“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

வெள்ளி, 21 ஜூன், 2013

இருளார் பழங்குடிப் பெண்களுடன் ஒரு நாள் - பகுதி 2

இது ஆழமாக மனத்தில் பதிந்த நினைவுகளின் சேமிப்பு. நிச்சயமாக நகைச்சுவைக்காக அல்ல. 




ஒரு பெண் இருளர் என்று தன் இனத்தைச் சொன்னாள். ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டேன். என் அந்தக் கேள்விக்குக் காரணம் இருளர் என்பவர்களை இறைவனுக்கு நிகரானவர்கள். உலக இருளைப் போக்குபவர்கள். இவர்களின் பாம்பு பிடிக்கும் தொழிலை மையப்படுத்தித் தமிழ்க்கடவுளர்கள் பாம்புடன் அடையாளப் படுத்தப் பட்டுள்ளனர் என்று படித்திருக்கிறேன். இந்த விபரங்கள் இவர்களுக்குத் தெரிந்திருக்கிறதா என்பதை அறியவே அவ்வினாவைத் தொடுத்தேன். ஆனால் விளைந்தது வேறு. 

“நாங்கள் நாகரிகம் தெரிந்து கொள்ளாமல், நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். எங்கள் வாழ்வு இருளில் இருப்பதால் இருளர் என்று பெயர்” என்றாள். 

“அப்பால் எவனோ செல்வான் – அவன் 
ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார்
எப்போதும் கைகட்டுவார் – இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார்” 

என்று பாரதி கூறுவது போல இவர்கள் தங்களைத் தாங்களே இப்படிச் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பழக்கப் பட்டுப் போனது அவர்கள் குற்றமா? அந்நிலையில் அவர்களைத் தள்ளியிருக்கும் சமுதாயத்தின் குற்றமா? இன்னும் அந்தச் சொற்கள் சம்மட்டியால் அடித்தாற் போல் என் நெஞ்சைத் தாக்கிக் கொண்டு இருக்கிறது.

எது எதற்கோ சட்ட வரம்புகள் கொண்டு வர வேண்டும் என்கின்றனர். இன்னும் அடிமைத் தொழிலாளர்கள் ஒழிந்தபாடில்லை. ஐ பி எல் சூதாட்டம் போன்றவற்றைக் கூடச் சட்ட வரம்பு படுத்த வேண்டும். சூதாடியேனும் பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்க வேண்டும் என்பதில் எல்லாம் அக்கரை காட்டும் உலகம் இது. இந்த உலகத்தில் வாழும் நம்மால் அவர்களை ஊக்கப் படுத்துவது போலப் பேசுவதைத் தவிர, பெரிதாக என்ன கிழித்து விட முடியும் என்று எண்ணியபடி பேச ஆரம்பித்தேன்.

“ஆதித் தமிழினம் நீங்கள்தான். மலைவாழ் மக்கள் நீங்கள். மலை உயரமானது. மழையைத் தருவது. முத்து, பவளம், சந்தனம் போன்றவை மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான மருத்துவ மூலிகைகள் நிறைந்தது. நீங்கள் அங்கு வசிப்பவர்கள். மலையைப் போல நீங்களும் உயர்ந்தவர்கள். 

அங்கு இருக்கும் மூலிகைகளை உங்களை விட்டால் வேறு யாராவது சரியாக இனம் கண்டு பிடிக்க முடியுமா? மருந்து வேண்டுமானால் எவராவது செய்யலாம். அடையாளம் கண்டு பிடித்து விட்டாலும் மருத்துவ மூலிகைகளைப் பாம்பு, பூரான்களுக்கு அஞ்சாமல் மற்றவர்களால் பறித்துக் கொண்டு வர முடியுமா? உங்களைப் போல பாம்புகளைப் பிடித்து அதன் நஞ்சை எடுக்கும் பணியெல்லாம் வேறு யாரால் செய்ய முடியும்? ஆகையால் உங்களைத் தாழ்த்திக்கொள்ளாதீர்கள். என்று கூறி என் மனத்தை நான் தேற்றிக்கொண்டேன். அப்படித்தான் என்னால் கூற முடிகிறது. ஏனென்றால் புரையோடிய புண்ணாய் இந்த எண்ணம் அவர்களின் ஆழ் மனத்தில் பதித்து வைக்கப் பட்டுள்ளது.

