“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

திங்கள், 7 மே, 2012

கருப்பழகி “யவ்வனப் பிரியா”



கொழு கொம்பு கண்டவிடத்து ஓடிப் படரும் கொடிமகள்தான் இந்த யவனப்பிரியா. இவளை அறியாதவர்கள் இருக்க முடியுமா?. நாம் அன்றாட வாழ்வில் ஒரு சிலரைப் பார்த்து இருப்போம். பழகி இருப்போம்; ஆனால் அவர்களின் பெயர் தெரியாமல் அல்லது அறியாமல் இருந்து விடுவது உண்டு. அதே போல் இந்தப் பசுங்கொடியாளையும் பார்த்தும் பயன் படுத்தியும் இருப்போம் என்று கூறுவது பொருந்தாது. கண்டிப்பாகப் பயன் படுத்தியுள்ளோம்; பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம் என்று கூறினால அது பொருந்தும். ஆனால் அவளின் புனைப்பெயர் தெரியாமல் இருந்திருக்கிறோம் என்பதே உண்மை. இவள் இருந்தால் நீங்கள் நஞ்சைப் படைக்கும் உங்கள் பரம எதிரி வீட்டிலும் படைத்ததைச் சாப்பிட்டு பதறாமல் ஒரு ஏப்பம் விட்டு திரும்பலாம். இவளுக்குப் 'பைங்கறி' என்று ஒரு புனைப்பெயரும் உண்டு. அதுமட்டுமல்ல 'மிறியல்' என்னும் மற்றொரு புனை பெயரும் கொண்டவள். இவள் யார் என அறிய இந்தக் குறிப்புகள் போதும் என்று நினைக்கிறேன்..

இவளின் அங்க அடையாளம் வேறு கூற வேண்டுமா? சரி இவள் கட்டம் போட்ட சேலை கட்டித் தன் உடல் மறைத்த அட்டக்கருப்பழகி. நம் உடலைக் காப்பதில் கட்டிக் கரும்பழகி. சித்தன் அகம் எத்தன் அகம் எதுவானலும் சீர்மை சேர்க்கின்ற வண்ண மணியழகி. ஏடுபல எடுத்தியம்பும் எழில் வஞ்சிக் கொடியழகி. கடல் பறந்து மணம் பரப்பும் சின்னக்குயிலழகி. கோல மலையழகி கொட்டி வைத்த கருமை முத்தழகி. அந்தரத்தில் ஆடுகின்ற பச்சை மயிலழகி.
ஆம் மிளகுப்பெண்ணே அவள்.

"வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி?"

என்று குதம்பைச் சித்தர் பாடுவதைக்கேட்கும் போது பெருங்காயம் மிளகு சுக்கு இவையே நன்காயத்திற்கு தேவயானது என்பது புலப்படுகிறது. மருந்துப் பொருளானப் பைங்கறி, மிறியல், யவனப்பிரியா என்றெல்லாம் அழைக்கப்படும் மிளகு பற்றிய இலக்கியச் செய்திகள் ஏராளம்

மிளகுப்பெண்ணின் ஆட்சியில்தான் என்ன முரண் பாருங்கள்? இந்தக் கார அழகி படர விரும்பும் தோள்கள் இன்சுவை இளவரசர்களாம் முக்கனிகளில் ஒருவரான பலாக்கனியின் தோள்கள். இதோ பாருங்கள் சிறுபாணன் கூறுகிறான் சாட்சி.

“பைங்கறி நிவந்த பலவின் நீழல்” (சிறுபாணாற்றுப்படை,43)

இவனுக்கு அடுத்து மிளகாள் விரும்பித் தன் தலையைச் சாய்க்கும் தலைவன் தோள் சந்தனத்தான் தோள். ஆம் சந்தன மரம். சான்று இதோ,

“கறிவளர் சாந்தம்” (அகநானூறு,2)

மலைச்சாரலில் மணம் பரப்பும் இவளால் மலைச்சாரல் முழுதும் நறுமணமும் இலக்கியப் புகழ் மணமும் பெறுகிறது.

“கறி வளர் அடுக்கம்” (குறுந்தொகை,288)

கிழக்கிந்தியத் தீவுகளிலும் சேர நாட்டிலும் அதிகமாக வளம் சேர்த்த இந்த அழகிகளில் சேரனின் குலக்கொழுந்தே பெரும் புகழ பெற்றாள். சேர நாட்டிலிருந்து கால்நடை வீரர்களின் கையகப்பட்டும் பொது எருதுகளின் மீதேறியும் மிளகாள் காவிரிப்பூம்பட்டினம் வந்துள்ளாள் என்றும் சங்கம் சான்று பகர்கிறது. கால்நடையாக வந்தவளை,

“காலில் வந்த கருங்கறி மூடை” (பட்டினப்பாலை,186) 

என்று அதுமட்டுமல்ல சுங்க வரி செலுத்தும் வழக்கம், இன்று நாம் பைபாஸ் என்று கூறும் மாற்று வழிபோல சுங்கம் செலுத்திச் செல்லுகின்ற பெருவழியும் இருந்திருக்கிறது என்னும் பல செய்திகளும் கிடைக்கிறது.

