“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

மருத்துவமா நகைச்சுவையா...




எங்களால் முடிஞ்சதைச் செஞ்சிருக்கோம்; இனிமே இறைவன் கையிலதான் இருக்கு

இன்னும் 24 மணிநேரம் கழிந்தால்தான் சொல்ல முடியும் 

ஐ ஏம் வெரி சாரி..

இட் ஈஸ் எ மெடிக்கல் மிராக்கல்

“இதற்கு முன் இது போல கேஸ் மெடிக்கல் ஹிஸ்டிரியிலயே இல்ல.

திரைப்படம் உச்ச கட்டத்தை எட்டும் போது ஒரு வெள்ளைக் கோட்டு ஆசாமி ஆபரேஷன் தியேட்டரில் இருந்து கையுரைகளைக் கழற்றிக்கொண்டே வந்து, மேலே பார்த்துக்கொண்டு சோகமான மேற்கண்ட சொற்களில் ஒன்றிரண்டை உதிர்த்துவிட்டுப் போவார். நமக்கோ வருத்தத்திற்குப் பதில் அடக்கமுடியாமல் சிரிப்பே வரும். இது ஊமைப்படம் பேசும் படமாக மாறியதில் இருந்து திரி டி ஃபோர் டி என்று எத்தனையோ முன்னேற்றங்களைக் கண்ட திரைப்பட வரலாற்றின் தொன்று தொட்டு இன்று வரை காணப்படும் மாறாத இலக்கணம்..
(இதில் இந்த ஐ ஏம் வெரி சாரி ரொம்ப ஸ்பெஷல். கீழே பார்த்துக்கொண்டு சொன்னால் ஒரு பொருள். மேலே பார்த்துக்கொண்டு சொன்னால் ஒரு பொருள். முன்னது நோயாளியை முடித்து விட்டுச் சொல்வது. பின்னது இனிமேல்தான் முடிக்கப் போகிறேன் மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள் என்றுரைப்பது)

இதில் இன்னும் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களின் வீட்டுக்குச் சென்று ஒரு நோயாளியைப் பார்க்கும்போதும் இந்த இன்ஸெண்ட் சொற்களுக்குச் சொந்தக்காரர்கள் வெள்ளைக் கோட், கழுத்தில் ஸ்டெதாஸ் கோப், கையில் பிரீஃப் கேஸ், முகத்தில் ஒரு சோக ரேகை.... வாயில் சோக டயலாக். பாவங்க இந்த டாக்டர்கள். சொந்த வீட்டிலாவது சாதாரனமாக வேஷ்டி, கைலி, அல்லது இரவு உடை அணிய விடுவார்களா இந்தத் திரைப்படக்காரர்கள் என்று தெரியவில்லை.

கடிகாரத்தை வயிற்றில் வைத்துத் தைத்துவிட்டு அல்லாடும் டாக்டர், மூளை ஆபரேஷனைத் மாற்றி செய்து விட்டு தவிக்கும் டாகடர் என்று நகைக்கொடைக்கு விருந்தாகப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களைச் சற்றும் நகைச்சுவை உணர்வே இல்லாதவர்கள் என்ற ஒரு படிமமாக உருவாக்கிய புண்ணியம் இந்த தமிழ்த்திரைப்படத்திற்குச் சொந்தமானது.

எனக்குத்தெரிந்த ஒரு எலும்பு மருத்துவர் அஷோக் நகரில் இருக்கிறார். இந்த திரைப்பட டாக்டர் இலக்கணத்திற்கு நேர்மாறானவர் அவர். சிரிக்காமல் பேசுவது அரிது. அதுமட்டுமல்ல எப்பேர்பட்ட தீர்க்க முடியாத மோசமான நோயாளியிடம் கூட சொல்ல வேண்டியதை அவர்கள் மனதில் ஏறுவது போல கூறுவார்.  இதுதாங்க ஆனா நீங்க இதை ஈசியா சமாளித்துக் கொள்ளலாம் என்று நகைச்சுவை ததும்ப கூறி நோயாளியின் மனதில் கவலையே இல்லாமல் சுமையை ஏற்றி வைப்பார். சுமக்க தைரியத்தையும் கொடுப்பார்.