“இருளர் என்பதில் ‘ள’ என்னும் எழுத்தில் அருகில் ஒரு துணை எழுத்தைப் போடுங்கள். எப்படி வருகிறது? படித்துப் பாருங்கள். என்றேன். சற்று முழித்தது போல இருந்தது. “யாராவது ஒருவர் வந்து எழுதுகிறீர்களா?” என்றேன். ஏற்கனவே கரும்பலகை இருந்தது. உடனே சுண்ணக்கட்டியும் வந்தது. சற்றும் சிந்திக்காமல் ஒரு பெண் எழுந்து வந்து இரண்டு வார்த்தையும் எழுதிக்காட்டினாள். 

“மேல் உள்ளதற்கு என்ன பொருள் (இருளர்)? கீழே உள்ளதற்கு என்ன பொருள்((இருளார்)? அதாவது இருளர் என்பதற்கு என்ன பொருள்? இருளார் என்பதற்கு என்ன பொருள்?” என்று கேட்டேன். சில வினாடிகள்தான் சிந்தித்தார்கள். ‘மேடம் இருளார் என்றால் இருட்டில் வாழாதவர்’ என்று மகிழ்ச்சியாகக் கோரசாகச் சொன்னார்கள். அதை ரசித்த திரு. இராஜேந்திரன் அவர்கள் “கம்யூனிட்டி சர்டிபிகேட் அப்படி தரமாட்டார்களே மேடம்” என்றார் சிரித்துக் கொண்டே.. அவரது ஆழ் மனத்திலும் ஒரு வேளை இப்படிச் சாதிச் சான்றிதழ் கிடைத்தால் இனப் பெயரை மாற்றி விடலாம் என்று தோன்றியிருக்குமோ என்னவோ தெரியவில்லை. 

“முயற்சி செய்யுங்கள் சார்” என்று கூறிவிட்டு மாணவிகளிடம் “இனிமேல் யாராவது கேட்டால் எப்படி கூறுவீர்கள்” என்று கேட்டேன். ‘இருளார் என்று கூறுவோம்’ இதை உரக்கக் கூறினார்கள். 

இந்த எளியவர்களை இருளில் அடைத்து வைத்திருக்கும் சமுதாயத்தின் மீதும் சாதிய அமைப்பின் மீதும் கோபப் படுவதைத் தவிர நம்மால் என்ன செய்து விட முடியும்? ஆனாலும் அந்தக் குழந்தைகளின் மகிழ்ச்சியைப் பார்த்த போது... பிரமைதான் என்றாலும் அவர்களைக் கரம் பிடித்து ஒளி உலகை நோக்கிய ஒரு நூறாண்டு தூரத்திற்கு முன்னோக்கி அழைத்து வந்தது போன்ற மகிழ்ச்சி என் உள்ளத்தில். முன்னேறியது போன்ற மகிழ்ச்சி மாணவிகளின் உள்ளத்திலும் இருந்ததை அவர்களின் முக மலர்ச்சிக் காட்டிக் கொடுத்தது. 

பேசுவதில் அவர்களுக்குக் கொஞ்சம் கூட அச்சம் இல்லை. ஒரு வேகம் இருந்து. துடிப்பு இருந்தது. மிகவும் ஆர்வமாக அறிமுகம் செய்து கொண்டனர். அந்த மாணவிகளுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பு எடுக்கும் ஆசிரியைகள் இருவர் இருந்தனர். பி.ஏ. படித்தவகள். அவர்கள் நாங்களும்தான் சொல்ல வேண்டும் என்று மாணவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு சொன்னதில் கட்டறுத்துக் கொண்டு வெளியேறத் துடிக்கும் காற்றின் முயற்சியைப் பார்க்க முடிந்தது. இப்படித் துடிக்கும் ஓர் இனத்தை இருட்டறையில் வைக்கும் உலகம் வெளிச்சத்திற்கு எப்படி வர முடியும்? 

