“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

செவ்வாய், 22 ஜூன், 2010

வெற்றிக்கு வழி செய்யும் டிஸ்லெக்சியா


ஒரு மிகப்பிரபலமான பள்ளியில் ஒரு மாணவன் தமிழ் பாடத்தைப் படிக்காமலே ஓட்டிக்கொண்டு இருந்தான். அவனைப் படிக்கக் கூறினால் மிஸ் நான் டிஸ்லெக்சியான்னு சர்டிஃபிகேட் அபளை பண்ணியிருக்கேன். அது வந்துடும். அதனால் தமிழ் பாடம் எனக்கு தேர்வு எழுதத் தேவையில்லை. தேரிவில் இருந்து விலக்கு கிடைத்து விடும் என்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. விளக்கமாகக் கூறு என்றேன், எனக்கு இந்தப் பாடத்தில் இஷ்டமில்லை மிஸ். அதனால் மருத்துவருக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து சர்ட்டிஃபிகேட் வாங்கி விட்டேன். அரசுக்கு அனுப்பி உள்ளேன். விரைவில் ஆர்டர் வந்து விடும். என்று சிரித்துக் கொண்டே கூறினான். இப்படியும் ஒரு மாணவனா என்று சிரித்த அதே நேரத்தில் அது என்ன டிஸ்லெக்சியா எனச் சிந்திக்கும் வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுத்த அந்த மாணவனுக்கு மனதால் நன்றி சொல்லியபடி அதனைப் பற்றி அறிந்து கொண்டேன்.

. இக்காலத்தில் பல பள்ளிகளில மிக அதிகமாகப் பயன்பட்டுக் கொண்டுள்ள சொல் டிஸ்லெக்சியா. முக்கியமாக செல்வந்தர்களின் குழ்ந்தைகளிடம் இக்குறைபாடு அதிகமாகக் காணப்படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. (நான் பார்த்த வரையில்) சரி டிஸ்லெக்சியா என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

மூளை இரண்டு பகுதிகளாகப் பிளவு பட்டு இருக்கும். இடது மூளைக்கும் வலது மூளைக்கும் இடையில் சரியாகத் தொடர்பு இல்லாத நிலைதான் இந்த டிஸ்லெக்சியா குறைபாட்டை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக வலக்கண் பார்க்கும் காட்சி மூளையின் இடப்புறம் பதிவாகிறது. இடக்கண் பார்க்கும் காட்சி மூளையின் வலப்புறம் பதிவாகிறது. இந்தத் தொடர்பு விஷயத்தில் தொடர்பு கெடும்போது பார்க்கின்ற காட்சியின் ஒட்டுமொத்தத் தோற்றம் மூளைக்குப் போய்ச்சேர்வது இல்லை. இதனால் குழந்தைகள் வாசிப்பதில், எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டு திறமை குறைகிறது. டிஸ்லெக்சியா உள்ள மாணவன் ஆசிரியர் ஒன்றை எழுதினால் அதைத் தப்பும் தவறுமாகத் தன் நோட்டில் எழுதுவான். இவ்வாறு வார்த்தைகளைத் தவறு தவறாக எழுதுவதை வார்த்தைக் குருடு (Word Blindness) என்று கூறுவர்.
டிஸ்லெக்சியா எப்படி ஏற்படுகிறது?

பொதுவாகப் படித்தல் எழுதுதலைக் கட்டுப்படுத்தும் பகுதியில் ஏற்பட்ட அதிர்ச்சி அல்லது காயம் காரணமாக ஏற்படும் குறைபாடுகளை ட்ருமாட்டிக் டிஸ்லெக்சியா (Traumatic Dyslexia) என்பர். இது குழந்தைகளிடம் அதிகம் காணப்படுவது இல்லை.

அடுத்து மேற்சொன்னது போல பிறவியிலேயே மூளையின் இடப்பாகத்தில் (Cerebral Cortex) ஏற்படும் குறைபாட்டினால் அப்பகுதி சரியாகச் செயல்படுவது இல்லை. இது பரம்பரையாக ஜீன்களின் மூலம் கடத்தப்படுகிறது. இந்தப் பரம்பரைக் (Hereditary) குறைபாடு, முதல்நிலை டிஸ்லெக்சியா (Primary Dyslexia) என்று அழைக்கப்படுகிற்து. இக்குறைபாடு ஆண் பெண் இருபாலரிடமும் காணப்படும் பொதுவான குறைபாடு ஆகும். இக்குறைபாடு உள்ளவர்கள் வயதானாலும் படிப்பது, எழுதுவதைச் சிரமமாகவே உணர்வர்.

இவை இரண்டும் இல்லாமல் ஹார்மோன்களின் சுரப்பின் காரணமாக உருவாவது இரண்டாம் நிலை டிஸ்லெக்சியா (Secondary Dyslexia). இதுவே பொதுவாக சிறுவர்களிடம் அதிகம் காணலாகும் குறைபாடு. இது ஒரு குறிப்பிட்ட வயதிலும், பயிற்சியினாலும் குறையக்கூடியது. இது பத்தில் ஒரு குழந்தைக்கு முழுவதும் இல்லையென்றாலும் சிறிதளவாவது உள்ளதாகக் கணக்கெடுப்புக் கூறுகிறது.

இரண்டம் நிலை டிஸ்லெக்சியா பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறிவது எப்படி?

· பார்க்க நல்ல புத்திசாலி போலவும் நல்ல பேச்சுத்திறமை உடையவராகவும் இருக்கக்கூடும். ஆனால் அவரின் வகுப்பு மாணவர்களைப்போல எழுதப் படிக்க முடியாமல் தடுமாறுவார்கள்
· சோமபேறி என்றோ, இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்றோ, உன்னால் முடியும் நீ உழைப்பதில்லை என்றோ கூறும் வண்ணம் இருப்பார்கள்..
· இவர்களுள் சிலர் நல்ல பொது அறிவு உள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் எந்த தேர்வும் நன்றாக எழுதமாட்டார்கள். அதே சமயம் கேள்விகள் கேட்டால் நன்றாகப் பதில் சொல்லுவார்கள்.
· சிலர் முட்டாள்களைப் போல முகம் வைத்துக்கொண்டும், தாழ்வு மனப்பான்மை உடையவராகவும், பெரும்பாலும் தனியே இருப்பதை விரும்புவராகவும் இருப்பார்கள்.
· .குறிப்பிட்டவற்றில் மட்டும் நல்ல தனித்திறமை கொண்டிருப்பார்கள். பாடுவது, ஓவியம் வரைவது போன்ற கலைகளில் அல்லது கருவிகளைக் (Mechanism) கையாளுவதில் திறமை பெற்றவர்களாக இருப்பார்கள்.
· . பொதுவாகப் பகற்கனவு காண்பவராக இருப்பார்கள்.
· படம் பார்த்துச் செயல்களை விளக்குவது, தானாகவே செய்யும் சோதனைகள் இவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.
· பல சமயங்களில் படிக்கும்போது தலை வலிப்பதாகவும், தலை சுற்றுவதாகவும் கூறுவார்கள்..
· கண்களில் குறை இருப்பதாகக் கூறுவார்கள். ஆனால் கண்களில் ஒரு குறையும் இருக்காது..
· எழுத்துக்கள், எண்கள், சொற்கள் இவற்றில் பல குழப்பங்கள் இருக்கும்.
· .திரும்பத் திரும்ப வரும் சொற்களைப் படிக்கும்போதும், எழுதும்போதும் குழப்பம், எழுத்துக்களை மாற்றிப் படித்தல் போன்றவை இவர்களிடம் சாதாரண நிகழ்வுகளாக இருக்கும். சற்றுப் பெரிய தொடர் அமைக்க மிகவும் சிரமப்படுவர்.
· இவர்களால் அதிக நேரம் கவணத்தை ஒரு இடத்தில் வைத்திருக்க முடியாது.
· சொல்லாததைச் சொன்னதாகவோ சில சமயங்களில் உணர்வர்..
· சின்னச் சின்ன ஒலிகள் கூட இவர்களின் கவணத்தைக் சிதைத்து விடக்கூடியதாக இருக்கும்.
· வரி வரியாக விரல் வைத்து வாசிப்பது, எழுதுகோலை ஒரு பக்கமாகச் சாய்த்துப் பிடித்து எழுதுவது, பேனாவைச் செங்குத்தாக பிடித்துக் கொண்டு எழுதுவது, இரண்டு விரலால் மட்டும் எழுதுகோலைப் பிடித்து எழுதுவது, பார்த்து எழுதும்போது தப்பும் தவறுமாக எழுதுவது போன்றவைகளால் இவர்களுக்கு டிஸ்லெக்சியா இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள குழந்தைகளிடம் படிப்பு மட்டும் ஏன் தடைபடுகிறது என்று அறிந்து கொள்ள வேண்டாமா? அதை அறிந்து கொள்ளும் முன்பு படிப்பது அல்லது கற்றுக்கொள்வது என்பது இயல்பாக எப்படி நடக்கின்றது என்று தெரிந்து கொள்வது அவசியம்.

· கற்றுக்கொள்வது என்பது பல நிலைகளில் நிகழ்கிறது.. ஒலிகள் இணைந்து வார்த்தைகளை உருவாக்குகிறது என்பதை உணர்தல்.
· வடிவங்களைக் கவனித்து எழுத்துக்களை அறிதல்.
· ஒலிகளுக்கும் எழுத்துக்களுக்குமான தொடர்பை உணர்ந்துகொள்ளுதல்.
· ஒலிகளையும் எழுத்துக்களையும் இணைத்து சொற்களாக்குதல்.
· வரிகளில் அமைந்துள்ள ஒழுங்கை அறிந்து ஒரு வரியைப் படித்த பின் அதற்குஅடுத்த வரி, பின் அடுத்த வரி என்று வரிசைபடுத்தி படிக்க இயலுதல்।
· முன்பே அறிந்து கொண்டவற்றையும் புதிதாகப் பார்ப்பவற்றையும் தொடர்பு படுத்திப் புரிந்து கொள்ளுதல்.
· பார்த்தவை, படித்தவற்றை நினைவில் நிறுத்துதல்.
· புதிய கருத்துப் படிவங்கள், உருவங்கள், உத்திக்ளை உருவாக்குதல்.

இவை அனைத்தும் சரிவர நடக்கும்போதுதான் நாம் படிப்பது, எழுதுவது ஆகியவை நடைபெறும். இவற்றில் சிலவற்றில் ஏதேனும் சிலவற்றைச் செய்ய முடியவில்லை என்றாலும் அச்செயல்பாட்டின் ஒழுங்கு சீர் குலைந்து விடும். படிப்பது, எழுதுவது, நினைவில் நிறுத்துவது இவற்றில் குறைபாடு உண்டாகும். டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இவற்றில் முதல் இரண்டு அல்லது மூன்று நிலைகளிலேயே தடுமாற்றம் ஏற்பட்டு விடுகிறது. அவர்களால் ஒலி வடிவ எழுத்துக்களையும், வரி வடிவ எழுத்துக்களையும் உருவாக்குவதையும், ஒலி. வரி வடிவ எழுத்துக்களில் உள்ள தொடர்புகளை உணர்வதிலும் குழப்பம் ஏற்படுவதுடன், பல ஆணைகளை ஒன்றாகக் கொடுக்கும்போது அவர்களால் அவற்றைச் சரிவர உணர முடிவதில்லை.
குழந்தைகள் படிக்கையில் அம்மா என்பதை என்றா எழுத்துடன் முதலில் ம் ஐக்கூட்டி பின்பு மா வைக் கூட்டி படிப்பர். பின்பு போகப்போக எழுத்துக்கள் மனதில் பதிந்து விடும். இது போலவே போகப் போக ஏற்கனவே பார்த்துப் பழகிய சொற்களும் மனத்தில் பதிந்து விடும். இதனால் எழுத்துக்களைக் கூட்டாமலே குழந்தைகளால் படிக்க முடிந்து விடும். ஆனால் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இந்த இயல்பான செயலைச் செய்ய முடியாமல் தவிப்பர். உதாரணமாக மாடு என்பது டுமா வாகவும் வாசி என்பது சிவா வாகவும் இவர்களுக்கு மாறி காட்சியளிக்கும். இதனால் இதனால் இவர்கள் மிக மெதுவாகவும் ஏகப்பட்ட தவறுகளுடனும் படிப்பார்கள்.


இதனைக் கண்டறிவது எப்படி? வரி வரியாக விரல் வைத்து வாசிப்பது, எழுதுகோலை ஒரு பக்கமாகச் சாய்த்துப் பிடித்து எழுதுவது, பேனாவைச் செங்குத்தாக பிடித்துக் கொண்டு எழுதுவது, இரண்டு விரலால் மட்டும் எழுதுகோலைப் பிடித்து எழுதுவது, பார்த்து எழுதும்போது தப்பும் தவறுமாக எழுதுவது போன்றவை டிஸ்லெக்சியா இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

டிஸ்லெக்சியா வந்துவிட்டதே என்று அதிகமாகக் கவலைப் படத் தேவையில்லை. இதில் ஒரு நல்ல அம்சமும் உள்ளது டிஸ்லெக்சியாவால்தான் நான் இவ்வாறு பெருமைப் பட முடிந்தது என்று சொல்லி இன்புறும் காலமும் உண்டாகலாம். யார் கண்டது? அப்படிப் பெருமைப் பட்டவ்ர்க்ளைப் பற்றிய் பெரிய பட்டியலைப் பார்த்தீர்களானல் எனக்கும் டிஸ்லெக்சியா வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணத்தோன்றும்.

http://australianpolitics.com/images/people/einstein.jpg

இவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியுமா? நோபல் பரிசுக்குச் சொந்தக்காரர் ஆயிற்றே. முதலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டினைப் பற்றிப் பார்ப்போம். இவர் ஒன்பது வயது வரை எதையும் படிக்கும் திறனின்றி இருந்தாராம். ஒரு திடீர் திருப்பமாகப் பனிரெண்டாம் வயதில் கணிதத்திலும், இயற்பியலிலும் சக்கைப் போடு போட ஆரம்பித்தாராம்.
இவர் ஐந்து வயதாக இருந்தபோது, இவரது தந்தையார் இவருக்கு ஒரு சட்டைப்பையில் வைக்கக்கூடிய திசையறி கருவி ஒன்றைக் காட்டினார். அந்த வயதிலேயே அவர் ஒன்றுமற்ற வெளியில் ஏதோ ஒன்று காந்த ஊசியில் தாக்கம் ஏற்படுத்துவதைப் புரிந்துகொண்டார். அவர் மாதிரி உருக்களையும் இயந்திரக் கருவிகளையும், பொழுதுபோக்காகச் செய்துவந்தார்.. இவருடைய உறவினரிருவர் அறிவியல், கணிதம் தொடர்பான நூல்களையும், ஆலோசனைகளையும் கொடுத்து, அவரை ஊக்குவித்தார்களாம்..

http://www.biografiasyvidas.com/monografia/edison/fotos/edison_laboratorio_west.jpg

இவரைத் தெரியாதவர்களும் இருக்க முடியாதே.
தனது பெயரில் சாதனை அளவான ஆயிரத்து தொண்ணூற்று மூன்று மின்சாரப் பொருள்களை கண்டறிந்து பதிவு செய்தார்। இத்துனை உரிமங்களைப் பதிவு செய்த எடிசன், பெரிமளவு கண்டு பிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். பள்ளிகளிலும் சரி வெளியிடங்களிலும் சரி அறிவியல் கண்டுபிடிப்பு பற்றி எழும் வினாக்களுக்கு, முக்கியாமாக ஒரு பொருளைக் கண்டுபிடித்தவர் யார் என்று நமக்குத் தெரியாவிட்டால் நாம் என்ன செய்வோம். ஒற்றையா ரெட்டையா கூடப் போட மாட்டோம். கண்களை மூடிக்கொண்டு குருட்டாம் போக்கில் தாமஸ் ஆல்வா எடிசன் என்று கூறிவிடுவோம்.. அது சரியான விடை என்று பாராட்டும் பெற்று விடுவோம். அப்படி இன்று காண்கின்ற பொருள்களில் பெரும்பானமையான் பொருள்களுக்குச் சொந்தக்காரராக இருக்கும் தாமஸ் ஆல்வா எடிசனும் இந்த டிஸ்லெக்சியாவுக்கு ஒருவாறு அல்வா கொடுத்தவரே.

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2d/President_Woodrow_Wilson_portrait_December_2_1912.jpg/245px-President_Woodrow_Wilson_portrait_December_2_1912.jpg

.மேலே இருப்பவர் அமெரிக்க ஜனாதிபதியாகவும், மிகச்சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்த தாமஸ் உட்ரோ வில்சன். தமது பதினோராம் வயது வரை ஒரு எழுததைக் கூட வாசிக்க முடியாதவராக இருந்தார் என்றால் நம்மால் நம்ப் முடிகிறதா? அதுதான் உண்மை.
..இதைப் படித்தவுடன் மேலே கூறியதைப் போல நமக்கும் டிஸ்லெக்சியா வந்தால் பரவாயில்லை என்று எண்ணத் தோன்று கிறதல்லவா? ஆனால் எல்லோரும் இப்படி உயர்ந்து விட முடியுமா? இத்தகு குறைபாடு ஒன்றைப் பெற்றவர்கள் தம் வாழ்வில் சாதித்து எப்படி? ஒரு கதைவை அடைத்தால் இன்னொரு கதவைத் திறந்து விடுவான் என்பது போல இறைவனின் படைப்பில் ஒரு திறன் குறைந்தால் அதனையும் மிஞ்சி வெற்றி பெறும் அளவுக்கு வேறு ஒரு திறன் நிறைந்து இருக்கும். அதனாலேயே இன்று ஊனமுற்றவர்களை மாற்றுத்திறனாளி என்று கூறத் தொடங்கியுள்ளோம். அது எத்துனைச் சரியானது. மேலே கூறிய இவர்களையும் மாற்றுத்திறனாளி என்று அழைப்பதில் தவறு இல்லையே!
.
இவர்களிடம் முயற்சியும் தொடர்ந்து எதையும் செய்யக்கூடிய பயிற்சி மனப்பானமையும் இருந்ததே இவர்கள் எளிதில் இக்குறைபாட்டை வெற்றி கொண்டமைக்கும், உலகையே வெற்றி கொண்ட்மைக்கும் இது முற்றிலும் தனிப்பட்ட முயற்சியால் கிடைத்த வெற்றி. இதனைத் திறன் (INDUVIDUAL EFFORTS) எனலாம். குறைபாடு எதுவாக இருந்தாலும் அதனை போக்கடித்து. வெற்றி கொள்வது அவரவர் கையில்தான் இருக்கிறது.
ஒன்று கண்டிப்பாகப் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு சிறு குறைபாடே அன்றி பெரிய நோய் அல்ல. எனவே இருந்தாலும் குழந்தைகளால் வாழ்வில் வெற்றி பெற முடியும்.. அதற்கு பெற்றோரும், ஆசிரியர்களும் பெரிதளவில் உறுதுணையாக இருக்க வேண்டும். நல்ல முறையான அணுகுமுறையும், சிறந்த பயிற்சியும் அம்மாணவர்களுக்குக் கொடுத்து உதவுவது இவர்களின் கடமையே.
குறைபாடு எதுவாக இருந்தாலும் அதனைப் போக்கடித்து. வெற்றி கொள்வது அவரவர் கையில்தான் இருக்கிறது என்றாலும் உதவவேண்டியது பெற்றோர், ஆசிரியர்களின் கடமை ஆகும். ஏனெனில் சிறந்த வெற்றிக்கு அடிப்படையாய் இருப்பவை 1% உள்ளூக்கமும் 99% விடாமுயற்சியுடன் கூடிய பயிற்சியுமே ஆகும்.. இதனை வள்ளுவர்,
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாளாது உஞற்று பவர்
சோர்வு இல்லாமலலும் தன் முயற்சியில் குறைவு இல்லாமலும் முயல்கின்றவர் தம் முயற்சிக்கு இடையூறாக வரும் ஊழ்வினையையும் புறமுதுகிட்டு ஓடச்செய்து விடுவர். அப்படி இருக்க, டிஸ்லெக்சியா என்ன அம்னீஷியா என்ன... எல்லாம் புறமுதுகுக் காட்டி ஓடுவது உறுதி...ஆகையால் ஆசிரியர்களே! பெற்றோர்களே! உதவுங்கள் வருங்கால் இந்தியாவுக்கு. ஆக்குங்கள் டிஸ்லெக்சியா குறைபாட்டுக் குழந்தைகளை, ஒரு எடிசனாக், ஒரு ஐன்ஸ்டினாக, ஒரு உட்ரோ வில்சனாக!!!


திங்கள், 21 ஜூன், 2010

நெற்றியில் ஒளிரும் நீல விளக்கு.....பிட்யூட்டரி....

http://www.mens-health-naturally.com/images/brain.gif
பெரிய அறிவாளிகளை மண்டைச்சுரப்பு அதிகம் உள்ளவர்கள் என்று அடிக்கடி கூறக்கேட்டு இருப்போம. அது என்ன மண்டைச் சுரப்பு என்று சிந்தித்துப்பார்த்தால் நம் முன்னோர்கள் எந்தச் சொல்லையும் பொருளற்று பயன்படுத்தவில்லை என்பது புலனாகும். பொதுவாக மனித உடலில் எண்ண்ற்ற சுரப்பிகள் (Glands) காணலாகின்றன. இவற்றில் சுரக்கும் நீர் ஒரு குழாய வழி எடுத்துச்செல்லப்பட்டு இரத்ததில் கலக்கப் படுகிறது.. இதே போல மனித உடலில் வேறு பல சுரப்பிகளும் உள்ளன. இவற்றில் சுரக்கும் ஹார்மோன்கள் சாதாரண சுரப்பிகள் போலன்றி நேரடியாக இரத்தத்தில் கலக்கும் தன்மையை உடையன. இதனை நாளமில்ல சுரப்பிகள் (Endocrine Gland) என்பர். இந்த நாளமில்லா சுரப்பிகளில் சில சுரப்பிகள் ஒரு ஹார்மோனையும் சில சுரப்பிகள் இரு ஹார்மோன்களையும் இன்னும் சில மூன்று நான்கு ஹார்மோன்களையும் சுரக்கின்றன. இந்த சுரப்பிகளுக்கெல்லாம் தலைமை சுரப்பியாகத் திகழ்வது பிட்யூட்டரி சுரப்பி. (Pituitary Gland). இது இளஞ்சிவப்பும் சாமபல் நிறமும் கலந்த ஒரு நீல நிறத்தில் காணப்படும். மற்ற நாளமில்ல சுரப்பிகளையெல்லாம் இது ஆள்கிறது. அவைகளை இயக்குகிறது. மற்ற சுரப்பிகளின் குறைகளை நிவர்த்தி செய்கிறது. இதுவே தசைகள் எலும்புகள், பற்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குக் காரணமாகிறது. இது கரியமில வாயு, புரதச்சத்து, கொழுப்புச்சத்துக் குறைபாட்டினைக் கட்டுப்படுத்துகிறது. இது இடம்பெற்றுள்ள இடம் எண்சான் உடலுக்குப் பிரதானமாகத் திகழும் தலையில். இதனை,
உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்
வைத்த விளக்கும் எரியுதடி

அச்சுள்ள விளக்கு வாலையடி அவி

யாமலெரியுது வாலைப் பெண்ணே

http://www.ualberta.ca/~somji/pituitary_3.GIF

என்று கொங்கணசித்தர் எத்துனை அழகாகப் பாடுகிறார். தலை உச்சிக்கு நேராக உள் நாக்கிற்கு மேலாக ஒரு விளக்கு எரிந்து கொண்டு இருக்கிறது. அச்சு என்றால் பீடம் என்று பொருள். இச்சொல் தலைமை பீடத்தை வகிக்கும் சுரப்பி பிட்யூட்டரி என்பதை விளக்கும். அது அவியாமல் எரியும் விளக்கு என்றும் கூறுவார்.
இந்த பிட்யூட்டரி சுரப்பியின் குறைபாட்டினால் வருவது டிராஃபிஸம் (
Dwarfism) என்றழைக்கப்படும் மிகக் குள்ளமான உருவம். இது குறைவாகச் சுரக்கும் போது இக்குள்ள நோய் ஏற்படுகிறது.

இதன் மிகுதிப்பாட்டில் வருவதே ஜெய்ஜாண்டிஸம் (Gigantism) எனறழைக்கப்படும் அதிக வளர்ச்சி.. இது அதிகமாகச் சுரக்கும் போது அளவுக்கு அதிகமான உடல் உயரம், வளர்ச்சி ஏற்படுகிறது.

குமரப்பருவத்தில் இளைஞர்கள் கிடு கிடுவென அகோரமாக வளர்ச்சி அடைந்து காணாப்படுவர். இதன் குறைபாட்டாலோ மிகுதிப்பாட்டாலோ வரும் மிக முக்கியமான ஒரு விளைவே இந்த அகோர வளர்ச்சியான அக்ரோமகலி (Acromegaly) எனப்படும் குமரப்பருவ குறைபாடு..

அதுமட்டுமல்ல பார்க்கும் சக்தி, கேட்கும் திறன், நினைவாற்றல், தன்னம்பிக்கை இவற்றையும் இச்சுரப்பியே காக்கிறது. இச்சுரப்பி நன்கு வேலை செய்வதால் மூளையின் திறனும் அதிகரிக்கிறது.

இந்த சுரப்பியின் சிறப்பான வேலைத்திறத்தினால் உருவாவவர்களே அறிவிற்சிறந்த மேதைகளும், அறிவியல் அறிஞர்களும், ஞானிகாளும், கவிஞர்களும் என்போர்.
இது எப்போது பாதிக்கப்படுகிறது? மற்ற உறுப்புகளைப் போன்றே அதிர்ச்சி, விபத்து, பிரசவம் ஆகியவற்றினால் பாதிக்கப் படுகிறது. இவ்வாறு இந்த பிட்யூட்டர் பாதிக்கப் படும்போது இதன் அருகில் மூளையில் அமைந்துள்ள மற்றொரு சுரப்பியான பினியல் சுரப்பியும் பாதிக்கப்படுகின்றன. எவ்வாறு பிட்யூட்டரியின் சிறப்பான் வேலையின் போது அறிஞர்களும் சான்றோர்களும் அவதரிக்கின்றார்களோ அதே போல இச்சுரப்பிகளின் குறைபாட்டின் காரணமாக மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறந்து விடுகிறது..

இந்த பிட்யூட்டரியைப் பற்றி தெரிந்து கொள்ளும் போது சற்றேறக்குறைய அதன் அருகில் உள்ள பினியல் சுரப்பியையும் பற்றி தெரிந்து கொள்வது அவசியம் ஆகிறது. இதில் என்ன ஆச்சரியம் என்றால், இச்சுரப்பியின் செயல்பாடுகள் பல இன்னும் மருத்துவ ஆய்வுக்கே புலனாகாதப் புதிர்களாக உள்ளன. இதுவும் மற்ற சுரப்பிகளை கட்டுப் படுத்துகிறது.

இந்தச் சுரப்பியால் விளையும் நன்மை. யாதெனில், இச்சுரப்பி சோடியம், பொட்டாசியம், ஆகிய உப்புகளின் அளவைச் சீராக வைக்கிறது. இச்சுரப்பியும் நன்கு வேலை செய்யும் போது அறிவு, நற்குணம், தன்னம்பிக்கை ஆகிய மூன்றும் அதிகரிக்குமாம். மனம் எதற்கும் கலங்காது இருக்குமாம். இதன் காரணமாகவே நாடு யோகிகளையும் ஞானிகளையும் பெற்றுள்ளது.இது சரிவர இயங்காவிட்டால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இச்சுரப்பி இயக்கக் குறைவால் சோடியம், பொட்டாசியம் ஆகியவற்றின் அளவு அதிகமாகி கை, கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. உள்ளங்கால் உள்ளங்கை பகுதிகளில் அதிக வியர்வை உண்டாகிறது.இதைத்தவிர தைராய்டு சுரப்பி, பாரா தைராய்டு சுரப்பி, தைமஸ் சுரப்பி, அட்ரினல் சுரப்பி, கனையம், சினைப்பைகள், விதைப்பைக்ள் என்று முக்கியமான எட்டு சுரப்பிகள் உள்ளன. இவற்றுள் சினைப்பையும் விதைப்பையும் சுரப்பிக்ள் என்று அழைக்கப்படாவிட்டாலும் இவை பிட்யூட்டரியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இச்சுரப்பிகளைப் போன்றவையே.
http://www.biologie.uni-freiburg.de/data/bio1/varga/images/pituitary.jpg

மூச்சுக்குழாயின் இரு பக்கங்களில் இருக்கும் தைராய்டு சுரப்பு தைராக்சின் என்ற திரவத்தைச் (ஹார்மோன்)சுரக்கிறது. இது அதிகமாகச் சுரக்கும் போது எண்ணம், சொல், செயல் எல்லாம் மந்தமாக இருக்கும். அதிகமாக சுரக்கும் போது (ஹைபர் தைராய்டு) எல்லாமே முந்தைய செயல்களுக்கு எதிர் மாறாக இருக்கும். இது அதிகமாக வேலை செய்யாத போது இதில் உள்ள அயோடின் குறைபாட்டால் காய்டர் (Goitre) எனப்படும் முன் கழுத்துக் கழலை தோன்றுகிறது.
பாரா தைராக்சின் எனப்படுவது, தைராய்டு சுரப்பிகளின் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டாக மொத்தம் நான்கு சுரப்பிகள் உள்ளன. இது கால்சியம், இரத்தம் ஆகியவற்றின் உருவாக்கத்திற்குப் பெரிதும் உதவுகின்றது.

மார்புப் பகுதியில் மூச்சுக்குழாய இரண்டாகப் பிரியும் இடத்தில் உள்ளது தைமஸ் சுரப்பி. இது குழ்ந்தைகளின் நோய் தடுப்புச் சக்திக்கு பெரிதும் உதவுகிறது.

சிறு நீரகங்களின் தலைப் ப்குதியில் பக்கத்திற்கு ஒன்றாக உள்ள இரு சுரப்பிகள் அட்ரினல் சுரப்பி எனப்படும். கோபம், பயம் போன்ற உணர்ச்சிகளின் அடிப்படையில் இதன் சுரப்பு விகிதம் கூட கூறைய நிகழ்கிறது. இது கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு உதவுகிறது.

இன்சுலின் என்னும் திரவததைச் சுரக்கும் கணையம் குறைந்தால் ஹைபர்க்ளைசீமியா (
Hyper glycamia) என்ற நீரிழிவு நோயும், இதன் சுரப்பு அதிகரித்தால் இரத்த அழுத்தமும் மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலியும் ஏற்படுகிறது.

பெண்களின் கருப்பையின் இருபுறமும் இரண்டு சினைப்பைகள் உள்ளன. இது முக்கியமாக தலைமை சுரப்பியான பிட்யூட்டரியின் ஆளுமையில் உள்ளன.

விந்துககளை உற்பத்தி செய்யும் விதைப்பைகள் மகப்பேற்றுக்குக் காரணமாவதுடன் செல்கள், எழும்பு மஜ்ஜை., நரம்புகள், விந்தணுக்கள் ஆகியவற்றை சீர் செய்கின்றன. இவை இரண்டும் சுரப்பிகளுடன் சேக்கப்படாவிட்டாலும் இவையும் பிட்யூட்டரியின் ஆளுமையில் உள்ளன.

நெற்றியிலே தயங்குகின்ற நீலமாம் விளக்கினை
உற்றுணர்ந்து பாராடா உன்னுள் இருந்த சோதியைப்

பத்தியிலே தொடர்ந்தவர் பரமயம் அதானவர்

அத்தலத்து இருந்த பேர்கள் அவர் எனக்கு நாதரே
http://t1.gstatic.com/images?q=tbn:8XUtubkRpc7BEM:http://www2.niddk.nih.gov/NR/rdonlyres/9DBA8E39-C852-48A5-B84F-6DDCAF32869A/0/DF4.jpg
என்று சிவ வாக்கியார் உரைப்பது எதனை என்று நினைக்கின்றீர்கள்? நெற்றியிலே இருக்கின்ற நீல விளக்கு இந்த பிட்யூட்டரி என்னும் சுரப்பிதான். ஒளிர்விடுகின்ற (தயங்குகின்ற) அதனை உற்று பார்த்து நினைவுகளை ஒரு தலையாக அடக்கி உணர்ந்து பார்த்து, உள்ளே நிறைந்து இருக்கின்ற சோதிமயமான இறைவனைத் தியானம் செய்பவர் எங்கும் பரவி இருக்கின்ற தேவ நிலையை அடையலாம். தியானம் என்கிற மூச்சுப் பயிற்சியின் மூலம் இந்த பிட்யூட்டரி சுரப்பியை நன்கு செயலாற்ற வைக்கலாம். இதன் செயல்பாடு உடலுக்கு மட்டுமன்றி அறிவு வளம் பெற்ற சான்றோராக ஞானியாக ஆக்கும் என்று மேலே கண்டோம்

மாறல்: இத்துனை செயல்பாடுகளை நிகழ்த்தும் சுரப்பிகளின் தலைமை தலையில் தான் உள்ளது. அந்த நீலமாம் விளக்குதான் பிட்யூட்டரி என்பது நாம் அறிந்தது. இந்த தலைமையைச் சீராகச் சுரக்கச் செய்ய தியானத்தால் முடியும். அதாவது குண்டலினி யோகம் அல்லது சரப்பயிற்சி என்பர் அக்காலத்தில். இரு புருவ மத்தியில் பார்வையையும் மனதையும் ஒருநிலையில் வைப்பதால் இம்முறையைச் செய்யலாம். முறையான தியானம் நாளமில்லா சுரப்பிகளின் தலைமைச் சுரப்பியான பிட்யூட்டரியை சரிவர வேலை செய்ய வைக்கும் என்பதே. தலைமை சரிவர இயங்கினால் மற்றவையும் தத்தம் வேலைகளைச் செவ்வனே செய்து நம்மை உடல் அளவிலும் உள்ளத்து அளவிலும் செம்மையாக வைக்கும்.


ஞாயிறு, 20 ஜூன், 2010

தலைமுடியை வளர்க்கும் விரல் நகங்கள்....







மேலே இருக்கிற படத்தைப் பார்த்தவுடனே புரிந்து இருக்குமே நான் எதைப்பற்றி சொல்லப்போகிறேன் என்று. வழுக்கை பிரச்சனையே பலருக்கு வாழ்க்கை பிரச்சனையாக மாறிவிடுகிறது. முடி இது இலையில் இருந்தால அசிங்கம். தலையில் இலையில் இல்லாவிட்டால் அசிங்கம். மயிர் நீப்பின் உயிர் வாழா கவரி மான் என்பார்கள். இதிலிருந்து மயிர் உதிரும் பிரச்சனை மான்களுக்கும் இருந்துள்ளது.. அது மட்டுமல்ல, மானே மயிர் உதிர்ந்தால் உயிரைப் போக்கிக் கொள்ள நினைக்கிறது என்றால் அழகுணர்ச்சி மிக்க மனிதனின் நிலை எப்படிச் சொல்வது? திருமணச் சந்தையில் ஆண்கள் பலர் விலை போகாததற்கு முடியும் முக்கிய காரணமாக அமைந்து உள்ளது . கல்யாண மாப்பிள்ளைக்கு உள்மாடி காலியாக இருந்தாலும் ஒத்துக்கொள்ளும் பெண்கள் மேல் மாடி காலி என்றால் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். கண்டிப்பாக ரிஜக்ட்தான். பலர் முடி முடி வளர்க்கிறேன் பேர்வழி என்று விளம்பரங்களில் ஒன்று வந்து விடக் கூடாது. அததனையையும் பயன் படுத்துவதுடன் வேர், இலை, தழை என்று உலகில் கிடைக்கும் அத்தனை உரங்களையும் போட்டு மயிர்ப்பயிர் வளர்க்க அரும்பாடு பட்டு கடைசியில் இருக்கிற ஒன்றிரண்டையும் இழந்து மனம் வெதும்பி வாழ்கின்றனர். இத்துடன் முடிந்ததா? இப்போது நிலத்தைக் கீறிப் பயிர் ந்டுவது போல தலையையும் கீறி மயிர் நட்டு விடுகின்றனர். இதற்கு (Hair Plantation) ஹேர் பிளாண்டேஷன் என்று பெயர்.


http://www.hoshairclinic.com/images/mianHeader2.jpg


பிளானடேஷனுக்கு முன்னால் பிளாண்டேஷனுக்கு பின் என்று போட்டோ போட்டு கடை விரித்திருக்கும் நிருவங்கள் இன்று மூலைக்கு மூலை. செலவுதான் நட்ட முடியுடன் தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிறது என்கின்றனர்.
இப்பிரச்சனைக்கு விரல் நுனியில் இருக்கிறது தீர்வு. விரல்கள் பத்தும் மூலதனம் என்பது பண நலத்திற்கு மட்டும் இல்லங்க.. உடல் நலத்திற்கும் பொருந்தும்.
இரு கைகளிலும் உள்ள நான்கு விரல்களின் (கட்டை விரலைத்தவிர) ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வலக்கையின் நான்கு விரல்களும் இடக்கையின் நான்கு விரல்களுடன் நன்கு உராயுமாறு விரல்களை அசைத்துக் கொண்டு இருக்க வேண்டும். விரல்களின் பின் பக்க நுனிகள் அதாவது நகங்கள் இருக்கும் பகுதி தலைமுடியின் வேர்ப்பகுதியில் இணைகிறது. அதனால் இவ்வாறு நகங்கள் ஒன்றோடு ஒன்று உராயும்போது தலைமுடியின் வேர்ப்பகுதி தூண்டி விடப்படுகிறது. இதனால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது. மெலும் முடி வளரவும் இம்முறையில் அதிகம் வாய்ப்பு இருக்கிறது. காசா? பணமா? சும்மா இருக்கும் போதெல்லாம் விரல் நகங்களை உரசிக் கொண்டிருப்பதால் நாமும் சுறுசுறுப்பாக இருந்தது போலவும் இருக்கும். முடியும் வளர்ந்து விடும் அல்லவா? விரல்கள் இருப்பவர்கள் ஒரு கை பார்த்து விடலாமே! இதற்காக ஒன்றும் நேரத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. கைகள் எப்போதெல்லாம் வேலையற்று இருக்கிறதோ அப்போதெல்லாம் செய்யலாமே.. தொடங்கி விட்டீர்களா? தலை நிறைய அடர்த்தியாக வளர வாழ்த்துக்கள் நண்பர்களே!!!



சனி, 19 ஜூன், 2010

கொள்முதலாகிறது குழந்தைகளின் இரத்தம்.....

-->
-->
http://candidchatter.files.wordpress.com/2008/10/human_infant_newborn_baby.jpg
நம் நாட்டில் இரத்த வங்கிகள் செயல் படுகின்றன. அதில் பெரும்பாலும் இரத்தம் செலுத்துபவர்கள் அண்ணம் தண்ணீர் இரண்டுக்கும் ஆளாயப் பறக்கின்ற ஏழைகள்தான்.(தண்ணீர் என்றால் குடி தண்ணீர் இல்லைங்க. குவாட்டர் தண்ணீர்). இதே போல செமன் வங்கிகள் இளைஞர்களைத் தன்வசம் இழுத்துக் கொண்டு இருக்கின்றன. ஆடம்பரச் செலவுகளுக்காக இளைஞர்கள் செமனை விற்கும் அவலம் என்றோ அரங்கேறி விட்டது என்பது அனைவரும் அறிந்ததே. பெண்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன அராஜகம் செய்வதில்? கரு முட்டை வியாபாரம் களை கட்டி விட்டது இவர்களால். இவையெல்லாம் வெளிப்படையாக நடந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே.
மறைமுகமாக மற்றொரு வியாபர்ரம் தொடங்கி சக்கை போடு போட ஆரம்பித்து உள்ளது. விளைவு தெரிந்தோ தெரியாமலோ இதிலும் விழுபவர்கள் விழுபவர்கள் ஏழைகளாகவே இருக்கின்றனர்.
பணம் என்றால் பிணமும் வாயைப்பிளக்கும் என்பார்கள். எங்கிருந்துதான் கண்டு பிடிப்பார்களோ புதிய புதிய பணம் பண்ணும் வழிகளை. பணம் பண்ண பிணம் என்றால் என்ன? பச்சை மண் என்றால என்ன? எல்லாம் ஒன்றுதான் இவர்களுக்கு. வைக்ககோல் கன்றுக்குட்டியைக் காட்டி பால் கறந்தனர். மன்னித்தோம். தாய்ப்பாலில் உணவுப்பொருள் செய்து விற்றனர். வெறுப்பும், கொதிப்பும் கொண்டோமன்றி வேறு செய்யத் தெரியவில்லை. மக்களினம் மாறுமா என்று ஏங்கிய காலம் போய்விட்டது.. இன்று கொடுமையின் உச்சத்தில் ஒரு சிலரைப் பணத்தாசை கொண்டு சேர்த்து உள்ளது.
மழலை... இதைக் கண்டு மனம் மகிழாதவர் இருக்க முடியுமா? என்றால் இருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். குழந்தையைக் கண்டு கொஞ்சி மகிழாதவர்கள் இருக்கிறார்களா? என்றால் இருக்கிறார்கள் என்றே கூறவேண்டும். சிசுவைக் கண்டு சிர்க்காதவர்கள் இருக்கிறார்களா? என்றால் இருக்கிறார்கள் என்றே கூற வேண்டும்
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற
என்று திருவள்ளுவர் கூற, பெறுபவற்றுள் மக்கட்பேற்றை விட அறிவானது இல்லை என்று ஆனந்தக் கூத்திடுகிறார்கள் குழந்தையைக் கொண்டு லாபம் சம்பாதிக்கும் சிலரும்.
மனிதர்களுக்கு இரத்தம் உற்பத்தியாவது எலும்பு மஜ்ஜை என்ற பகுதியில். ஆனால் கருவில் உருவான குழந்தைக்குத் தாயின் கருவறையில் இருந்து வெளிவரும் வரை மண்ணீரலிலும், கல்லீரலிலும் இரத்தம் உருவாகும். இந்த இரத்தத்திற்கு என்ரிச்டு கார்டு பிளட் (Enriched cord blood) என்று பெயர். ஏனெனில் அவ்வளவு ரிச்னஸ் இருப்பதால். அதனால்தான் குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியைத் துண்டிக்கும்போது பிளசண்டாவிலிருந்து (பிண்டம்) இரத்தத்தை முழுவதுமாக குழந்தைக்குள் செலுத்தி விட்டுத்தான் தொப்புள் கொடியை துண்டிப்பார்கள் அந்த இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுக்கு ஃபீடல் ஹீமோகுளோபின் (Fetal Hemoglobin) என்று பெயர். வயிற்றில் இருக்கும் குழந்தையின் இரத்தத்தில் ஸ்டெம் செல்ஸ் (Stem Cells) என்கிற மூல அணுக்கள் ஏராளமாக இருக்கும். குழந்தை பிறந்தவுடன் இந்த ஸ்டெம் செல்கள் எலும்பு மஜ்ஜைக்குப் போய்விடும். எனவே பெரியவர்களின் இரத்தத்தில் இருந்து ஸ்டெம் செல்களைப் பிரித்து எடுப்பது மிகக் கடினம். குழந்தையின் இரத்தத்தில் இருந்து மிக அதிகமாகவும் மிக எளிதாகவும் எடுத்து விடலாம். 
ஸ்டெம் செல்கள் என்பவை ஆரம்ப நிலைச் செல்களாகும். வளர்நிலையில் உள்ள இந்த ஸ்டெம் செல்களை (Stem Cell) வேர் செல் என்று கூறுவர். கரு வளர்ச்சியானது பிளாஸ்டோசிஸ் (Blastocyst)  எனப்படும் கருவின் ஆரம்பக் கட்ட வளர்ச்சி நிலையில் ஸ்டெம் செல்கள் உற்பத்தி ஆகின்றன. கரு மூன்று முதல் ஐந்து நாட்கள் வளர்ச்சியடைந்ததைத்தான் பிளாஸ்டோசிஸ்ட் என்பர். இந்த நிலையில் உள்ள ஸ்டெம் செல்கள்தான் உடல் உறுப்புகளை உருவாக்கவும் செல்களை உருவாக்குகிறது. இதனை வளர் கரு ஸ்டெம் செல்கள் என்பர். மகத்தான பல பணிகளைச் செய்யும் இதனை Universal Cell என்றும் கூறுவர். இது அழிவற்றது. என்றும் பிளவுற்று தொடர்ந்து வளரும் தன்மையுடையது. அதாவது செல் பிரித்தல் மூலம் மிக நீண்ட காலத்திற்கு தன்னை மேலும் மேலும் உருவாக்கிக் கொள்ளும் தன்மையுடையது. இது தன்னையும் வளர்த்துக் கொண்டு, இதர புதிய செல்களையும் உருவாக்கிக் கொண்டு திசுக்களையும் வளர்க்கும் அற்புத ஆற்றல் கொண்டது. மற்றும் இதனை ஆய்வகத்தில் வைத்து வளர்த்தெடுக்க முடியும். 

குழந்தைப் பிறந்தவுடன் குழந்தையிடம் இருந்து எடுக்கப்படும் 10 மி.லி. இரத்தம் பெரியவர்களின் உடலில் இருந்து எடுக்கப்படும் 300 மி.லி. இரத்தத்திற்குச் சமமாகும். சில கம்பெனிகள் பிரசவ காலத்தில் தொப்புள்கொடியில் இருந்து 45 மி.லி. இரத்தத்தை எடுத்து விற்கும் வியாபாரத்தில் இறங்கி உள்ளன. இது பெரியவர்களின் 1350 மி..லி. இரத்தத்திற்குச் சமம். எவ்வளவுதான் இருக்கட்டுமே? பச்சை மண்ணிடம் பிஞ்சு குழந்தையிடம் இருந்து இரத்தம் எடுக்க எப்படி மனம் வரும்? இரத்த தானமே 18 வயதிற்கு மேல் தான் தரலாம் என்று சட்டம் இருக்க பிறந்து 18 நொடிக்குள் அதாவது பதினெட்டே நொடிகள் வயதான குழ்ந்தையிடம் இருந்து இரத்தம் எடுப்பது சட்டப்படியும் குற்றம். மனிதாபிமான அடிப்படையில் பார்த்தாலும் குற்றமே. சற்றுகூட ஈவு இறக்கமில்லா இந்த வெலையை இந்த அரக்கர்கள் செய்ய கையாளும் தந்திரம் எப்படி என்று பார்ப்போமோ?
பிரசவ சமயத்தில் உங்கள் குழந்தையிடம் இருந்து இரத்தம் எடுத்து ஸ்டோரேஜ் செய்து வைத்தால் பிற்காலத்தில் அதாவது பதினைந்து ஆண்டுகள் வரை, குழ்ந்தைக்கோ குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் எவருக்கேனும் கேன்சர், மூளை வளர்ச்சி குறைவு, அல்ஸைமர், பாரம்பரிய நோய் போன்றவை வந்தால் இந்த ஸ்டோரேஜ் செய்யப்பட்ட இரத்தத்தைக் கொடுத்து உயிர் காக்கலாம் என்று சொல்கிறார்கள்.
இவர்களின் சதிகளை அறியாத கருவுற்ற பெண்ணும் அவள் குடும்பத்தாரும் ஒத்துக்கொள்கின்றனர். கூலியும் கொடுத்து முட்டுக்கோலும் போட்டான் என்ற கதையாக இப்படி இரத்தத்தைப் பாதுகாத்து வைத்துக்கொள்ள கட்டணமாக இவர்கள் வசூலிக்கும் தொகை 94,000 ரூபாய் மொத்தமாக. இதுமட்டுமல்ல ஆண்டு தோறும் பாதுகாப்புக் கட்டணமாக 9,000 ரூபாய் கட்ட வேண்டுமாம்.
  1. இதில் என்ன பெரிய கேள்வி என்றால் என்ரிச் கார்டு பிளட் (குழந்தை இரத்த்த்தை பதினைந்து ஆண்டுகள் பாதுகாப்போம் என்று கூறி வருகிற இக்கம்பெனிகள் மொத்தமாக பதினைந்து ஆண்டுகளுக்கு மட்டுமே உரிமம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
  2. சேமித்து வைத்தவர்களுக்கே இரத்தம் திரும்ப கொடுக்க வேண்டிய நிலையில், அதுவே அந்நிருவனங்களின் நோக்கம் என்ற நிலையில் அந்நிருவனங்கள் என்ரிச்டு கார்டு பிளட் வேண்டுபவர்கள் எங்களை அணுகவும் என்று ஏன் விளம்பரம் செய்ய வேண்டும்? அதுவும் அதன் விலையுடன். விலையைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். எடுத்த 45 மி.லி. என்ரிச்டு இரத்தம் 2,50,000 ரூபாய். (அதிர்ச்சியாக இருந்தால் சற்று தண்ணீர் அருந்துங்கள்)
  3. ஏனெனில் வெளி நாடுகளில் இவ்வியாபாரம் சக்கைப் போடு போடுகிறது. காரணம் கடந்த இளமையைத் திரும்பக் கொண்டு வர மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்கு இந்த இரத்தம் பயன்படுத்தினால் அதிகப் பலன் கிடைக்கிறதாம்.. கிழம் கட்டைகளுக்கு இந்த இளம் பிஞ்சுகளின் துளிர் விடும் ஸ்டெம் செல்கள் நிறைந்த இரத்தத்தை ஏற்றினால், இளமை திரும்பி புத்துணர்வுடனும் வாலிப முறுக்குடனும் திகழ்வார்களாம். (அப்போது தான் 90 வயதிலும் 100 வயதிலும் திருமணம் செய்து கொள்வதையே ஒரு தொழிலாகச் மேற்கொள்ளலாம்.
  4. எவ்வளவுதான் பணக்கார்களாக இருந்தாலும் 94,000 ரூபாய் கொடுத்து தன் குழந்தையின் இரத்தத்தைச் சேமித்து வைக்க முன்வருவார்களா?
  5. ஏழைகளாக இருப்பின் தன் குழந்தையின் எதிர்காலம் கருதி ஒரு தொகையைச் சேமிப்பார்களே அன்று இரத்தத்தை (எடுக்க) சேமிக்க ம்னம் வருமா?
  6. எதிர்காலத்தில் நோய் வந்தால பயனாக இருக்கும் என்று ஆங்காங்கே கொட்டி முழக்கமிட்டாலும் இன்னும் மெடிக்கல பாலிசி எடுப்பதற்கே தயங்கிக் கொண்டிருக்கும் நம் ஏழை மக்களால் இது போன்ற ஏமாற்றுக்களில் விழ முடியுமா என்பது மற்றொரு வினா?
  7. லாபம் அதிகம் வரும்போது லாபத்தில் நஷ்டம் என்று கொஞ்சம் பணம் கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொடுத்து இந்த இரத்தத்தைப் பெற முயற்சிப்பார்கள். நம் நாட்டில்தான் சாதா சட்ணி வியாபாரம் போல கிட்ணியைகூட எளிதாக விற்கும் ஏழ்மை ஒருபுறம் தலைவித்து ஆடிக்கொண்டிருக்கிறதே. குழந்தையையே விற்க முன்வரும் தாய்மார்கள் குழந்தையின் இரத்தம் சிறதளவு போனால் என்ன என்று எண்ணுவதும் இயல்புதானே.
  8. அப்படி ஒருவரும் முன்வராத போது முதலீடு செய்து ஆரம்பித்துள்ள இக்கம்பெனிகளின் உரிமையாளர்கள் தங்கள் முதலீட்டைக் காக்க என்ன செய்வார்கள்? மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆயாக்கள் ஆகியோர் உதவியுடன் தெரியாமல் எடுக்கத் துணிவார்கள்.
  9. இந்த சேமிப்புக் கட்டணம், ஆண்டுக் கட்டணம் என்று விளம்பரப் படுத்துவதெல்லாம் காகித அளவில்தான். சட்டச் சிக்கலில் இருந்து தப்பித்துக்கொள்ள மட்டுமே என்றும் தகவல் வந்து கொண்டிருக்கின்றன. மறைமுகமாக இந்தக் கட்டணமெல்லாம் பெறாமல் குழந்தையின் இரத்தம் விலை கொடுத்து பெற்றுக் கொண்டு இருக்கின்றனவாம் இந்நிருவனங்கள்.
  10. இவ்வியாபாரம் இப்போது சர்வ தேச வியாபாரமாக தன் கிளைகளைப் பரப்பி வருகின்றனவாம்.
இத்துனைக்கும் என்ன காரணம் இந்தப் பிணம் தின்னும் கழுகுகளிடன் நிறைந்துள்ள பணம் பணம் பணம் என்ற ஆசைதான். என்னதான் 45 மி. லி. குழந்தையின் இரத்தம் 1350 மி.லி. இரத்தத்துக்குச் சமம் என்றாலும் பச்சைக் குழந்தையின் முதல் குருதியைக் கொடுக்க நாம் என்ன அரக்கர்களா? குழந்தையின் இரத்தத்தில் ஸ்டெம் செல்கள் நிறைந்துள்ளதால் அதிக் சக்தி நிறைந்துள்ளது குழந்தையின் இரத்தத்தில்தான். இச்சக்தியைக் குழந்தையிலேயே தொப்புள் கொடியில் இருந்து உறிஞ்சி எடுத்து விட்டால் குழந்தைகளுக்கு வளர் நிலையில் இரத்தம் சம்பந்தமான குறபாடுகளுடன், உறுப்புகளின் வளர்ச்சியிலும் குறைபாடுகள் ஏற்படுவது உறுதி. என்வே இரத்தம் உறிஞ்சும் இந்தப் புத்துலக எத்தர்களிடம் இருந்து தங்களின் குழந்தையின் தொப்புள் கொடியில் இருந்து என்ரிச்டு கார்டு இரத்தத்தைக் எடுக்காமல் காக்க தொப்புள் கொடி பந்தமான தாய்மார்கள் விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியமாகிறது. மனித வளமே இந்நாட்டின் தலையான வளம். இன்றைய குழந்தைகளே நாளைய இந்தியாவின் எதிர்காலம். சிந்திப்பீர்....செயல்படுவீர் விழிப்புணர்வுடன்...

ஞாயிறு, 13 ஜூன், 2010

பாட்டுத்திறத்தாலே....


வெற்றிகளைப்பாடி, வீரத்தைப்பாடி, போக்களத்தைப்பாடி கொடைப்பறும் நம்பிக்கையை ஊட்டிய தமிழ் சங்ககாலத் தமிழ். வழங்கி வழ்ங்கிச் சிவந்த கரத்தினையும், வாங்கி வாங்கிச் சிழித்த திறத்தையும் , வரிசை வரிசையாகப் பாடி பரிசுகளைக் குவிக்க ஏதுவாக இருந்த தமிழ் பழந்தமிழ். சங்க காலத்திற்குப் பிறகு, பக்தி காலத்தில் பாலோடு ஞானத்தைச் சம்பந்தருக்கு ஊட்டிய கொஞ்சு தமிழ், நாவுக்கரசரின் சூலை நோயைப் போக்கிய பக்திச் சுடர் கமழும் நெஞ்சு தமிழ், ஓலை காட்டி சுந்தரரின் திருமணத்தை நிறுத்தி ஆட்கொண்ட நெஞ்சு தமிழ், பிட்டுக்கு மண் சுமந்து பக்தனைக் காத்த விஞ்சு தமிழ் ஆகிய அத்தனை தமிழும் மக்களைப் பார்க்கத்தவறியது. தமிழ் மன்னனைப் பார்த்தது;: மகுடங்களைப் பார்த்தது:: மணி முடியைப் பார்த்தது: இறைவியைப் பார்த்த்து: இறைவனின் திருவிளையாடல்களைப் பார்த்தது: ஆனால் மக்களின் தேவைகளைப் பார்க்கத்தவறியது. சஙக இலக்கியத்திலும் மக்களின் வாழ்வியலைச் சித்தரித்தார்களே அன்றி அவர்களின் தேவைகளை உணர்த்துகின்ற கவிதைகள் காணக் கிடைத்தில.

தமிழோடு தமிழாக, மக்கள் தங்களோடு தமிழாகக் கலந்த காலத்தை உருவாக்கிய கவிஞன் மகாகவி பாரதி என்று துணிந்து கூறலாம். அவன் காலத்தில்தான் தமிழ் அனைவருக்கும் பொதுவுடைமை ஆயிற்று. “எங்கே தமிழ்? எங்கே தமிழ்? என்று எந்தமிழர் ஏங்குகையில் இங்கே தமிழ் என்று இழுத்து வந்தாய் நீ வாழ்க” என்று கண்ணதாசன் பாராட்டிக் கூறியது இமாலய உண்மையன்றோ!!

”தமிழரின் உயிர்நிகர் தமிழ் நிலை தாழ்ந்தால்
இமைதிற வாமல் இருந்த நிலையில்
தமிழகம் தமிழுக்குத் தரும் உயர் வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்”

தமிழுக்கு அருவியின் துள்ளல் உண்டா? உண்டு என்று சொன்னவன் பாரதி. தமிழுக்கு அமுதின் சுவை உண்டா? உண்டு என்று சொன்னவன் பாரதி. தமிழில் அணலைக் காட்டியவன் பாரதி. தமிழில் அகிலின் மணத்தைக் கூட்டியவன் பாரதி. வாளின் கூர்மையும், வழியும் பனியின் குளிர்மையும் தமிழுக்கு உண்டு என்று சொன்னவன் பாரதி. மின்னல் வரிகளையும், மீட்டும் இடிமுழக்கச் ச்ந்தங்களையும் “தீம் தீம் தீம்” எனக் குவித்தவன் பாரதி. அந்தப் பாரதியின் கண்கள் ஆங்கில ஆட்சியில் தீப் பொறிகளைக் கொட்டியதால் அவன் கவிதைகள் எல்லாம் கூர் தீட்டிய வாட்களாயிற்று.

”ஆயிரம் உண்டிங்கு சாதி - எனில்
அந்நியர் வந்து புகல் என்ன நீதி”

என்ற இந்த பூகம்ப வரிகளால்தான் பாரத மாதவை புத்தியிர் ஊட்டினான். ”எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரே த்ரமன்றோ” என அவர் பூனையையா பாடினார்? சாதி, மத, இன, மொழி என்ற வேறுபாட்டால் பிரிந்து இருந்த பாரதச் சேனையைப் பாடினார். அந்த எழுத்துதான் பரங்கியரைப் பயமுறுத்தியது. இந்தியாவை ஆளவேண்டும், இன்னும் ஆளவேண்டும் என்ற ஆசை கொண்ட போதெல்லாம், வெள்ளைப் பரங்கியரைப் பாரதியின் மீசை வெறுட்டியது. இந்தியர்கலை அடிமையாக்க வேண்டும், அடிமையாக்க வேண்டும் என்று வெள்ளையர்கள் ஆசைபட்ட போதெல்லாம் அவர்களைப் பாரதியின் கவிதை ஓசை மிறட்டியது. “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்று விடுதலைக்கு முன்பாகவே நம் தலையில் மணிமுடியைத் தரித்தவன் பாரதி. தேசப்பற்றும் தெய்வீகப்பற்றும் கொண்ட அவனால் தமிழ் வாசம் பெற்றது. பராசக்தியைக்கூட அவன் பாரத மாதாவுக்காகவே வேண்டினான. “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே” எனச் சொல்லிச் சொல்லி அவன் துள்ளிய துள்ளல் அருவியில் இன்று விடுதலை பெற்ற பாரத மாதா மஞ்சள் குளிக்கிறாள்.

ஆன்மீகத்தைப் பாடிய பாரதி ஆயிரம் தெய்வங்களா? என்று அதிசயத்தான். சக்தி வழிபாடே சஞ்சலத்தைப் போக்கும் என்றான். விடுதலை வேட்கையில் வெள்ளையனை விறட்ட விருத்தப்பாக்களைப் பாடியவன், மக்களிடம் மண்டிக் கிடந்த அறியாமையைப் போக்க அகவல்களைச் சிந்தினான். இத்ற்கெல்லாம் மணிமுடியாக அவன் பாரில் எவரும் மனத்தில் எண்ணியும் பாராத பெண்ணுரிமைப் பேருணர்வைப் படைத்தான். பெண்ணைப் பெண்ணாகவா பர்த்தான் பாரதி?

”உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை
உமையவ ளென்று அறியீரோ?”

என்று தெய்வ நிலைக்கு ஏற்றினான். அவன் பெண்ணைச் சமைப்பவளாகவோ சமைந்தவளாகவோ பார்க்கவில்லை. இந்த உலகைச் சுமப்பவளாக அன்றோ பார்த்தான்.அதனால்தான்

”பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லையென்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கையே இல்லை

என்று உறுதிபடக் கூறினார். பாரதி கொண்ட பெண்ணுரிமைத்தீயின் மிச்சமே பாவேந்தரின் பெண்ணுரிமை என்றால் அது மிகையில்லை.
பள்ளித்தளங்களைக் கோயிலாக்கும் அற்புத முயற்சியைச் செய்து, அந்து வளர் மனிதப் பயிர்களுக்கு,

சொல்லின் இந்து தமிழ்ச் சொல்லே
அதனைத் தொழுது படித்திடடி பாப்பா”

என்று நெஞ்சில் மழலை மனதில் நெய்மணத்தைத் தடவிய பாரதி, தமிழுணர்வைத் தமிழ்நாட்டில் பெய் மழையாகப் பெய்தான். எந்த மொழியும் தெரியாமல் “தமிழ் எங்கள் உயிர்” என்று வறட்டுக் கூச்சல் இடாமல், எல்லா மொழிகளையும் கற்றுத் தேர்ந்து,

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணேன்”

என்று சொன்ன பாரதியின் வாக்கு நம் சிந்த்னைக்கு உரியது. அந்தச் சிந்தனையின் விளைவுதான் பாவேந்தர் பார்வையில்
பைந்தமிழ்ப் பாகனாக, செந்தமிழ்த்தேனியாக, சிந்துக்குத் தந்தையாக, குவிக்கும் கவிதைக் குயிலாக பாரதியார் மிளிர்ந்தார்.

சுவை புதிது, வளம் புதிது, பொருள் புதிது, சொல் புதிது, என்று எதிலும் புதுமை படைத்த பாரதி யாப்புக் கடலில் மூழ்கி முத்தெடுக்கப் பழகியவன். புதுக்கவிதையில் முறுவலித்தான். அவன் காதலித்தது மரபுக்கவிதையை என்றாலும் கண் சிமிட்டியது புதுக்கவிதையில்.

”நமக்குத் தொழில் கவிதை: நாட்டுக்குழைத்தல்: இமைப்பொழுதும் சோராதிருத்தல்” இதுவே அவன் தாரக மந்திரம். இந்த அடிகள் நம் மனதில் ஆழமாகப் பதிந்து பாரதி என்றாலே கண்களில் ஈரத்தைக் காட்டும் அடிகள். மனிதர்கள் பிறப்பார்கள்; ஈசல்களாய் வாழ்ந்து இறப்பார்கள்; ஆனால் கவிஞர்கள் பிறப்பார்கள்; என்றும் இருப்பார்கள் நித்தியமாய். காலனைக் காலால் உதைத்த பாரதியும் இருக்கிறான் எல்லோர் மனத்திலும் சத்தியமாக.

இன்று தமிழகத்து மேடைகளே அன்றி பிற மண்ணிலும் உதிரும் சுடர் வரிகளில் பாரதியின் வரிகளே மின்னலாக மின்னுகின்றன. புனையும் கவிதைகளில் பாரதியின் மீசை துடிப்பே அதிகமாகக் காணலாகிறது. புலவர்களின் விழித்திரையில் பாரதியின் ஒளித்திரையே மிளிர்கிறது வண்ண மயமாக. எழுதுகோல்கள் திறக்கும் போதெல்லாம் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்த பாரதியே சிறகு விறிக்கிறான். எண்ணத்தில் சிரிக்கிறான்; எழுத்தில் சிரிக்கிறான்; கருத்தில் சிரிக்கிறான்; கற்பனையில் சிரிக்கிறான். தமிழை உச்சரிக்கும் போது உதடுகள் ஈரமாவது போல பாரதியின் நினைவுகள் நம் நெஞ்சங்களில் ஈரமாகவே இருக்கின்றன. அந்த பாரதி என்றும் நம்மோடு! நாம் என்றும் அவனோடு!!

சனி, 12 ஜூன், 2010

பக்க வாதத்தைத் தெரிந்துகொள்ள STR முயற்சி....

பொதுவாக பக்கவாதத்திறிகான அறிகுறி தலை சுற்றல். இது தொடங்கி இரண்டு மூன்று மணி நேரம் கழிந்த பின்னரே பக்க வாதம் வருகிறது என்கின்றனர் மருத்துவர்கள். பலர் இந்நிலையை உடனே உணர்ந்து உடண்டியாகச் சிகிச்சை செய்து கொண்டு குணப்படுத்திக் கொள்கின்றனர். விழிப்புணர்வு இல்லாமல் பலர் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். STROKE ஐக் கண்டுபிடிக்க அதன் முதல் மூன்று எழுத்துக்களான STR ஐ நினைவில் வைத்துக்கொண்டால் போதும். இந்நோய் வந்துள்ளது என்பதை அறிந்து முக்கிய கண்டத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

S - Smile

T -- Talk

R -- Raise the Arms

அதாவது

1. S - Smile - இந்நோய் பாதிக்கப்பட்டு இருப்பது போல தோன்றினால் உடனே அவரை நன்றாகச் சிரிக்கச் சொல்ல வேண்டும்.

2. T -- Talk - அவரை சிறு சிறு சொற்களாக எதையாவது பேசச் சொல்ல வேண்டும்.

3. R -- Raise the Arms - இரண்டு கைகளையும் மேலே தூக்கச் சொல்ல வேண்டும்.

இம்மூன்றில் ஏதாவது ஒன்றைச் செய்ய முசியவில்லை என்றாலும் அது பக்கவாதத்தின் அறிகுறி என்பதை அறிந்து அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவேண்டும்.

அப்போதும் நம்பிக்கை வராதவர்கள் மேலும் ஒரு சிறு பரிசோதனையைச் செய்து பார்க்கலாம். Stick the Tangue out.

அதாவது நாக்கை நன்றாக வெளியே நீட்டச் சொல்ல வேண்டும். நாக்கு அஷ்ட கோணல்களாகச் சென்றால் கண்டிப்பாக அவசர சிகிச்சைதான். இல்லாவிட்டால் கஷ்டம் தான். நினைவிருக்கட்டும் STR.