என் அருகாமை வீட்டுப் பெண்மணி ஒருவர் முழங்கால் முட்டி வலியால் மிகவும் அவதிப்பட்டர். நடக்க முடியாத நிலை. அப்பெண்மணியை இவரிடம் அழைத்துச் சென்றேன். இது ஆபரேஷன் செய்தால் மட்டுமெ சரியாகும். ஆனால் ஆபரேஷன் செய்து கொள்ள நீங்கள் என்ன வாஜ்பேயா? என்றார் பாருங்கள். நாங்கள் அதிர்ந்தே போனோம். பிறகு அதற்குத் தேவையான பலம் உங்க பர்ஸுக்கும் இல்ல. எங்க நர்ஸுக்கும் இல்ல என்றார். அதிர்ந்து போய் என்ன கூறுகிறீர்கள் என்று கேட்டால் இல்லம்மா அது அதிகம் செலவு ஆகும் ஆபரேஷன். உஙக உடலில் அந்த அறுவைச் சிகிச்சையை தாங்கும் அளவு சக்தி இல்லை. அதனால் வாஜ்பேயி மாதிரி ஆபரேஷன் செய்து கொள்ளாதீங்க..ஆனா அவர் மாதிரி வாழுங்க இனிமேல் என்றார். அப்போதும் புரியாமல் விழித்த போது, பேசாமல் இனிமேல் வாஜ்பேயிமாதிரி வீட்டில் ஒரு சேர் போட்டு உட்கார்ந்து உங்கள் கணவரைச் சமைத்துப் போடச் சொல்லுங்கள் என்று சிரித்துக் கொண்டே சொன்னார். பிறகு அருமையாக விளக்கினார். குறைந்த செல்வு மாத்திரை மருந்துகளில் நிவாரணம் அளித்தார்.  

வெ:ள்ளைக் கோட்டுப் போட்ட ஆங்கில மருத்த்வர்களை விடுங்கள். நம் பண்டைய தமிழ் மருத்துவர்கள்  எப்படி இருந்தார்கள்.? அழுக்குப் பிடித்த காவி வேட்டியும் ஜடா முடியும் அவர்களைச்சுற்றி நான்கு இலை தழைகளும் என்று இருந்தனர். இவர்களின் மொழி குறிப்பு மொழி. பிறர் அறிய எதையும் கூற விரும்பாத இவர்கள் அதற்குக் கூறிய காரணம் எவரும் மருத்துவத்தை அரைகுறையாகக் கற்றுத் தவறாக மருத்துவத்தைச் செய்து விடக்கூடாது என்பதாம். இதன் உள்நோக்கம் வேறு. வழி வழியாக இவர்களின் பரம்பரைக்கு மட்டும் இம்மருத்துவம் சொந்தம் என்று கருதியதே. அது போகட்டும். இவர்களிடம் நகைச்சுவை உணர்வு இருந்ததா? இல்லை பிடி சாபம் மருத்துவர்களா? கீழ் கொடுத்துள்ள ஒரு பாடலைப் பார்த்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள். வயிற்றுக்கடுப்பால் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் ஆகடிய காவியம் கூறும் மருந்து இது.

ஆனைக்கன்றில் ஒரு பிடியும் அசுரர் விரோதி இளம் பிஞ்சும்
கானக் குதிரை மேற்றோலும் காலில் செருப்பாய் மாட்டியதும்
தாயைக் கொன்றான் தனிச் சாற்றில் தயங்கிக் காய்ச்சிக் குடிப்பீரேல்
மானே பொருதும் விழியாளே வடுகும் தமிழும் குணமாமே

ஆனை - அத்தி
அசுரர் விரோதி அரக்கர்களை அழித்த முருகன், இங்கு முருகன் என்பது  முருங்கை.
கானக்குதிரை - மாம்பட்டை
காலில் செருப்பு - செருப்புப் பாததில் தட்டுப்படுவதால் செருப்படி
தாயைக் கொன்றான் - வாழை
வடுகும் (தெலுகு) தமிழும் - தமிழ் பேசும் தெலுங்கர்கள்

விளக்கம; அத்திப்பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, மாம்பட்டை, செருப்படி, வாழைச்சாறு ஆகியவை வயிற்றுக்கடுப்பு நோய்க்கு மருந்தாம். வடுகும் தமிழும் என்பது வயிற்றுக்கடுப்பின் போது வயிற்று வலியின் போது முனகும் முனகல் தமிழ் வடுகு மொழி போல இருக்குமாம். இது நகைச்சுவைக்காக இட்ட சொல். இது போல பல மருத்துவப் பாடல்கள் இருக்கிறது..மற்றொன்று பார்ப்போமா?

ஆய்க் கல்லை அள்ளி
அதிலே கொஞ்சம் உள்ளி
இயத்தைக் கொஞ்சம் கிள்ளி
     வைத்து உருக்க வள்ளி
பொன்னாங் கண்ணி பொடுதலே
     தம்பி கூனன் தலையிலே
சிவனை வைத்துச் சுடுங்கடி
     கடையில் கொண்டு வில்லுங்கடி


தம்பி கூனன் தலையிலே சிவனை வைத்துச் சுடுவதா? எப்படி?
தம்பி கூனன் என்பது அயப்பொடி என்ற ஒரு உலோகப்பொடியைக்குறிக்கும். சிவன் என்பது குறிப்பு மொழியாக இரசமணியைக் குறிக்கும்.
ஆயக்கல் என்பது;  ஆயன் என்றால் திருமால். திருமால் அணியும் அரிதாரம். (நாமக்கட்டி)
இயம் என்றால் இரும்பு. இவை எல்லாம் சேர்த்து செய்யப்படும் மருந்து எது? இவ்ற்றைச் சேர்த்து இதனை தயாரித்து கடைக்குக் கொண்டு சென்று விற்பதாமே.

     பொன் மனச்செம்மல், புரட்சித் தலைவர் என்றவுடன் ஒரு விலையுர்ந்த மருந்தின் பெயர் நமக்கு நினைவு வருமே. அந்தப் பொன்னான மேனியின் தக தக ஜொலிப்புக்குக் காரணமானது. அதேதான். அதேதான்.  தங்க பஸ்பம். அதன் செய்முறையை விளக்கும் பாடல் இது. நாமக்கட்டி, வெள்ளைப்பூண்டு, இரும்பு, வெள்ளி, அயப்பொடி, இரசம் (பாதரசம்) ஆகியவற்றைச் சேர்த்து உருக்கினால் ஒரு பதமான நிலையில் இரும்பு பொன்னாக மாறுமாம். தயாரிக்கும் போது சற்றுக் கவனம். தங்கக் கம்பியைத் தயாரிக்கிறேன் என்று வேறு கம்பியை எண்ணும் நிலை வந்து விடவ் போகிறது. சரி நீங்கள் விரும்பினால் அடுத்த இதழிலும் நகைச்சுவைத் தொடரும்.... 



நன்றி குமுதம் ஹெல்த்.













6 கருத்துகள்:

  1. ஆய்க் கல்லை அள்ளி
    அதிலே கொஞ்சம் உள்ளி
    இயத்தைக் கொஞ்சம் கிள்ளி
    வைத்து உருக்க வள்ளி
    பொன்னாங் கண்ணி பொடுதலே
    தம்பி கூனன் தலையிலே
    சிவனை வைத்துச் சுடுங்கடி
    கடையில் கொண்டு வில்லுங்கடி

    ithukku real-a ithuaan arththama? good information, not much joke.. keep on. thanks.

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் ஆதிரன் இதற்கு இதுதான் பொருள். தங்கள் காலடிக்கு, கருத்துக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  3. வித்தியாசமான முறையில் அற்புதமான தகவல்கள் ஆதிரா ஸ்பெசல்.

    பதிலளிநீக்கு
  4. அன்பு நூருல்,
    அன்புடன் வந்து அருமையாகக் கருத்துப் பகிர்ந்தமைக்கு ஸ்பெஷல் நன்றி நூருல்.

    பதிலளிநீக்கு