“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

ஊர் வம்பு….. அந்தக்காலம் உலக வம்பு டிவிட்டர் காலம்


         ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருச்சாளி(பெருமானாக்கறது) அவ்வளவு சுலபமா? என்பது தெரியவில்லை. அது பேனா பெருச்சாளியா என்பது தெரியவில்லை. இரண்டும் சொல்கிறார்கள்.  இரண்டுமே சுலபமாக இருந்ததால் தான் இந்த சொலவடை இன்னும் தமிழர்களிடம் உலவிக்கொண்டு இருக்கிறது.

“வாயைக் கொடுத்து வம்புல மாட்டிக்கிட்டா” என்றும் கிராமப்புறங்களில் அடிக்கடி சொல்வது உண்டு. குறிப்பாகப் பெண்கள் ஆற்றங்கரைக்கோ குளத்தங் கரைக்கோ கோயிலுக்கோ போகும் போது அக்கம் பக்கத்து வீட்டு சமாசாரங்களை எல்லாம் மாவாக்கி, மசாலா சேர்த்து தங்கள் வாய் வாணலியில் போட்டு வடை சுட்டு விடுவார்கள். அவர்கள் வீடு வந்து சேருவதற்கு முன்பு அந்த வடைப்பொட்டலம் பார்சலில் பேசப்பட்டவரின் வீடு வந்து சேர்ந்து விடும். அது வீச்சறுவா, வெட்டு, குத்து என்று விசுவ ரூபம் எடுத்து எமலோகம், ஜெயில் என்று எங்கெங்கோ சென்ற கதையெல்லாம் உண்டு. 

     இது போல சமாசாரங்கள் இப்பொழுதோ அப்பொழுதோ நடந்து கொண்டு இருப்பது இல்லை. எல்லாக் காலத்திலும் இருந்துள்ளது. கேட்டால் வியப்பாக இருக்கும். சங்க காலத்தில் இந்த வம்புக்கு அம்பல், அலர் என்றெல்லாம் பெயரே வைத்துள்ளனர். இலக்கியங்களில் பழி பேசுதல், நாவீழ்தல், வாய்ப்பதர், தூறுதூவுதல், வலது பேசுதல், சின்னமொழி பேசுதல் முதலிய சற்றேரக்குறைய 20 பெயர்கள் கானப்பெறுகின்றன. ஆனால் சங்க காலத்தில் பேசிய வம்பைக் காதலோடு தொடர்பு படுத்தி இலக்கியங்கள் வடித்து விட்டனர். இதனால் அக்காலத்தில் காதலைப் பற்றிதான் அதிகமாக வம்பு பேசுவார்கள் என்பது புரிகிறது. அதாவது இக்கால இளைஞர்கள் மொழியில் சொன்னால் சிறுசுகள் கடலைப் போடுவதைப் பற்றி பெருசுங்க சுந்தர காண்டம் வாசிப்பார்கள்.     

     சாடை மாடையாக இருக்கும் போது இந்த ஊர்வம்பை ‘அம்பல்’ என்று கூறினார்கள். ‘அம்பல்’ என்றால் மொட்டு என்று பொருள். அதுவே பெரிதாக ஊர் முழுக்கப் பேசப்படும் போது ‘அலர்’ என்று கூறினார்கள். ‘அலர்’ என்றால் மலர்.      இவையல்லாம் ஒருவரோடு ஒருவர் முகம் பார்த்து நேரடியாக அடித்த அரட்டைகள், லூட்டிகள். அதுவும் தெரிந்தவர்களிடம் மட்டும். அதாவது இப்போதெல்லாம் தெரிந்தவர்களுடனோ முகம் பார்த்தோ அரட்டைகளெல்லாம் அடிப்பது இல்லை. அதில் தம் ரகசியம் வெளிப்பட்டு விடும் என்பதால் முகமறியாதவர்களிடம் ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு என்று அரட்டை நாகரிகம் உலகளாவிய அளவில் பரவியுள்ளது.      

