டிவிட்டர் குபேரன் என்று சொல்லும் அளவு டிவிட்டரில் சாதனை படைத்து வரும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ட்விட்டர் ஆதரவாளர்கள் (ஃபாலோயர்) எண்ணிக்கை பத்து லட்சத்து ஐம்பத்து ஆறாயிரத்து முந்நூற்று என்பத்து நான்கு. (10,56,384). இந்த சந்தோஷத்தில் அவர் விட்டிருக்கிற அறிக்கை இது. “10 லட்சம் ஆதரவாளர்கள் என்பது சாதாரண எண்ணிக்கையே. இது என் மீதுள்ள உங்களின் அன்பையும் ஆதரவையும் காட்டுகிறது. அதற்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துகொள்கிறேன்” என்று கூறியுள்ளார். இதெல்லாம் சாதாரனம். இதோட நிற்கவில்லை, “என்னையும் ட்விட்டரையும் பிரித்துப் பார்க்கவே முடியாது” என்று பகிராங்கமாக அறிக்கை விட்டிருக்கிறார்.
இவரையும் தூக்கிச் சாப்பிடும் லேடி தாதா ஒருவர் உள்ளார். டிவிட்டர் வரலாற்றில் சாதனை படைத்தவர் இவர். இவர் பெயர் லேடி காகா. இவரைப் பின் தொடர்பவர் எண்ணிக்கை 31,434,311
இப்படி அவரவர் தம் பெயரில் டிவிட்டர் கணக்கை ஆரம்பித்து செய்திகளைப் பரிமாறிக் கொள்ளுதல் ஒரு புறம். திரைப்பட நடிகர், நடிகைகள், அரசியல் பிரபலங்கள் பெயரில் டிவிட்டர்களைத் தொடங்கி மக்களை ஏமாற்றுவது மறுபுறம். சமீபத்தில் கோபம் உச்சிக்கேறி குதித்தவர்களில் த்ருஷா, சூர்யா என்று ஒரு பெரிய லிஸ்டே உள்ளது.
காது மடல் சூடாகி சட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ள அரசியல் தலைவர்களின் சரித்திர சம்பவங்களும் இதில் அடக்கம். அது சரி, போலி டிவிட்டர் கணக்கு எப்படி சாத்தியம் என்று கேக்கிறீர்களா? வலையுலகில் எல்லாம் சாத்தியமே.
பிரபலங்களின் பெயரில் டிவிட்டரில் ஒரு கணக்குத் தொடங்கி இணையத்தில் கிடைக்கும் அவரது புகைப்படங்களை, அவ்வப்போது நடைபெறும் விழா புகைப்படங்களை, தொலைக்காட்சி நேர்காணல் வீடியோக்களை (யூ டியூப்) என்று எல்லாவற்றையும் அந்த டிவிட்டர் பக்கத்தில் தரவேற்றம் செய்து விடுவார்கள். பார்ப்பவர்கள் பிரபலங்கள்தான் என்று நினைத்து நட்பு விண்ணப்பம் கொடுப்பார்கள், ஃபாலோயராகத் தொடர்வார்கள் இத்யாதி இத்யாதி.
அந்த வகையில் இப்போது அதிகமாகப் பேசப்பட்ட போலி டிவிட்டர்களில் மிகவும் ரசனையானது தமிழக முன்னாள் முதல்வர் இந்நாள் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பெயரில் தொடங்கப் பெற்ற டிவிட்டர். போலியாகத் தொடங்கப் பெற்ற அந்த டிவிட்டரில் பொன்னெழுத்தால் பொறிக்கப் பட்டுள்ள வாசகம்தான் ரொம்ப ரொம்ப முக்கியமானது. “புரட்சித்தலைவியின் ஆசியுடன் எனது டிவிட்டர் புரட்சியை ஆரம்பிக்கிறேன்” என்று பதிவிடப்பட்டுள்ளதாம். இந்த டிவிட்டரில் முதல்வரின் நிகழ்ச்சிகள் அப்டேட் செய்யப்படுகிறதாம். அதிமுகவின் அனைத்து எம்.எல்.ஏக்களும் இந்த டிவிட்டரில் இணைய இருப்பதால் பொதுமக்கள் தங்கள் குறைகளை டிவிட்டரில் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளதாம்.