எனக்குக் கொடுக்கப் பட்டிருந்த ஆணை அவர்களுக்குப் பாலியல் வன்முறையில் இருந்து தங்களை எப்படிப் பாது காத்துக் கொள்வது, வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் சுத்தம், சுகாதாரம் ஆகியவைப் பற்றிய விழிப்புணர்வைக் கொடுக்க வேண்டும் என்பது. 

மாதவிடாய், தோன்றும் பருவம், அப்போது உடல், மன அளவில் ஏற்படும் மாற்றம்,. மாதவிடாய் சுழற்சி காலம். அப்போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார முறைகளைப் பற்றி பேசிக்கொண்டே வந்தேன். அப்போது யாரெல்லாம் துணி நேப்கின் பயன் படுத்துகிறீர்கள் என்றேன். நான்கைந்து பேர் கரம் உயர்த்தினர். என் கண்களில் கண்ணீரே வந்து விடும் போல இருந்தது. அது சுத்தமானதுதான். அதில் மாற்றுக்கருத்து எனக்கு இல்லை. ஆனால் நாகரிக வளர்ச்சியில் உலகம் என்ன வேகத்தில் போய்க் கொண்டு இருக்கிறது. இவர்கள் எந்த வேகத்தில் இருக்கிறார்கள். 

“ஒரு கனம் கண்ணயர்ந்தோம்; காத தூரம் பின்னடைந்தோம்” என்று கவிஞர் குலோத்துங்கன் கூறியது நினைவில் நிழலாடியது. நொடிக்கு நொடி மாறிக்கொண்டு இருக்கும் நாகரிக உலகில் இவர்கள் இன்னும் இப்படி இருப்பது எதனால்?

மாணவர்களுக்குப் பிஸ்கெட்டும் டீயும் வந்தது.. தேநீர்க் கென்று இடை வேளையெல்லாம் விட வில்லை. அவர்களும் கேட்கவில்லை. இதனிடையில் திரு இராஜேந்திரனும் திருமதி பூமாவும் அந்நிறுவன அலுவலகத்திற்குச் சென்றனர். அம்மாணவர்களிடம் விளக்கமாகவும் தெளிவாகவும் எல்லா விஷயத்தையும் பற்றி பேச இன்னும் வசதியாக இருந்தது. சற்றேறக் குறைய இரண்டரை மணி நேரம் அவர்களுடன் உரையாடினேன். முக்கியமாக நேப்கின் பயன் படுத்துவதை விட கடையில் இருந்து பருத்தியும் காஸ் பீசும் வாங்கி சொந்தமாக நேப்கின் தயாரித்து பயன் படுத்துவது சுகாதாரத்திற்கு நல்லது என்று கூறினேன். செய்முறையையும் விளக்கினேன். மற்ற நேப்கின்களின் தீங்கை எடுத்துக் கூறினேன். ஆஸ்பெஸ்டாஸ் (asbestos) டைஆக்ஸின் (dioxin) முதலிய மூலப்பொருள்களால் தயாராகும் நேப்கின்களால் கருப்பைப் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதையெல்லாம் எடுத்துக்கூறினேன். முக்கியமாகப் பாலியல் வன்முறையில் இருந்து அவர்களை எப்படி தற்காத்துக் கொள்வது என்று கூறினேன். 