     முதலில் குறுஞ்செய்தி (S.M.S)என்று அலைபேசியில் (மொபைல் போனில்) இந்த அரட்டைக் கலாச்சாரம் ஆரம்பித்தது. இளைஞர்கள் கை விரல்கள் வேகமாக வேலை செய்வதைப் பார்க்க வேண்டுமென்றால் குறுந்தகவல் டைப் செய்யும் போதுதான் பார்க்க வேண்டும். கிட்டத் தட்ட பில்லி சூனியம் வைக்கப் பட்டவர்களின் வித்தியாச செய்லபாடுகள் போல இருக்கும் இவர்களின் விரல் செயல்பாடுகள். அந்த வேகத்தை வேறு எதிலும் பார்க்கவே முடியாது. இரவு பனிரெண்டு மணி ஆகியும் போர்வைக்குள் இரண்டு விரல்கள் மட்டும் அசைந்து கொண்டிருக்கும் காதலிகள் மொபைல் போனின் காதலிகளாக இருந்தனர். இதில் ஒரு குறை கண்டம் விட்டு கண்டம் அனுப்ப அதிகச் செலவு. எல்லா மொபைல் நிறுவனங்களும் ஃப்ரீ எஸ்.எம்.எஸ். வசதியை உள்ளூர் சேவை வரையில் நிறுத்திக்கொண்டது.  
    

      அதனால் இந்த அரட்டைப் பரிமாற்றம் மெல்ல மின்னஞ்சலில் பயணித்தது. கூகுல், இண்டெர்நெட் எக்ஸ்ஃபோரர் முதலிய அனைத்து சமூகச் சேவைத் தளங்கள் வழியாக ‘சாட்’ என்னும் உரையாடலாக உருமாறியது. பின்னர் அதுவே வீடியோ சாட் என்று முகம் பார்த்து பேசும் அளவுக்கும் போனது.      

     இதன் அபார வளர்ச்சி  தசாவதாரத்தில் முகப்புத்தகம் என்னும் தன் மூன்றாவது அவதாரத்தை எடுத்தது. முகப்புத்தகம் எனப்படும் FACEBOOK பற்றி முந்தய இதழில் தெளிவாக்கப் பட்டது. இதன் ஐந்தாவது அவதாரம் டிவிட்டர். டிவிட்டர் என்றவுடனே ஒரு பெரிய வம்பில் சிக்கி சின்னாபின்னமாகி அல்லாடிக்கொண்டு இருக்கும் திரைப்படப் பாடகி சின்மையி விவகாரம் நினைவு வந்திருக்குமே. அதே டிவிட்டர்தான்.

       டிவிட்டரில் அவர் என்ன பேசினார் என்பதும் அவரது டிவிட்டர் நண்பர்கள் என்ன பேசினார்கள் என்பதும் அனைவரும் அறிந்தது. இப்பொழுது நாம் சொல்ல வருவது அவர் பேசிய மேட்டரோ அல்லது அவரால் கொடுக்கப்பட்ட புகாரோ அல்லது அதனடிப்படையில் கைதானவர்களைப் பற்றியோ அல்லது அவர்கள் செய்த தவறோ பற்றி அல்ல. அவர் எதைப் பயன் படுத்தி இப்படி அல்லலில் தாமும் மாட்டி மற்றவர்களையும் மாட்டி விட்டார் என்பதைப் பற்றி. சில நாள்களுக்கு முன்பு கைப்பேசியில் குறுஞ்செய்திகளுக்கு ஒரு கடினமான கட்டுப்பாடு விதித்திருந்தது, ஐந்து குறுஞ்செய்திகளுக்கு மேல் அனுப்ப முடியாமல் துடித்த விரல்கள் சும்மா இருக்க முடியாமல் பழக்க தோஷத்தில் அதற்குப் பதிலாகப் பூ கட்டச் சென்றதாகத் தகவல்கள். 


