழ்ந்தையும் வயிற்றில் வளர்ந்தது.
இதனிடையில் வான்மதி யாரோ! எவளோ? அவள்
குழந்தையைப் பெற்றுத்தர எவ்வளவு எதிர்ப்பார்ப்பாளோ?” என்ற கவலை சுரேந்திரனின்
பெற்றோருக்கு. எதிர் காலத்தில் குழந்தையின் மீது உரிமை கொண்டாமல் இருக்க வேண்டுமே
என்ற கவலை சுரேந்திரனுக்கு.. வான்மதி கன்னிப்பெண். அவளுக்கு நல்லபடியாகத் திருமணம்
செய்து வைக்க வேண்டுமே என்ற கவலை உதயாவுக்கு. இத்தனை கவலைகளுக்கு இடையில்
எந்தவிதக் கவலையுமில்லாமல் இருந்தாள் வான்மதி. அவளுக்கு ஆதவனின் ஆசையை
நிறைவெற்றுவதில் மகிழ்ச்சி. “எப்போதும் உதயா வான்மதி அருகிலேயே இருப்பாள். உணவு,
மருந்து, ஓய்வு எல்லாவற்றையும் அட்டவனைப்படி பார்த்துக்கொண்டாள் உதயா. வான்மதியைத்
தனிமையிலேயே விடமாட்டாள். வான்மதிக்கு யாருமற்ற தனிமை கிடைத்துவிட்டால் போதும்,
ஆதவனிடம் குழந்தையைப்பற்றி வாய்விட்டுப் பேசிக்கொண்டு இருப்பது வழக்கமாகி விட்டது.
குழந்தைக்காகப் பார்த்துப் பார்த்து உண்ணும்போது, ”ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
தன் பிள்ளை தானே வளரும்” என்று
கூறிக்கொண்டு ஏழைச்சிறுவர்களைக் கண்டால் ஆதவன் அவர்களுக்கு உதவிடும் இரக்கக்
குணத்தை எண்ணுவாள். “உன் விருப்பம் போலவே நான் ஊரார் பிள்ளையை ஊட்டி
வளர்க்கிறேண்டா” என்று
வாய்விட்டு சொல்லிக்கொண்டாள். அன்றொரு நாள் அப்படித்தான் ”குழந்தை வயிற்றில் சோம்பல்
முறிக்குமாம், கொட்டாவி விடுமாம், கால்களால் உதைக்குமாம். இவையெல்லாம் வயிற்றில்
கை வைத்துப் பார்த்தால் தெரியுமாமே. கணவன்கள் எல்லாம் தங்கள் மனைவியின் வயிற்றில்
கை வைத்துப் பார்த்து இதையெல்லாம் ரசிப்பார்களாம். இந்த அனுபவம் எனக்கு எப்ப
கிடைக்கும்?” என்று
ஆதவன் கேட்டது நினைவு வர, வான்மதி தன் கைகளை வயிற்றில் “ஆதவா தெரியுதா? கொழந்தை
ஒதக்கறது..இங்க கையை வச்சுப் பாரு..இங்கடா” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது உதயா வந்துவிட்டாள்.
வான்மதி எதை எதையோ சொல்லி மழுப்ப வேண்டியதாயிற்று.
மாதங்கள் சென்றன. டாக்டர் பூமா குறிப்பிட்ட
நாளில் மருத்துவமனை சென்றாள். அழகாக வெளியில் வந்தான் குட்டி சுரேந்திரன். உதயா,
சுரேந்திரன் இருவரும் ஆனந்த வெள்ளத்தில் தள்ளாடினர். வான்மதியும் தான். “ஆதவா,
எண்ணி பத்து மாசத்துல கொழந்த வேணும்னு
சொன்னியே, பார்த்த்க்கோடா.. நம்மளுதோ இல்லையோ. உன் வார்த்தையை நான் காப்பாத்திட்டேண்டா..” என்று மனதுக்குள்
பேசிக்கொண்டாள்.
பத்துமாத ஒப்பந்தம் முடிவுக்கு வந்து
விட்டது. இனி குழந்தைக்கும் வான்மதிக்கும் எந்த பந்தமும் இல்லை. வான்மதி வந்த
வழியே போக வேண்டியவள். கிளம்பியும் விட்டாள்.