“தடவிநிலைப் பலவின் முழுமுதல் கொண்ட 
சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப மிரியல் 
புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து 
அணர்ச்செவி கழுதைக் சாத்தோடு வழங்கும் 
உல்குடைப் பெருவழி” (பெருபாணாற்றுப்படை,77-800)

'உல்கு' என்பது சுங்க வரி என்று பொருள் படும்.'கறி' 'மிறியல்' என்றெல்லாம் பல பெயர்களில் உலாவரும் இவளது இயற் பெயர் மிளகு. இவளை ஏன் யவனப்பிரியா என்று கூறுகிறோம். ஐரோப்பாவின் யவனர்கள் இவளை விரும்பி அதிக விலை கொடுத்து மணந்து (வாங்கி) சென்றதால் இவள் யவனப்பிரியா என்றே அழைக்கப்பட்டாள்.

மிளகாள் அறையிலும் ஆடி அரங்கத்திலும் ஆடியவள் ஆயிற்றே. கருப்புக்கு அழகு செய்து காத தூரத்தில் இருந்து பாரு என்பது தமிழ்ப் பழமொழி. அதுபோல கரிய நிறத்தாலோ, அவளது அரிய குணத்தாலோ, நரிய மணத்தாலோ கவரப்பட்ட மிளகுப்பெண் சங்க காலத்தில் பொன்னுக்கு இணையாக வைத்துப் போற்றப்பட்டுள்ளாள். அக்காலத்தில் தமிழ்நாட்டோடு யவனர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். கிரேக்கர், ரோமானியர், எகிப்தியர், பாரசீகர், அராபியர் ஆகிய அனைவரையும் 'யவனர்' என அழைக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறது என்பது இலக்கியச் செய்தி. இருந்தாலும் பெரும்பாலும் ரோமானியரே மிகுதியாகத் தமிழகம் வந்துள்ளனர். பொற்காசுகளைக் கொடுத்து மிளகை வாங்கிச் சென்றுள்ளனர். பாலக்காடு, போளுவாம்பட்டிக் கணவாய் வழியாக மேற்குக் கடற்கரைக்கு (கொங்கு நாடு) மிளகு, சந்தனம், தந்தம், ஏலம், அகில், தேக்கு, இலவங்கம், சில விலங்குகள், பறவைகள் ஆகிய பல பொருள்களுக்காக வந்த ரோமானியர் மிகவும் விரும்பி அதிக விலை கொடுத்து வாங்கிச்சென்றது மிளகைத்தான். குறிப்பாக முசிறி மிளகைக் கொடுத்து பொன்னைப் பெற்றுள்ளது. இக்கருத்தை,

“கள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க 
யவனர் தந்த வினைமாண் நன்கலம் 
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 
வளங்கெழு முசிறி” (அகநானூறு,149)

என்று எருக்காட்டூர் தாயங்கண்ணனார் பெருமையாய்க் கூறுகிறார்.

“மன்கைகுவைஇய கறிமூடையால் 
கலிச்சும்மைய கரைகலக் குறுந்து கலந்தந்த பொற்பரிசம் 
கழித்தோணியால் கரைசேர்க்குறுந்து” (புறநானூறு,343)

செக்கச் சிவந்த சிவப்பழகியாம் மிளகாயைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து அட்டக் கருப்பழகியாம் இவளைப் பயன்படுத்துவதே உடல் நாட்டிற்கு உகந்த ஆட்சி என்று பலரும் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அது போலவே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கொடி கட்டிப் பறக்கும் இவளைச் சமையலுக்கு அதிகமாகப் பயன்படுத்தியும் வருகிறோம். அக்காலத்திலும் மிளகைச் சமையலுக்குப் பயன்படுத்தி உள்ளமையை,
”துறுகல் நண்ணிய கறியிவர் படப்பை” (அகநானூறு)

“பசுங்காய்ப் போழொடு கறிகலந்து 
கஞ்சக நறுமுறி யளையீ” (பெருபாணாற்றுப்படை)

என்னும் சங்கப் பாடல்கள் சான்று கூறுகின்றன

.பைப்ராஸே (PIPERACEAE) என்னும் குலத்தில் உதித்த குலக்கொழுந்தாகிய இவளின் குடும்பப் பெயர் பைபர் நிக்ரம் (PIPER NIGRUM). இந்தக் குடும்பத்து வாரிசுகள் மிளகு, வால்மிளகு என்னும் இருவர். மலையாளி, குறுமிளகு, கோளகம் என்றெல்லாம் பட்டப்பெயர்களை இட்டு இவர்களை அழைப்பது வழக்கம்.

பத்து அல்லது பனிரெண்டு அடிகள் உயரமாக வளரக்கூடிய இவளது இலைகள் வெற்றிலை இலைகள் போல அகலமாக இருக்கும்.
இனி இவளின் ஆற்றலைப் பார்ப்போமா?