அடுத்து சுத்தம் சுகாதாரம் பற்றியெல்லாம் பேசினோம். பிரஷால் பல் தேய்ப்பதாகப் பாதி பேர் கூறினார்கள். அதைக் கூறும்போது அவர்களுக்கு அவ்வளவு பெருமை. திரு ஜெயச்சந்திரனும் திருமதி பூமாவும் என்னிடம் கூறியிருந்த எல்லாவற்றையும் பற்றி அவர்களுடன் உரையாடினேன். அதற்குள் உணவு இடைவேளையும் வந்தது. மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்து சாப்பாட்டுக்குப் பிறகு மதியம் ஒவ்வொரு குழுவும் நாடகம்,, கவிதை, பாடல்,, ஆடல். கதை என்று ஏதேனும் ஐந்து நிகழ்ச்சிகள் தர வேண்டும் என்று கூறிவிட்டு சாப்பிட அனுப்பினோம். 
நாங்களும் சாப்பிடச் சென்றோம். சாப்பாட்டு மேசையில்……..!!!! 

என்னங்க இது? சாப்பாட்டு மேசையில் என்ன இருக்கும். சாப்பாடு தானே? சாப்பிடச் சென்றோம். சாப்பிடும்போது காலையில் விட்ட இடத்திலிருந்து தொடங்கி இருளர் பற்றிய, அவர்களது திருமணம், கலாச்சாரம் பற்றிய சில சுவையான தகவல்களைத் திரு. இராஜேந்திரன் சொன்னார். கேட்டுக் கொண்டெ சாப்பிட்டேன். சாப்பாடு பற்றி சொல்லவில்லையே என்று கேட்கற மாதிரி இருக்கே. முட்டை, சாம்பார், (சாம்பாரில் என்ன காய் என்று தெரியவில்லை) ரசம், அப்பளம், மிகவும் சுவையான மாங்காய் ஊறுகாய் என்று பரிமாறினார்கள்.

மீண்டும் மதிய நிகழ்ச்சியைப் பற்றிக் கூறும் முன்பு அந்நிறுவனத்தைப் பற்றிக் கொஞ்சம். இருளர் பழங்குடி பெண்கள் நல அமைப்பு என்னும் இந்த அமைப்பு திரு. இராம், திருமதி சாய் விட்டாகர் இணையரின் அரிய முயற்சியில் 1986 ல் தொடங்கப் பட்டது. ஐந்து கிராமங்களில் தொடங்கிய இவ்வமைப்பின் சேவை இப்போது 65 கிராமங்கள் வரையில் விரிவடைந்துள்ளது.

ஆதிவாசி நூலகம் என்ற நூலகம் ஒன்று உள்ளது. பழங்குடிகள், மருத்துவ மூலிகைகள், மூலிகை மருந்துகள் தயாரிக்கும் முறை, தாவரவியல் முதலியவை குறித்த சுமார் 6000 நூல்கள் அடங்கியது.

மூலிகை மருத்துவப் பிரிவு ஒன்று உள்ளது. இங்கு மூலிகைகள் பக்குவப் படுத்தப் பட்டு மருந்துகள் தயாரித்து புட்டிகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்குத் தயாராகின்றன. இது பற்றியும் சுவையான செய்தி ஒன்று பிறகு சொல்கிறேன்.

                                
விதைகள் சேகரித்து வைத்துள்ள விதைகள் வங்கி செயல்பட்டு வருகின்றது

கணினி, வலைத்தொடர்பு வசதிகளுடன் கூடிய இருளர் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புத் தகவல் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இருளர் இனப் பெண்களால் செய்யப்படும் கலைநயம் மிக்கக் கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பிரிவு ஒன்று இயங்கி வருகிறது. இதில் தயாரிக்கப் படும் கைவினைப் பொருள்கள் கண்காட்சிகள் நடத்தி விற்பனை செய்யப் படுகிறது.

காலையும் மாலையும் நடத்தல் (walk) அல்லது ஓடுதலே சுகாதாரமான வாழ்க்கைக்கு ஒரே தீர்வு என்று இக்காலத்தவர்கள் நம்புகின்றனர். ஹெர்பல் வாக் என்னும் சுமார் ஒன்றரை கி.மீ. சுற்றளவு உள்ள ஒரு மூலிகை நடை பாதை உள்ளது.

நர்சரி என்று சொல்லக்கூடிய எல்லாவகையான மூலிகை செடிகளின் கன்றுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு செடியிலும் பெயர் எழுதப்பட்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டுள்ளது இந்த நர்சரி. ஆகாயத் தாமரையைப் பார்த்ததும் எனக்கு ஒன்று வேண்டும் என்று கேட்டேன். கண்டிப்பாக விலை கொடுக்க வேண்டும் என்றார் பூமா. கொடுத்து வாங்கிக்கொள்கிறேன் என்றேன். ஏனென்றால் அது கண்களைக் கவர்ந்தது.

இந்திரா பிரியதர்ஷினி வ்ரிக்ஷமித்ரா புரஷ்கார் விருது, தேசிய விருது, பன்னாட்டு விருது, தேசிய சுற்றுலாத் துறையின் விருது, செங்கல்பட்டு மாவட்ட அரசு விருது என்று பல விருதுகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

அப்பாடா மூச்சு விடாமல் சொல்லி முடிச்சிட்டேன்னு நெனக்கிறேன். இன்னும் எதாவது நினைவுக்கு வந்தால் பின்னால் எழுதுகிறேன். மேலும் விபரங்களுக்கு http://www.itwwsindia.com/itwwsindia/default.aspx இந்த இணைய தளத்தைப் பார்க்கவும்

இப்ப சாப்பிட்டு முடிச்சிட்டு மீண்டும் மாணவர்களைக் காணப் பயிலரங்கத்திற்கு வந்தோம். மாணவர்களின் முகத்தில் ரகசியமாக பெரிய வேலையை முடித்த பாவனை இருந்தது. பெரிய வட்டமாக அமர்ந்திருந்தார்கள். நாங்கள் வரும்போது திட்டமிட்டது நான், திருமதி பூமா, திரு. இராஜேந்திரன் மூவரும் ஒவ்வொருவரும் அரை மணி நேரம் பேசுவது. பின்பு மாணவர்களின் ஆடல் பாடல்களுடன் அன்றைய பயிலரங்கை முடித்து விடுவது என்று.

ஆனால் அரங்கத்தின் உள் நுழைந்ததும் திருமதி பூமா குழந்தைகளின் முகத்தைக் கொண்டே அவர்களின் நாடியைப் பிடித்து விட்டார். முதலில் அவர்களின் நிகழ்ச்சியைப் பார்ப்போம் என்றார். அவ்வளவு ஆர்வமாக மாணவர்கள் அமர்ந்திருந்தனர். “எல்லோரும் தயாரா ?”என்றார். ஆயிரம் மலர்களின் பளிச் ஒவ்வொருவரின் முகத்திலும் ஒளிர்ந்தது. எத்தனை மணிக்கு முடிக்க வேண்டும் என்று பொறுப்பு ஆசிரியரைக் கேட்டார் திரு. இராஜேந்திரன். அவர் மூன்றரை மணிக்கு அனுப்ப வேண்டும் என்றார். அப்பொதே மணி இரண்டரை.

நான்கு அணியிலும் ஒவ்வொரு மாணவி தலைமை தாங்கி தன் அணியின் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.
ஒவ்வொரு அணியினரும் எழுச்சியான கவிதைகளைப் படித்துக் காட்டினர். பாடல்கள் பாடினர். அங்கு இருந்த ஒலிப்பேழையில் இருந்த தங்கள் இனக்குழு பாடலுக்கு ஒவ்வொரு அணியிலும் நான்கு பேர் கொண்ட குழு அல்லது இருவர் கொண்ட குழு வந்து நடனம் ஆடினர். ‘முட்டாள் முருகேசன்’ என்னும் அழகான நகைச்சுவை நாடகத்தில் முட்டாளாக நடித்த பெண் இன்னும் நினைவில் நிற்கிறாள். காலை பயிலரங்கில் என்ன பேசினோமோ அதனை அப்படியே ‘இளமையில் காதல் ஆபத்தில் முடியும்’ தலைப்பில் நடித்துக் காட்டினர்.