”என் உயிரையும் காப்பாற்றி எனக்கென்று ஒரு உயிரையும் பெற்றெடுத்துக்
கொடுத்த நீ எங்களுடனே தங்க வேண்டும்..இது உன் அக்காவின் அன்புக்கட்டளை...அக்கா
நான் உனக்குத் திருமணம் செய்து வைப்பேன்... என்று கூறினாள். இதனைச் சற்றும்
எதிர்பார்க்காத வான்மதி நிதானமாக அமைதியான குரலில் “நெஞ்சில் ஆதவனைக் கணவனாகச்
சுமந்து விட்டேன். அவன் ஆசையையும் உங்கள் தேவையையும் நிறைவேற்ற ஒரு குழந்தையையும்
வயிற்றில் சுமந்து விட்டேன். இது ஒரு வகையில் அவனுக்குச் செய்த துரோகமாக
இருக்கலாம். ஆனால் என் மனசாட்சி அவன் மனசாட்சி அவன் ஆசையை நிறைவேற்றி வைப்பதில்
பாவமில்லை என்றுரைத்தது. அதன்படி நடந்தேன். ஆனால் இன்னொருவரை ஆதவன் இடத்தில்
வைத்துப் பார்க்கக்கூட என் மனம் ஒப்பாது. என்னை தயவு செய்து வற்புறுத்தாது போக
விடுங்கள்..” என்று
ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.
நாங்கள் கொடுக்கும் சிறு கைம்மாறையாவது
ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நோட்டுக் கட்டுக்கள் நிறைந்த பெட்டியை நீட்டினான்
சுரேந்திரன். வான்மதி அதனையும் பெற மறுத்து விட்டாள். “நீங்கள் செய்த உதவிக்கு
நாங்கள் என்று.. சுரேந்திரன் கூறும்போது இடை மறித்த வான்மதி ஒரு கணம்
சிந்தித்தாள். ஆதவனும் அவளும் எதிர்கால வாழ்க்கையை எண்ணி உருகி உருகி
காதலித்தவர்கள் மட்டுமல்ல. பல முடிவுகளையும் அப்போதே எடுத்தவன் அவன்.. அதற்கு
அப்போதே தலை அசைத்தவன் அவள்.
ஆதவன் கலைகளில் இலக்கியம், சிற்பம் போன்றவைகளைப்
போலவே ஓவியத்தையும் ரசித்தவன். ஒரு முறை திருவனந்தபுரம் மியூசியம் சென்றிருந்த
போது ஓவியர் ரவிவர்மாவின் ஓவியங்களைப் பார்த்து பிரமித்துப் போனான். அங்கிருந்த
ஓர் பெண் ஓவியத்தைக்காட்டி “என்ன கூர்மை அந்தப் பெண்ணின் பார்வையில். நாம்
எங்கிருந்து பார்த்தாலும் அது நம்மையே பார்ப்பது போல தெரிகிறது பார். “இங்கு வந்து
பார். இங்கு வந்து பார்” என்று
மாறி மாறி நின்று ரசித்தான். இதை வரைந்த கைகளுக்கு நாம் எதாவது பரிசு தர வேண்டுமே.
நமக்குப் பிறக்கும் குழந்தைக்கு ‘ரவிவர்மா’ என்று பெயர் பெயர் வைத்து
விடுவோமே?” என்று
கூறிய ஆதவனின் முடிவை நினைத்துக் கொண்டே, சுரேந்திரனிடம், “எனக்கு நீங்கள் ஏதாவது
செய்ய நினைத்தால், உங்கள் குழந்தைக்கு ’விவர்மன்”
என்று பெயர் வைப்பீர்களா?” என்று கெஞ்சலாகக் கேட்டாள். சுரேந்திரன் மகிழ்ச்சியாகத்
தலையாட்டி “நீங்களே உங்கள் வாயால் பெயர் வைத்துவிடுங்கள் என்றான். வான்மதி
குழந்தையின் காதில் ரவிவர்மா, ரவிவர்மா ரவிவர்மா என்று மூன்று முறை அழைத்து அவன்
நெற்றியில் ஒரு முத்தம் பதித்து விட்டு கிளம்பினாள்..நம் குழந்தைக்கு ரவி வர்மா
என்று பெயரும் வைத்து விட்டேன்...மற்றவற்றைப் பேச நேரில் வறேன் ஆதவா என்று மனதில்
சொல்லிக்கொண்டே கடலை நோக்கி நடந்தாள்.....
ஆதிரா...