மனிதன் சுறுசுறுப்பாக இயங்க உதவும் அவன் உடலின் முக்கியமான பகுதி நரம்பு மண்டலமே. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால்தான் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராக இருக்கும்.

கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் ஏராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது.

மனிதன் உண்ணும் எவ்வளவு கடினமான உணவாக இருந்தாலும் அதைச் செரிக்க வைப்பதில் மிளகுக்கு நிகர் மிளகே..

உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது. உடலில் தோன்றுகின்ற வாயுவையும் நீக்கி, உடலில் உண்டாகும் சுரத்தையும் போக்கும் தன்மை உடையது.

தொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாயுத் தொல்லைகள் முதலியவை நீங்க மிளகை நன்கு பொடி செய்து ஐம்பது கிராம் அளவு எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் அரை லிட்டர் சேர்த்து அரை மணி நேரம் நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொண்டு, மூன்று வேளை அருந்தி வர உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வில்வ இலையைக் காய வைத்து பொடியாக்கிக் கொண்டு மிளகுத்தூளுடன் சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோயில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

சாதாரண சளி, காய்ச்சல், தொண்டை வலி எல்லாவற்றிற்கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை அருந்த சளி, காய்ச்சல், தொண்டை வலி எல்லாம் சிட்டாய்ப் பறந்து போகும். மிளகைச் சுட்டு அதன் புகையை மூக்கின் வழி இழுத்தால் சளித்தொல்லைக்கு இதமும் நிவாரணமும் உடனே கிட்டும்.

வால் மிளகுத்தூளுடன் சிறிதளவு சிறுகுறிஞ்சான் இலைச் சூரணத்தைச் சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட நீரிழிவு நோயும் குணமாகும்.
சலி, காய்ச்சலைத் தொடர்ந்து பாகுபாடின்றி எல்லோரையும் துன்பத்துள் ஆழ்த்தும் ஒரு நோய் தலைவலி. ஒற்றை, இரட்டை, பின்மண்டை வலி என்று எந்தத் தலைவலியாக இருந்தாலும் மிளகை அரைத்து நெற்றியில் பற்றுப் போட தலைவலி போயே போகும்.

பத்து மிளகுடன் ஒரு கைப்பிடி அறுகம் புல்லைச் சேர்த்து மையாக அரைத்து அதைக் கசாயமாகக் காய்ச்சி அருந்தினால் எப்படிப்பட்ட விஷக்கடியும் வந்த வழிச் சென்று விடும்.

உடலில் எங்கேனும் சுளுக்கு ஏற்பட்டால் சிறிது மிளகுத்தூளைச் சிறிது நல்லெண்ணெயில் கலந்து பற்று போட்டால் சுளுக்கு வழுக்கென்று ஓடிவிடும்.

பற்சொத்தை, பல்வலி ஆகியவற்றுக்கு மிளகுத்தூளையும் உப்பையும் கலந்து தினமும் பல் துலக்கி வர பற்சொத்தை காணாமல் போய்விடும்.
மயிர்ப் புழுவெட்டு உள்ளவர்கள் மிளகுத்தூளுடன் வெங்காயம், உப்பு சேர்த்து அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர அடர்த்தியாக முடி வளர்ந்து விடும்

இது மிகவும் முக்கியமானது. மகப்பேறு இல்லாதவர்கள் மிளகுடன் பாதாம் பருப்பையும் சேர்த்து அரைத்துப் பாலில் கலந்து குடித்து வர, மழலை வீட்டில் அடியெடுத்தும் வைக்கும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மிளகை அன்றாடம் சமையலில் பயன் படுத்துவது தமிழர்களாகிய நம் கடமை.

மிளகைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம். ஆம் நாள்தோறும் உணவில் மிளகைச் சேர்த்துக் கொண்டால் நாள்தோறும் உடலில் அழகு கூடிக் கொண்டே வரும். எப்படி என்று கேட்கிறீர்களா? தினம் தினம் மிளகு ரசம்.. அருந்தும் உடல்களில் கொஞ்சும் தினம் தினம் அழகு ரசம்.


நன்றி குமுதம் ஹெல்த்

4 கருத்துகள்:

  1. மனம் கவர்ந்த அழகான நடையில் கருப்பு தங்கமாம் மிளகுக்கு அருமையான் அழகான புகழாரம் சூட்டி பெருமைப்படுத்திய பயனுள்ள பதிவுக்கு மனம் நிறைந்த இனிய பாராட்டுகள் .....

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வருகை என்றும் இனிமை இராஜராஜேஸ்வரி. பாராட்டு இனிமையிலும் இனிமை. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. கருப்பழகியின் வர்ணனையில் மயங்கி விட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருப்பு என்றால் நீங்கள் மயங்குவீர்கள் என்று எனக்குத் தெரியும் சிவா.
      வருகைக்கு நன்றி

      நீக்கு