      ஃபேஸ் புக் போலவே டிவிட்டரும் விரல்களால் வம்பளப்பதுதான். ஃபேஸ் புக்கில் நான்கு மணி நேரம் ஓடும் நம்ம பழைய திறைப்படம் போல எத்தனை ரில் வேண்டுமானாலும் ஓட்டலாம். டிவிட்டரில் அப்படி முடியாது. அது இரண்டு முதல் ஐந்து நிமிடமே ஓடும் குறும்படம் போல. டிவிட்டரில் 140 எழுத்துகள் வரை மட்டுமே எழுத முடியும். அதிகமாக எழுதினால் அதனால் ஜீரணிக்க முடியாது. அதனால் அந்த வம்புகளை அது ஏற்றுக்கொள்ளாது. ஏனெனில் இதனை கைப்பேசிக்கு அனுப்பும் குருஞ்செய்தி சேவையாக வடிவமைத்தனர். தன் பக்கத்தில் தங்களைப் பற்றிய உலகமகா செய்திகளை 140 எழுத்துகளில் எழுதி உலகத்திற்கும் காட்டலாம். விருப்பமில்லை என்றால் உலகளாவிய தன் நண்பர்களுக்கு மட்டும் காட்டலாம். இதனை கட்டுப்படுத்துவது பயணாளியின் கையில்தான் உள்ளது.

     நமக்கோ நாட்டுக்கோ தேவையற்ற உப்பு சப்பில்லாத விஷயங்களை நகைச்சுவையாகப் பேசி சிரிக்க வைப்பதையே குரிக்கோளாகக் கொண்டு பேசுபவர்கள் உலகத்துக்குக் காட்டலாம். சமுதாயம், அரசியல் முதலிய முக்கிய விஷயங்களைப் பற்றி விவாதங்கள்,கருத்துக்களம் நடத்துபவர்கள் கட்டுப்பாடுடனே இருப்பார்கள். இவர்கள் மேற்கூறியவர்களைப் போல அஞ்சா நெஞ்சர்களாய் இருக்க முடியாது. பொதுவாக இதுபோன்ற வீரகள் முகப்புத்தகத்தைப் பயன்படுத்துவது போல அதிகம் டிவிட்டரைப் பயன்படுத்துவது இல்லை.டிவிட்டர் இணையதளம் கூறும் கணக்குப் படி அதில் கணக்கு வைத்துள்ள பயணாளர்களில் 40 சதவீத பயணாளர் மட்டுமே தொடர்ந்து அதனைப் பயன் படுத்துகின்றனர் என்கின்றது. 

     தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னணி பின்னணி திரைப்பட நடிகர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், அரசியல் தலைவர்கள், கட்சிகள், கட்சித் தொண்டர்கள், சமூக நல ஆர்வலர்கள் என்று எழுத்தாளர்கள் தவிர அனைத்துத் துறையினரும் பயன் படுத்துகின்றனர். காரணம் 140 எழுத்துகளுக்குள் என்று கட்டுப் பாடுக்குள் எப்படி என்று நினைத்திருக்கலாம்.பிரபல முன்னணிகளும் பின்னணிகளும், அன்றைய அவர்களின் அலுவல்களை இதில் பதிவு செய்து ஒரு விளம்பரம் கொடுத்துக் கொள்வார்கள். இன்று இந்தப் படப்பிடிப்பில் இருக்கிறேன். இன்று இந்தப் படம் பூசை. வெள்ளிவிழாக் கொண்டாட்டம் நடக்கிறது, இன்று இந்தப் பாடல் பாடினேன். இந்தப் பாடல் வெளியீட்டு விழா, எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது என்று கூறுவார்கள். ஆய்ரக்கணக்கானோர் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வார்கள். எல்லாம் நூற்று நாற்பதுக்குள்.

      இப்படி பிரபலங்களுக்கு ரசிகர்களை விரிவாக்கம் செய்து தருவது டிவிட்டர் சேவை. ஒரு பிரபலம் நம்முடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றார் என்பது ரசிகர்களுக்கு புல்லரிக்கச் செய்யும் மகிழ்ச்சி. பத்திரைகைகளில் மட்டும் படித்து ரசித்துக் கொண்டிருந்த பிரபலங்களின் இன்ப துன்பங்களில் பங்கு பெறுவது என்பது யாருக்கு வாய்க்கும். டிவிட்டரில், முகப்புத்தகத்தில் கணக்கு வைத்திருப்பவருக்கு வாய்க்கும்.  இந்த டிவிட்டர் செய்துள்ள சில சுவையான பரிமாற்றங்கள் பற்றியும் டிவிட்டரின் சேவை பற்றியும் அடுத்த இதழில் பார்க்கலாம்.


(இக்கட்டுரை இம்மாத சோழநாடு கூட்டமைப்பு மாத இதழில் இடம்பெற்றது) 




திங்கள், 8 அக்டோபர், 2012

நரையே நரையே போ! போ!




 
     தசரத மகா மன்னன் கண்ணாடி முன்பு நின்று அலங்காரம் செய்து கொண்டிருந்தாராம். காதோரம் ஒரு வெள்ளி மயிர் இருப்பதைக் கண்டாராம். தனக்கு வயதாகிவிட்டது. இன்னும் ஒரு வாரிசு வரவில்லையே என்று அசுவமேத யாகம் செய்தார் என்பர். காதோர நரை நாற்பதைக் காட்டும் என்பார்கள். ஆனால் இன்று நகர வாசிகளிடம் தலையிலும் சரி விழியிலும் சரி எழுபது ஆனாலும் வெள்ளித்திரை விழுவதில்லை. அப்படிச் சொல்ல முடியாது. வெள்ளித் திரையை கருப்புத்திரை போட்டு மறைத்து விடுகின்றனர். ஆனால் இதற்கு ஆகும் செலவு சொல்லி முடியாது. பட்ஜட்டில் முதலிடம் ஹேர்டை எனப்படும் சாயத்திற்கே கொடுக்கக் கூடிய நாகரிக உலகமாக இன்று உள்ளது. என்ன செய்ய

ஆனால் இயற்கையிலேயே நரை,திரை, மூப்பு இன்றி இருந்தால் எப்படி இருக்கும்?கண்ணாடியைப் பார்த்து நாம் முகம் பார்க்கும் கண்ணாடியில் நரைமுடிகளை பார்த்தவுடனேயே வயதாகிவிட்ட உணர்வும்,சோர்வும் தோன்றிவிடுவதுண்டு.

முடிக்குச் சாயம் பூசத் துவங்கி விடுகிறோம். அமோனியா,காரியம் கலந்த சாயங்கள் பல கெடுதல்களை ஏற்படுத்துகின்றன. நரைமுடியை வேருடன் பிடுங்குவதால்,மெலனின் இல்லாத செல்கள்,அருகிலுள்ள முடிகளின் வேர்க்கால்களில் சிதறி,அங்கு பெருகி, மீண்டும் நரைமுடியை அதிகப்படுத்துகின்றன. இதனால் மேலும் மனச்சோர்வும் கவலையும் ஏற்படுகிறது. இவை மேலும் நரைமுடியை அதிகரிக்கவே செய்கிறது.

நரை ஏன் ஏற்படுகிறது மனித ரோமத்திலுள்ள மெலனின் என்னும் கரிய நிறப் பொருளானது ரோமத்திற்கு கறுப்பு நிறத்தைக் கொடுக்கிறது. இந்த மெலனின்,முடியின் வேர்க் கால்களில் குறையத் துவங்குவதால், கறுப்பு நிறமற்ற முடி முளைக்கத் துவங்குகிறது

மெலனினை உற்பத்தி செய்யும் செல்கள்,முடியின் அடியிலும், தோலிலும்,கறுப்பு நிறமிகளை சேமித்து வைக்கின்றன. இந்த செல்களின் உற்பத்தி குறைந்து, மெலனின் அற்ற செல்கள் வளர்வதால்,நரைமுடி தோன்ற ஆரம்பிக்கிறது.

யாருக்கு நரை வருகிறது. தைராய்டு குறைபாடு,பி12 வைட்டமின் குறைபாடு,வெண்படை போன்ற தோல் நோய்கள்,ஊட்டச்சத்து குறைபாடு, கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் புகைப்பழக்கம்,புரதச்சத்து குறைபாடு, பரம்பரை ஆகியவை, நரை ஏற்படக் காரணங்களாக அமைகின்றன

தலையில் பொடுகு அதிகம் தோன்றினால், அவை வேர்க்கால்களை அடைத்து,மெலனின் உற்பத்தியை குறைத்து,நரையை அதிகப்படுத்துகின்றன என்றும் கூறப்படுகின்றன.

மேலும் தலையை அலசி குளிப்பதற்காக பயன்படுத்தும், சில வேதிப்பொருள் கலந்த வீரியமிக்க ஷாம்புகள் மற்றும் முடி அலசிகளிலுள்ள ஹைட்ரஜன் பெராக்சைடு,வேர்க் கால்களை சேதமடையச் செய்து,கறுப்பு நிறமிகளை அழித்து, நரைமுடிகளை அதிகப்படுத்துகின்றன. புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து குறைவினால், முடியின் கறுமை நிறம் மங்கி,செம்பட்டை நிறம் தோன்றுகிறது. நாளடைவில் இதுவே,நரைமுடிக்கு காரணமாக அமைகிறது. நரைமுடி அதிகரிப்பதற்கு,பி.சி.எல்.,என்ற ஜீன்கள் காரணமாக இருப்பதாக,அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன

மேலதிக தகவலாகக் சிவப்பழகர்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது. அச்சப்படவும் கூடாது. கரிய நிறமுடையவர்களை விட சிவந்த மற்றும் மாநிறமுடையவர்களுக்கு,வெள்ளை நிற முடி,விரைவில் ஏற்படுகிறது.

இந்தியர்களுக்கு,30 வயதுக்கு மேல்,நரைக்கத் துவங்குவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இப்போது,20 வயதிற்கு முன்பாகவே, சிலருக்கு நரை துவங்கி விடுகிறது. இது இளநரை என்று அழைக்கப்படுகிறது. இது பற்றி அதிகம் கவலை கொள்ள வேண்டியதில்லை. காலப்போக்கில் சரியாகிவிடும். பொதுவாகப் பெண்களை விட ஆண்களுக்கே, முடி மிக கறுப்பாக காணப்படுகிறது. இதிலிருந்து பெண்களின் வெள்ளை மனம் போலவே வெள்ளை முடியும் விரைவாக வருகிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.


நரைக்குக் காரணமான மெலனின் அழிவை தடுத்து,நரைமுடிகளை நெருங்க விடாமல் தடுக்கும் அற்புத மூலிகை கரும்பூலா. மயிர்க் கால்களில் தோன்றும் மெலனின் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தி கருமுடியைக் காப்பாற்றுகிறது.
.

இந்தச் செடியின் இலைகள் மற்றும் பழங்களில் உள்ள குளோஜிடோனால்,பிட்டுலின் மற்றும் பிரிடெலின் வேதிப்பொருட்கள், நரைமுடிகளுக்கு காரணமான மெலனின் அழிவை தடுத்து,கறுப்பு நிறத்தைக் கூட்டி,இளநரை ஏற்படாமல் தடுக்கின்றன.

கரும்பூலா பழம் மற்றும் இலைகள், நெல்லிக்காய்,மருதோன்றி இலைகள்,கறிவேப்பிலை இலைகள்,அவுரி இலைகள் ஆகியவற்றை இடித்து, சாறெடுத்துக் கொள்ள வேண்டும். கடுக்காய் தோலை, ஒன்றிரண்டாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். 500 மி.லி., தேங்காய் எண்ணெயுடன் சாறு மற்றும் கடுக்காய் தோல் பொடியைக் கலந்து, கொதிக்க வைக்க வேண்டும். சாறு வற்றியதும் வடிகட்டி, சூடு ஆறியபின், மூடிய பாத்திரத்தில் எடுத்து வைத்து தலையில் தேய்த்து வர நரை காணாமல் போய்விடும் என்கின்றனர். அவ்வப்போது வடிகட்டி தலையில் தேய்க்க வெண்டும். விரைவில் நரைமுடி வராமல் தடுக்கும் மற்றும் இளநரை மாறும். முயற்சி செய்து பார்க்கலாமே. நரையைப் போக்கி இளமையாகத் தோன்றி மகிழ்வாக இருக்கலாமே.


நன்றி குமுதம் ஹெல்த்





சனி, 6 அக்டோபர், 2012

உங்கள் மகனின் விடைத்தாளில் முட்டை மதிப்பெண்ணா..?



அம்மாக்களே இதைக் கொஞ்சம் படிங்க…….


பள்ளிகள் திறந்துவிட்டன. மாணவர்களுக்குப் பாடங்களும் தொடங்கிவிட்டன. கூடவே அம்மாக்களுக்குக் காய்ச்சலும் தொடங்கி விட்டன. மதிப்பெண் காய்ச்சல். பையன் எங்கே முட்டை வாங்கி வந்துவிடுவானோ என்னும் பயக்காய்ச்சல். அம்மாக்களே நீங்கள் அவனுக்கு முட்டைக் கொடுக்கவில்லை என்றால் அவன் என்ன செய்வான். அம்மா கொடுக்காத முட்டையை ஆசிரியரிடம் வாங்கிவிடுகிறான். ஆசிரியர் இரண்டாம் அம்மா என்பார்களே. அவன் கெட்டிக்காரன். அழகாக இரண்டாம் அம்மாவிடம் முட்டையை வாங்கிக்கொள்கிறான்.   பயப்படாதீர்கள் தாய்மார்களே.

தினமும் ஒரு முட்டை அவனுக்கு நீங்களே கொடுத்துவிட்டால் தேர்வில்   அவன் வாங்கும் முட்டைகள்  குறைந்து விடும் என்கின்றனர்.  இதன் மூலம் சொல்ல வருவதென்னவென்றால் தினமும் ஒரு முட்டை கொடுப்பதன் மூலம் மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கலாம்  என்கின்றனர்.  இது எப்படி அறிவுத்திறனை வளர்க்கிறது என்பதை அறியும் முன்பு சாதாரனமாக ஒரு முட்டையில் என்னென்ன சத்துகள் உள்ளன என்று பார்ப்போம்.

          முட்டைகளைப் பொருத்து கலோரிகளின் அளவு கூடும் அல்லது குறையும் என்றாலும் சுமார் ரக ஒரு முட்டையின் வெள்ளைக்கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது. உடலுக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச் சத்துக்களும் முட்டையில் உள்ள. முக்கியமாக முட்டையில் தேவையான அளவு கொழுப்பு மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது.

          முட்டையில் தைராய்டு ஹார்மோன் சுரப்பதற்குத் தேவையான அயோடின் உள்ளது. பற்கள் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பாஸ்பரஸ் உள்ளது. காயங்களை குணமாக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான துத்தநாகம் அதிகம் காணப் படுகிறது

          முட்டையில் கெட்ட கொலாஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, கெட்ட கொலஸ்ட்ரால் இரத்தத்தில் சேராது.

          இத்துடன் இதயத்திற்குப் பாதுகாப்பான ஃபோலிக் அமிலம் மற்றும் பி குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன

          நம்ம நாட்டுல சத்துணவு மையத்தில் முட்டை வைத்துள்ளோம். அமெரிக்காவில் முட்டைக்காகவே சத்துணவு மையம் வைத்துள்ளார்கள். தினமும் குழந்தைகளுக்கு ஒருமுட்டை கொடுப்பதன் மூலம் அவர்களின் கற்கும் திறன் அதிகரிக்கிறது என்கின்றன முட்டைச் சத்துணவு மையத்தின் ஆய்வுகள். காலை உணவுடன் முட்டை வழங்குவதால் கவனிக்கும் தன்மை அதிகரிப்பதாகவும்,வாசிப்புத் திறன் கூடும் என்றும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

          குழந்தைகளின் எடையை சீராக வைத்திருக்கும். எடைக்குறைவான குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுப்பதன் மூலம் சத்துக்கள் கூடுவதோடு உடல் எடை அதிகரிக்கும்.

          வளரும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிகவும் அவசியம். தினம் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும். முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள ஆண்டி ஆக்சிடென்டல் கண்பார்வையைத் தெளிவாக்கும்.

          குழந்தை பருவத்தில் இருந்தே தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் வயதான பின்பு ஏற்படக்கூடிய கார்ட்க்ராக்ட் பிரச்சினையில் இருந்து தப்பலாம். முட்டையில் உள்ள வைட்டமின் டி உயிர்ச் சத்து எலும்புவளர்ச்சிக்கு உதவுகிறது.

          நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதயக் கோளாறு மற்றும் பக்கவாத நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. தலைமுடி வளர்ச்சி மற்றும் தோல் பளபளப்பிற்கு முட்டை சிறந்த பங்காற்றுகிறது.

குழந்தைகளுக்கு மட்டுமல்ல. பெரியோர்களுக்கும் முட்டை ஆரோக்கிய உணவு என்கிறது ஆய்வு. வாரத்திற்கு ஆறு முட்டை உட்கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது 44 சதவிகிதம் குறைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள்.

இவர்கள் உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதய நோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை. எனவே, இதயநோய் அபாயமும் இல்லை.

முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை. ஆனால், அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்திற்கு எந்தவிதமான கெடுதலையும் செய்யாது என்கிறது ஹார்வார்டு பள்ளி. சரிவிகித உணவு சத்துணவுத் திட்டம் தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்கவேண்டாம் என்றும் கூறுகிறது.

1976ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக்கப்பட்டு குறிப்புகள் சேர்க்கப்பட்டன. இது 2 வருட ஆய்வு. இது போக, 1986 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க பல் மருத்துவர்கள், கண் மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள் ஆகியோர் தினமும் முட்டை சாப்பிட்டனர்.

அவர்களிடம் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை கேள்வி கேட்கப்பட்டது. அந்த மருத்துவர்களின் கொலஸ்ட்ரால் அளவு, கடந்த 12 ஆண்டுகளில் அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக் அபாயமும் ஏற்படவில்லை.

80 ஆயிரம் நர்சுகளின் உடல் நலம் பற்றிய 14 ஆண்டு கால மருத்துவக் குறிப்பேடுகள், 37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவக் குறிப்பேடுகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதுவும் பயமில்லாமல் சாப்பிடலாம் என்று உறுதியாகத் தெரிவித்தது.

சாதாரண அவித்த முட்டையில்தான் இவ்வளவு நன்மைகள். ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் அளவுதான் கொலஸ்ட்ரால் நம் உணவில் சேரலாம். ஒரு முட்டையில் 213 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் இருக்கிறது. இதுவே இதயத்துக்கு நலம் பயக்கும். 

சொல்றாங்களே என்று நீரழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிட்டு விடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். அவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி வாரம் ஒரிரு முட்டை மட்டுமே சாப்பிடலாம். வடை போச்சே….

சரி.. தொடங்கிய இடத்திற்கு வருகிறேன். என் அனுபவமும். எனக்குத் தெரிந்த ஒரு மாணவி தினமும் காலையில் இரண்டு முட்டை சாப்பிடுவேன் என்பாள். அவள் விளையாட்டு வீராங்கனை என்றுதான் அந்தப் பள்ளி அவளது பெற்றோரும் எல்லாரும் நினைத்தனர். ஆனால் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் வந்ததும்தான் அவள் முட்டையின் ரகசியம் தெரிந்தது. படிப்பிலும் அவளே முதலிடம் என்பது. சத்தியங்க… நம்புங்க….

இதையெல்லாம் அறியாமலா சத்துணவு திட்டத்தில்  குழந்தைகளுக்கு வாரத்திற்கு ஒரு முட்டை என்று இருந்ததை வாரம் முழுவதும் முட்டை என்று அறிவித்தாங்க… .. தராங்களான்னு கேக்கக்கூடாது.. ஹி ஹி ஹி.. இதுக்கு மேல நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்…..வரட்டா…. ஜூட்…..



நன்றி குமுதம் ஹெல்த்