இது கல்லூரி தேவதைகளின் கனாக்காலம்; அறைகள்
தோறும் கால் முளைத்த நிலவுகளின் உலாக்காலம்;. சுற்றும் பூமி சற்று நின்று மலர்கள் தூவும்
விழாக்காலம். ஆம் முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் கல்லூரி மாணவிகள் புதிய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும்
காலம் இது. பள்ளிக்கூட வகுப்பறைகளிலிருந்தும் மைதானத்திலிருந்தும் ஆய்வகங்களிடமிருந்தும்
பிரியாவிடை பெற்றுக் கொண்டு கல்லூரி என்னும் நந்தவனத்தில் அடியெடுத்து வைக்கும்போது
அந்தப் சிட்டுக்குருவிகளின் கண்கள் சுமந்து கொண்டிருக்கும் கனவுகள் ஏராளமானதாக இருக்கும்.
தாராளமானதாகவும் இருக்கும். கனவுகள் கைப்பட என்ன
செய்வது என்னும் வினாக்குறிகளும் அந்த விழிகளில் நிரம்பியிருக்கும்.
மாணவர்களில்
மூன்று வகியினர். முதல் வகை உலகையும் தம் பருவத்தையும் அதன் ஆசைகளையும் அவற்றை எப்படி
முறையாகக் கொண்டு செல்வது என்பதைத் தெரிந்து கொண்டிருப்பர். இவர்கள் நன்றாகவும் படிப்பார்கள்.
எங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்தவராக இருப்பார்கள்.
இரண்டாவது
வகை மாணவிகள் நல்ல நகைச்சுவை உணர்வோடு இருப்பார்கள்.
வகுப்பில் சக மாணவிகளையும் கலாய்த்துக் கொண்டு ஆசிரியர்களையும் கலாய்த்துக் கொண்டு
இருப்பார்கள். இவர்களால்தான் வகுப்பறையில் மகிழ்ச்சியின் சாரல் அடிக்கும் என்று சொன்னால்
அது மிகையன்று. கல்லூரி வந்து விட்டோம்; இனி பள்ளியில் படித்தது போல படிக்க வேண்டிய
அவசியம் இல்லை என்று நினைப்பவர்கள் இந்த வகையினர். ஆனால் இவர்கள் ஆரம்பத்திலெல்லாம்
கல்லூரி வாழ்க்கையை நன்கு அனுபவித்து விட்டு தேர்வின் போது படித்து நல்ல மதிப்பெண்களும்
விடுவார்கள்.
இன்னொரு
வகை உண்டு. அவர்கள் கல்லூரிக்கு வந்தவுடன் ஏதோ சிறைச்சாலைக்குள் வந்தது போன்ற உணர்வுடன்
இருப்பார்கள். எப்போதும் ஒரு அச்ச இவர்களது முகத்தில் உறைந்திருக்கும். இவர்களது அச்சத்தைப்
போக்க ஆசிரியர்கள் ஏதாவது பேசச் சொன்னால் அல்லது வினாக்கள் கேட்டால் மேலும் மிரண்டு
விடுவார்கள். இவர்கள் ஆசிரியர்கள் சொல்வதைப் புரிந்து கொள்கிறார்களா இல்லையா என்று
தெரிந்து கொள்வத/ற்குள் மூன்று ஆண்டுகள் ஓடிவிடும்.
ஆனால்
எந்தப் வகையினராக இருந்தாலும் இவ்வயதினர்களின் உள்ளம் கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளமாகத்தான்
இருக்கும். படிப்பு படிப்பு என்று அதுவரைத் தம்மை மறந்திருந்த மாணவிகளிடம் அந்தப் பதின்
பருவ உடல், உள்ளப் மாற்றங்கள் மெல்ல தம் முகத்தைக் காட்டும் தருணம். எதிப்பாலினத்தின்
மீது ஈர்ப்பு இயல்பாக எழும் பதின் பருவம். மாணவிகளுக்கும் சற்று சுதந்திரம் கைகூடும்
பருவம். பள்ளிப் பருவத்தில் இவர்களைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்த பெற்றோர் சற்று
கண்களை அசரும் காலமும் இது. இவர்களுக்கு கைப்பேசி, வலைத்தளம் இத்யாதிகள் எல்லாம் அறிமுகம்
ஆகி புது உலகில் சஞ்சரிக்கச் செய்யும் பருவம். ஒரு புறம் பதின் பருவ உடல் மாற்றம்,
மறுபுறம் அதுவரை கிடைத்திராத சுதந்திரம் ஆகியவை மாணவிகளைச் சற்று அலைக்கழிக்கும். அவற்றுக்கு
அணை போட்டுக் காக்க சில வழிகள்.
நான்கு
வகையில் அவர்கள் உள்ளத்தைச் செலுத்தினால் மாணவிகள் நாலும் தெரிந்தவர்களாக இருப்பதுடன்
அந்த வயதின் வேறு சில பிரச்சனைகளிலிருந்து அவர்களைக் காத்துக் கொள்ளலாம். 1. கல்வி
2. கலை. 3. விளையாட்டு 4. சேவை.
அதாவது
நாம் எதற்காகக் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கிறோம் என்பதை எப்போதும் மனத்தில்
நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். போட்டிகள் நிறைந்த இக்காலத்தில் ஏனோதானோவென்று மதிப்பெண்கள்
பெற்றால் வேலை வாய்ப்புக்கோ உயர்கல்விக்கோ பிரச்சனையாகிவிடும் என்பதை மாணவர்கள் உணர்தல்
வெண்டும்.
கல்விக்கு
அடுத்ததாகக் கலைகளில் நாட்டம் செலுத்துதல் வேண்டும். கல்லூரியின் கல்விக்குத் தொடர்பான
பிற செயல்பாடுகளான ஆடல் பாடல் முதலிய போட்டிகள் நடைபெறும். இவற்றில் பங்கேற்றுக் கொள்வதால்
மனம் எப்போதும் புத்துணர்வோடு இருக்கும்.
விளையாட்டு,
உடற்பயிற்சி, தற்காப்புப் பயிற்சிகள் முதலியவற்றுள் சிலவற்றிலாவது பங்கு பெற வேண்டும்.
இந்த பங்கேற்பு தன்னம்பிக்கை, துணிச்சல் ஆகியவற்றைக் கொடுப்பதுடன் கல்வி அறிவால் பெறும்
ஆளுமையை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
சேவை
மனப்பான்மை வந்து விட்டால் மாணவர்களின் மனத்தில் குடிகொண்டிருக்கும் தன்னலம் குறைந்து
விடும். பொதுநலத்திற்காகச் செயல்படும் போது மெல்ல மெல்ல மாணவிகள் ஒவ்வொருவரும் தம்மை
ஒரு அன்னை தெரசாவாக எண்ண ஆரம்பிப்பர். பொதுத்தொண்டாற்றுவதால் கிடைக்கும் புகழ், தலைமை
பொறுப்பு ஆகியவை மாணவர்களின் மனத்தைப் பிற செல்ல விடாது. புகழ் போதை காதல் போதயை எத்திப்
புறந்தள்ளி விடும்.
ஒவ்வொரு
கல்லூரியிலும் கவுன்சிலிங் செல் என்று ஒன்று இருக்கும். தாம் எதிர் கொள்ளும் சொந்தப்
பிரச்சனைகளை பிறரிடம் எப்படி சொல்வது என்று நினைக்காமல் அங்கு பேசி சரியான முடிவு எடுக்க
முயற்சி செய்யலாம்.
இது தவிரவும்
குழந்தைகள் மீது அக்கறை கொண்டவர்களுள் மாதா பிதாவுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள்
ஆசிரியர்கள். தங்களிடம் பயிலும் மாணவிகளின் நல்வாழ்வை விரும்புபவர்கள் அவர்கள். கல்லுரிப்
பேராசிர்யர்களில் அன்பாகப் பழகும் ஓருவரோடாவது நட்போடு பழகுதலும் அவ்வப்போது முளைக்கும்
தம் மனக் குழப்பங்களை அவரிடம் மனம் விட்டு பேசி ஆலோசனை கேட்பதும் வாழ்க்கைப் பாதையைச்
சரியான முறையில் வகுத்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.