டிவிட்டர் சிலருக்குப் பணமும் ஈட்டிக் கொடுத்துள்ளது. அமெரிக்காவில், குழைந்தைகளைப் பார்த்துக் கொள்ளூம் ஒரு பெண்மணி, நம்ம மொழியில் சொன்னால் ஆயா வேலை பார்க்கும் ஒரு பெண்மணி கிரிக்கெட் மட்டையைக் கூட கண்டிராத ஒரு பெண்மணி கிரிக்கெட் என்றால் என்ன என்று கேட்கும் ஒரு பெண்மணிக்கு டிவிட்டர் உலகளாவிய புகழையும் கோடிகளில் பணத்தையும் ஈட்டித் தந்துள்ளது ஒரு விந்தை. அமெரிக்காவைச் சார்ந்த இவர், தன் காதலன் அன்போடு அழைக்கும் ‘ஹாஷஸ்’ என்னும் பெயரில் குழந்தை நலன் குறித்து டிவிட்டரில் எழுந்தி வந்தார். இங்கிலாந்து ஆஸ்திரேலிய மட்டைப்பந்து போட்டியின் போது ‘தி ஹாஷஸ்’ என்னும் டிவிட்டர் கணக்கில் இந்தத் தொடர் பற்றிய கருத்துகளைப் பொதுமக்கள் எழுதி வந்தனர். அந்தச் சூதாட்டத்தில் தி ஹாஷஸ் என்ற கணக்கைப் பயன் படுத்த அதன் குறிச்சொல்லான ஹாஷ் (#) என்பதைப் பயன்படுத்தினர். சிலர் # இந்தக் குறிக்குப் பதிலாக பழக்கதோஷத்தில் எப்போதும் டேக் செய்யும்போது பயன் படுத்துவது போல @ என்னும் குறியைப் பயன்படுத்தி விட்டனர். அவை ஹாஷஸ் என்னும் அந்த்ப் பெண்மண்யின் டிவிட்டருக்குச் சென்று விட்டன.
அவளுக்கும் ஆஷஸ் தொடருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பொறுமையாகக் பதில் கூறிக்கொண்டு வந்த அவர், ”கிரிக்கெட் மட்டை என்றால் என்ன?” என்றும் அப்பாவியாக ஒரு கேள்வியும் கேட்டு விட்டார். இந்தக் கேள்வி அவரது வாழ்க்கையை மாற்றி அமைத்தது. ஒரு விமான நிறுவனம் அவரை ஆஸ்திரேலியாவௌக்கு இலவசமாக அழைத்துச் சென்று கிரிக்கெட் பார்க்க வைத்தது. வோடோபோன் நிறுவனம் தொடரில் கலந்து கொள்ளும் டிக்கெட், மற்றும் இதரச் செலவுகளை ஏற்றுக் கொண்டது. அவரை ஒரு முன்னணி நாளிதழ் தேடிப்பிடித்து புகழுச்சியில் ஏற்றியது. இப்படியெல்லாம் கூட டிவிட்டர் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டச் செய்துள்ளது. பாவம் சிலரைச் சிறைக்குள்ளும் தள்ளியுள்ளது.
2006 ல் டிவிட்டர் (www.twitter.com) உருவானது. இப்போது முன்னணி 50 வலைத்தளங்களில் இதுவும் இடம்பெற்றுள்ளது. இணையத்தின் எஸ்.எம்.எஸ் (SMS) என்று அழைக்கப் படும் இதை உருவாக்கி உலவ விட்டவர் ஜேக் டோர்சே. இதன் தலைமை அதிகாரி இவான் வில்லியம்ஸ் என்பவர். இதனோட தலைமை அலுவலகம் கலிஃபோர்னியாவில் உள்ள சான்ஃப்ரான்சிஸ்கோவில் உள்ளது.
ஓடியோ என்னும் ஒரு அமைப்பின் பணியாளர்களின் குழுமத்திற்காக(Group) டிவிட்டர் நிறுவப்பட்டது. அதுவோ பின்னர் பொதுச் சேவைத் தளமாக முன்னேற்றம் கண்டது
2007ல் நடந்த சவுத் பை சவுத்வெஸ்ட் என்னும் விழாவில் டிவிட்டரின் செயல்பாடுகளே அந்நிறுவனத்தை மூன்றாவது இடத்திற்கு ஏற்றி விட்டது. 2009 ஆம் ஆண்டு 50 மில்லியனாக இருந்த இதன் வருமானம் 2013ல் $111 மில்லியனாக இருக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல 2009 ல் 25 மில்லியன் பயணர்களைக் கொண்டிருந்த டிவிட்டர் 2013ல் ஒரு பில்லியனை எட்டும் என்றும் அறிவித்துள்ளனர்.
ஃபேஸ் புக் போல டிவிட்டரில் விளம்பரங்கள் வெளிப்படையாக இடம்பெறுவது இல்லை. ஆனால் தம் நண்பர்களுக்கு அனுப்புவது போல விளம்பரப் படுத்துவதை இது தடுப்பதில்லை. வலைத்தளங்களிலோ அல்லது வலைப்பூவிலோ விளம்பரங்களுக்கு அனுமதி கொடுத்து பணம் ஈட்டும் வசதி போல பணம் ஈட்டும் வசதி டிவிட்டரில் இல்லை.
மனிதர்களின் வேலைகளை சுலபமாக்கி கொண்டே போகிறது சோஷியல் மீடியா. இதற்கு உதாரணமாக டிவிட்டர் குறுக்கு வழிகளைக் (ஷாட் கட்) கண்டு பிடித்து அறிமுகப் படுத்தியுள்ளது. இதில் இன்னும் எளிய முறையில் ட்வீட் செய்ய முடியும். அதோடு, மவுஸ் பக்கம் கையை கொண்டு போகாத அளவுக்கு மிக சுலபமாக அனைத்தையும் செய்யலாம்.
ட்வீட்களுக்கு விருப்பம் (ஃபேவரைட்) கொடுக்க வேண்டும் என்றால் விசைப்பலகையில் (கீ போர்டில்) F என்ற எழுத்தினை அழுத்தினால் போதும். இதேபோன்று, ட்வீட்டுகளுக்கு பதில் எழுத வேண்டுமானால் கீ போர்டில் ஆங்கில எழுத்து ஆர்(R)பட்டனை அழுத்தினால், பதில் அனுப்ப வேண்டிய டப்பா திறக்கும்.இது போல் 22 குறுக்கு வழிகளை உருவாக்கி உள்ளது டிவிட்டர். இந்த ஷாட்கட்களை மனத்தில் பதிய வைத்துவிட்டால் பின்பற்றுவது எளிது மட்டுமல்ல. பிடித்தும் போய்விடும்.
140 எழுத்துகள் தான் வரைமுறை என்று இருந்தாலும் இதையும் மீறி அளவில்லாமல் டிவீட் செய்யும் (டிவிட்டரில் எழுத) வசதியையும் ஒரு வலைத்தளம் உருவாக்கித் தந்துள்ளது. எழுத வேண்டியதை எழுதி இந்தத் தளத்தில் டிவிட்டருக்கு என்று எழுதி அனுப்பி விட்டால் டிவிட்டரில் அது பதிவு செய்து விடும். செய்தியின் எந்த பகுதி முதலில் அல்லது கடைசியில் தோன்ற வேண்டும் என்று குறிப்பிடும் கூடுதல் வசதியும் இதில் இருக்கிறது
தி டெய்லி ஷோ என்னும் இதழ் 2009 பிப். 24ல் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களில் ஒபாமாவின் உரையைக் கேட்டவர்களை விட டிவிட்டரைப் பயன் படுத்தியவர்களே அதிகம் என்று கூறியுள்ளது. ஒபாமா தன் கட்சியின் தேர்தல் விளம்பரத்திற்கு டிவிட்டரைப் பயன் படுத்தியது அனைவரும் அறிந்ததே. இன்று இந்திய அரசியலிலும் தேர்தல் விளம்பரங்களுக்கு டிவிட்டர் பயன்படுத்த படுகிறது.
2009ல் டிவிட்டரில் ஒபாமாவுக்கு எதிராக எழுதியவர் கைது செய்யப் பட்டார். இப்போதும்"பால் தாக்கரே மரணத்திற்கான கடை அடைப்பின் பின்னணி மரியாதை அல்ல. பயமே காரணம்" எனச் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த ஷஹீன் தடா மற்றும் ரேணு சீனிவாசன் என்னும் பெண்கள் சிவசேனையர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கதை பரவலாக எல்லா இடங்களிலும் தொடர்கிறது. தகவல் தொழில்நுடபச் சட்டத்தில் திருத்தம் வராத வரை இப்படி எடுத்ததற்கெல்லாம் வாரண்ட், அரஸ்ட் என்னு கதை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66 A யில் மாற்றம் செய்ய வேண்டி அ. மாக்ஸ் தலைமையில் வழக்கும் தொடர்ப் பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.
டிவிட்டர் மூலம் தன்மனிதத் தாக்குதல்களும் தொடர்ந்து புகார்கொடுப்பதும் சிறை செல்வதும் என பல நிகழ்ந்த வண்ணமே இருப்பதைப் பார்க்கும் போது ”டிவிட்டர் ஒரு ஆற்றலுள்ள தீவிரவாதக் கருவி” என்று அமெரிக்க இராணுவ இண்டெலிஜென்ஸ் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
மேலதிக தகவலாக, நாசா டிவிட்டர் வழியாக விண்வெளி வீரர்களுக்கு தகவல்பரிமாற்றம் செய்து வருகின்றது என்பது. மற்றொன்று 2008ல் பெயரிடப்படாத ஒரு விண்வெளி ஓடம் தரையிறங்கிய போது உடனுக்குடன் தகவல் அனுப்பியதை ஒட்டி டிவிட்டருக்கு 2009ல் “நாசா சார்ட்டி விருது” வழங்கி சிறப்பித்துள்ளது.
செய்திகள், முக்கிய விஷயங்கள் பரிமாற்றம், தன் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளல், அர்த்தமில்லாத வெட்டி அரட்டை, ஸ்பாம் என்னும் குறுஞ்செய்தி அனுப்புதல் என்று ஆறு பிரிவுகளாக டிவிட்டரின் சேவையைப் பிரித்தாலும் வெட்டி அரட்டையே அதிக இடம் பிடித்துள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அறிவியல் என்னும் அலாவுதின் அற்புத விளக்கின் உரசுதலில் வெளிப்படும் ஒவ்வொரு அதிசய பூதத்தையும் வெட்டியாகப் பயன்படுத்தாமல் ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தினால் ஆக்கம் நமக்கும் அறிவியலுக்கும். இல்லாவிட்டால் அழிவே எஞ்சும்! துன்பமே விஞ்சும்!
(இக்கட்டுரை டிசம்பர் 2012 சோழநாடு மாத இதழில் வெளியான என் கட்டுரை. நன்றி சோழநாடு)