திரு. இராஜேந்திரன் குழந்தைகளை வாழ்த்திப்பேசினார். மாணவர்களிடம் பயிலரங்கம் அவர்களுக்குப் பயனுள்ளதா என்று கேட்டறிந்தார். அவர்களை இந்த பயிலரங்கத்திற்கு அழைத்து வர அவர்களின் பெற்றோர்களிடம் எவ்வளவு மன்றாட வேண்டியிருந்தது என்பதை விளக்கினார். இந்த பயிலரங்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பதை அவர்களின் பெற்றோர்களிடம் கூற வெண்டும் என்று கேட்டுக்கொண்டார். பயிலரங்கிற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து முடித்தார்.

நேரமின்மையால் மீண்டும் பேச என்னை அழைக்க வில்லை. ஆனால் நான் இரண்டு நிமிடம் அனுமதி பெற்று அவர்களின் திறமையைப் பாராட்டிவிட்டு வாழ்த்து சொல்லி அமர்ந்தேன். மீண்டும் டீ, பிஸ்கட்டுடன் பயிலரங்கம் முடிவடைந்தது. தனித்தனியாக மாணவிகள் எல்லோரிடமும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு கிளம்பினார்கள்.

திருவிழா முடிந்த கோயிலாக அவ்விடம் காட்சியளித்தது. கிளம்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த போது திரு இராஜேந்திரன் ஒவ்வொரு இடமாக எனக்குச் சுற்றிக் காண்பித்தார். ஹெர்பல் வாக்குக்கு மட்டும் போக முடியவில்லை. ஹெர்பல் நர்சரி, ஹெர்பல் மருத்துவ மூலிகைப் பிரிவு, மசாஜ் பிரிவு (இங்கு ஒரு சுவையான சம்பவம்), பேக்கிங்க் பிரிவு, விற்பனைப் பிரிவு, மாணவர்கள் வேலை வாய்ப்பு கவுன்சிலிங்க் பிரிவு எல்லாவற்றையும் ஆங்காங்கு ஒரு சுவையான சம்பவத்தைக் கூறியபடி சுற்றிக் காண்பித்தார்.

சான்றுக்கு ஒன்று உங்களுக்கும். செய்யான் என்பது பூராண் குடும்பத்தின் தாத்தாவாம். இது இது மனிதர்களின் வாசத்தை முகர்ந்து விட்டால் கடிக்காமல் விடாதாம். பார்த்த இடத்திலேயே அதனைக் கொன்று விட வேண்டுமாம். இல்லாவிட்டால் எங்கு இருந்தாலும் அந்த வாசத்தைக் கண்டறிந்து வந்து விடுமாம். இராஜேந்திரன் ஒரு முறை ஹெர்பல் வாக் சென்று கொண்டு இருக்கும் போது செய்யான் ஒன்றைப் பார்த்தாராம். இரண்டு மூன்று நாட்கள் கழித்து வீட்டில் அமர்ந்திருக்கும் போது பள பள என்று ஏதோ ஊர்ந்து கொண்டு இருந்ததாம். பார்த்தால் செய்யானாம். வாச்மேனை அழைத்து அடிக்கச் சொன்னாராம். வாச் மேன் வந்தவுடன் கேட்ட கேள்வி “இதுக்கு முன்னாடி இதை நீங்க பாத்தீங்களா சார்? “ஆமாம் வாக்கிங்க் போகும் போது பார்த்தேன்” என்றாராம். “அதுதான் சார் அது உங்களை விரட்டிட்டு வந்திருக்கு. விடாது சார் அது. பார்த்தா உடனே அடிச்சுக் கொன்னுடனு சார். இல்லாட்டா எவ்வளவு தூரம்னாலும் தேடிக்கண்டு பிடித்து வந்து விடும்” என்றாராம். எனக்குக் கந்த சஷ்டி கவசத்தில் ‘தேளும் பாம்பும் செய்யான் பூராண் கடிவிட விஷயங்கள் கடித் துயர் அங்கம் ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க” என்னும் வரிகள்தான் நினைவுக்கு வந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக