“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

சனி, 16 மார்ச், 2013

வாழ்ந்து கற்றுக்கொடுக்கலாம் வாருங்கள்..

கிடந்தது
சுவரோரமாய்
ஒரு கருவண்டு

"
எப்பப்பா போகும் இது
அவுங்க வீட்டுக்கு? "

எதையாவது கேட்பாள்
சின்ன மகள்
எப்போதும்

"
எழுந்ததும்
போகும்"
சமாளிப்பேன் நானும்
இப்படித்தான்

விடவில்லை

"
இது
அப்பா வண்டா?
அம்மா வண்டா?"

"
அப்பா வண்டு"
சொல்லி வைத்தேன் சும்மா

"
அப்பா வண்டுன்னா சரி
எப்ப வேணாலும் போகலாம் வீட்டுக்கு"

என்று தன் தந்தையின் ஒழுக்கத்தைப் பார்த்து தவறாகப் அறிந்து கொண்ட அறியாத பிள்ளை ஒன்று கூறுவதாக ஒரு கவிதையை எழுதியிருப்பார் என் நண்பரும் எழுச்சிக் கவிஞருமான திரு. இரா.எட்வின். இது இன்றைய சமுதாயத்தில் ஆண்களின்  சுதந்திரத்தை அல்லது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள கவிதை  என்று கூறுவதை விட வளரும் குழந்தைகளின் மனத்தில் ஆண்களின் படிமம் எப்படி பதிந்துள்ளது என்பதை உணர்த்தும் கவிதையாகப் பார்ப்பதே சரியான கோணம். அம்மா என்றால் சரியாக வீட்டுக்கு வர வேண்டும். அப்பா என்றால் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்குப் வரலாம் என்னும் சமுதாய நிலைப்பாடு குழந்தைகளின் மனத்தில் ஆழமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதை யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. குழந்தைகளின் இப்படிப் பட்ட புரிதலுக்குக் காரணம் யார் என்று வினா எழுப்பி உரிய விடையைப் பார்த்துக் கொள்வது இன்றைய பெற்றோர்களின் தேவை.
 கணவன் வேறொரு பெண்ணிடம் தொடர்பு வைத்திருக்கிறான். அதிகாலையில் வெளியில் செல்பவன் இரவும் அவள் வீட்டிலேயே தங்கி விடுகிறான். பொழுது புலர்ந்ததும் அவன் அப்பெண் வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறான். இத்தகவல் மனைவிக்கு வந்து விடுகிறது. அந்தத் தகவலை எடுத்து வருபவள் அவளது தோழி. உடனே தலைவிக்குக் கோபம் வருகிறது. கோபத்தையும் விட அழுகை வருகிறது. அதையும் விட அச்சம் வருகிறது. என்ன அச்சம்? வெளியில் விளையாடிக் கொண்டிருக்கும் தன் மகனும் தந்தை உள்ளே நுழையும்போது வீட்டுக்குள்ளே சேர்ந்து வந்து விடுவானோ. அப்படி வருவானானால் கணவனை வைய முடியாது. ஏனெனில் குழந்தை முன்பு கணவனை வைதால் குழந்தைக்குத் தந்தை மீது இருக்கும் மதிப்பு குறைந்து விடும். வையாமல் விட்டால் இரவு முழுவதும் வேற்று இல்லத்தில் தங்கி வரும் இத்தீய ஒழுக்கத்தைப் பிற்காலத்தில் குழந்தையும் தவறான ஒழுக்கம் என்று அறியாது பின்பற்ற வாய்ப்பாக அமைந்து விடும். என்ன செய்வது என்று சிந்தித்தவளாக இருக்கிறாள்.
அவள் எண்ணம்  போலவே நல்ல வேளையாகத் தந்தையுடன் மகன் சேர்ந்து வரவில்லை. தனயன் தனியாக வருகிறான். தலைவன் தனியாக வருகிறான். மகிழ்கிறாள் தலைவி. கணவனின் பரத்தையர் ஒழுக்கத்தைத் தன் தோழியிடம் கூட நேரிடையாகக் கூறாத நாகரிக இனம் தமிழினம்.  ஆகவே அந்தச் சங்கத் தலைவி இவ்வாறு கூறுகிறாள்.

 “வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
காலை யிருந்து மாலைச் சேக்கும்
தெண்கடல் சேர்ப்பனொடு வாரான்
தான்வந் தனன்எம் காத லோனே”.

வெள்ளைக் கொக்கின் பிள்ளை இறந்து விட்டது. அதற்குத் துட்டிக் கேட்பதற்காகக் (துக்கம் விசாரிக்க) காலை செல்லும்  நாரை மாலையும் அங்கேயே தங்கி விடுகின்றதாம். நல்ல வேளையாக அப்படிப் பட்ட நீர்த்துறையின் தலைவனோடு வராமல் தனியே வந்தான் என் மகன் என்கிறாள். தன் கணவனின் தீய ஒழுக்கத்தைப் பற்றித் தலைவி தோழியிடம் கூறுவது இவ்வளவுதான்.
கொக்கு வயல்வெளியில் வசிக்கும் பறவை, நாரை நீர்நிலைகளில் வாழ் பறவை. நாரை என்பது உயரமான கால்களை கொண்டது. நன்கு பறக்கும் தன்மையது. வெள்ளைக் குருகுக்கு (வெள்ளைக் கொக்கு) கால்கள் குட்டையாக இருக்கும். அவ்வளவாகப் பறக்க முடியாது. ஆனால் எளிதில் மாட்டிக் கொள்ளாது. மறைவாக வாழும் தந்திரம் கற்றது. அதுபோல தலைவன் மறைவாக வாழும் தந்திரம் நிறைந்த பரத்தையுடன் இருந்து விட்டு வருகிறான் என்பது இதில் மறைந்துள்ள பொருள். ஐந்தே அடிகளில் தன் கணவனின் ஆகாய அளவு தவறை மறைபொருளாகக் கூறும் நுட்பத்தை வியக்காமல் இருக்க இயலுமா? கல்வியறிவு கிஞ்சித்தும் இல்லாத சங்கத் தமிழச்சி இவ்வாறு சிந்திக்கிறாள்.
குழந்தை வளர்ப்பின் நுட்பம் அறிந்தவள் அவள். அதனால்தான் குழந்தை முன் எதைப் பேசக்கூடாது என்னும் தெளிவுடன் பேசுகிறாள். அவள் வளர்த்த குழந்தைகள் பண்பாட்டை மீறாமல் ஒழுக்கத்தில் மாறாமல் இருந்திருக்கின்றன. இக்காலத்தில் இந்நிலை இருக்கிறதா?
பார்க்க, கேட்க, பேசக் கூடாத அனைத்துத் தகவல்களும் ஊடகங்கள் வாயிலாக நம் வீட்டு வரவேற்பறைக்கு வந்து விடுகின்றன. அவற்றை ஒன்று விடாமல் நாமும் பார்த்து விடுகின்றோம். அத்துடன் போகிறதா? நம் குழந்தைகளையும் பார்க்க விடுகின்றோம். நமக்குத் தேவை நம் குழந்தை நம்மைத் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் அவ்வளவுதான். ஆனால் பிஞ்சுகளின் மென்மையான இளம் மனதில் தேவையற்ற ஆபாச, வன்முறைக் காட்சிகள் ஆழமாகவும் மிக அழுத்தமாகவும் பதிந்து விடும் என்பதை பெற்றோர்கள் அறிந்தாலும் அதைச் செயல்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றனர்.
இவை தவிர கணினியைப் பயன்படுத்தத் தருகின்ற பெற்றோர்கள் அக்குழந்தையைக் கண்காணித்துக் கொண்டு இருத்தல் மிக அவசியம். குழந்தையின் முன் பெற்றோர் ஃபேஸ் புக்கைத் திறந்து வைத்துக் கொண்டு நண்பர்களுடன் ஜொல்லுவது  கவனமாகக் களையப் பட வேண்டிய ஒன்று. இதனால் குழந்தைக்குப் பெற்றோர் மீது உள்ள மரியாதைக் குறைவதோடு அதுவும் நட்பு விண்ணப்பம் கொடுக்கத் தொடங்கி விடும் என்பதை பெற்றோர்கள் மறக்கக் கூடாது.
குழந்தைகளுக்கு நல்லது இது தீயது இது என்று பகுத்துணரும் பக்குவம் வரும் வரை குழந்தைகள் முன்பு எவற்றைச் செய்யக் கூடாது என்பதில் பெற்றோர்களுக்கு ஒரு தெளிவு வேண்டும். முக்கியமாகப் பெற்றோர்கள் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொள்வது, சண்டையிட்டுக் கொள்வது முதலியவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
பிறரைப் பற்றி கேலி, கிண்டல் செய்து விமர்சனம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். அப்படிச் செய்தால் அந்தக் குறிப்பிட்ட நபர் மீது குழந்தைக்கு மரியாதை இல்லாது போகும். பெற்றோர்களைப் போலவே பிறரைப் பழிப்பதைப் பெற்றோர்களிடமிருந்தே குழந்தைகள் கற்றுக்கொள்ளும். அதனால் இடம் பொருள் ஏவல் தெரியாமல் எங்கேனும் வகையாய் மாட்டிக்கொண்டு அல்லல் படும். தங்கள் குழந்தைக்கு இந்நிலை தேவையா என்பதை உணர்ந்து பெற்றோர்கள் செயல்பட வேண்டும்.
குழந்தைகள் தவறு செய்வது இயல்பு. குழந்தைகள்தான் தவறு செய்யும். குழந்தைகள் தவறு செய்யும் போது குழந்தைகளைத் திருத்தும் சொற்கள் கூட திருவள்ளுவர் சொல்வது போல அன்பு கலந்த கனிச்சொற்களாக இருக்கவேண்டும். நீங்கள் கனிச்சொற்களை விடுத்து காய்ச்சொற்களைப் பயன்படுத்தினால் குழந்தைக்கும் காய்ச்சொற்களே கனியாக இனிக்கும். எனவே சனியனே, மூதேவி, பேய், பிசாசு முதலிய சொற்கள் உங்கள் குழந்தைகளின் நாவில் நர்த்தனமாட வேண்டுமா என்பதைத் தீர்மானத்தால் உங்கள் வாயில் இது போன்ற சொற்கள் அறவே வராது. இதைவிடவும் மோசமான வசைச் சொற்களால் குழந்தைகளை வைபவர்களும் உளர். 

குழந்தை முன்னிலையில் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது முதலியவற்றைச்  செய்தல் குழந்தையிடம் மோசமான மன நிலையை உருவாக்கும். அது திருட்டுத் தம் அடிக்கலாமா என்று வாய்ப்பைத் தேடத் தொடங்கும். இளம்பருவத்தில் ஏற்படும் இது போன்ற பழக்கங்கள் இறுதிவரை இறுகப் பற்றிக் கொள்ளு(ல்லு)ம் இரும்புக்கரமாகிக் குழந்தையை இறுக்கும்.
வார்ததைகளால் கற்றுக் கொடுப்பது பாடமாகிப் போகும். வாழ்ந்து கற்றுக்கொடுப்பது அக்குழந்தைகளின் மனத்தில் படமாகிப் பதியும்.
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பிலே என்று, பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். அதற்காக குழந்தையை வளர்ப்பது தாயின் கடமை என்று கூறி தந்தைமார்கள் தப்பித்துக் கொள்ளக் கூடாது. இனிய இல்லறத்தை மேற்கொண்டு ஒழுகும் பெற்றோர்களின் வாழ்க்கை அவர்களின் வாரிசுக்கு வழிகாட்டியாக அமைதல் வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளை கனிவுடன் வழிநடத்திச் செல்லுங்கள். வாழ்ந்து கற்றுக்கொடுங்கள்!

முனைவர். ப. பானுமதி(ஆதிரா)


(இக்கட்டுரை இம்மாத பெண்மணி மாத இதழில் வெளியான என் கட்டுரை. நன்றி பெண்மணி)கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக