“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

திங்கள், 28 நவம்பர், 2011

கண்ணீர் அஞ்சலி.


        
              இன்று என் பெருமதிப்பிற்குரிய என் மீது தனிப்பட்ட அன்பும் அக்கறையும் கொண்ட பேராசிரியர் முனைவர். இராம. வேனுகோபால் இறைவனடி சேர்ந்தார். இன்னும் அரை மணி நேரத்தில் இறுதி ஊர்வலம் என்ற அறிவிப்புடன் எனக்குச் செய்தி கிட்டிய போது நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில். அப்போது மணி மூன்றரை. .நான் துவண்டு
சோர்ந்த போதெல்லாம் அன்பு நீர் தெளித்து என்னை துளிர்க்கச் செய்த அந்த அன்பு .தெய்வமான பேராசிரியரின் முகமலரைக் கூடக் காணும் பேறு பெறாத துர்ப்பாக்கிய நிலையை எண்ணி வருந்துகிறேன். அவர் இறுதியாக கையொப்பமிட்டது என் முனைவர் பட்ட அறிக்கையில்.என்பதும் அவர் இறுதியாக்ச் சொற்பொழிவு ஆற்றிய மாநாடு எங்கள் அமைப்பான பைந்தமிழ்ச்சோலையில்தான் என்பதும் எண்ணும்போதெல்லாம் கண்ணீர் வரியிடுகிறது கன்னங்களில்.

        அவர் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த போது “அடப் போம்மா’ என்னத்தக் கட்டிக்கிட்டுப் போகப்போறோம்; நீ உத்தரவு போடும்மா; நான் செய்து முடிக்கிறேன். இங்கு நீதான் தலைவி. நான் உன் அடிமை” என்றெல்லாம் விளையாட்டாகச் சொலவதுடன் வேண்டிய அனைத்தையும் எனக்கு மட்டுமன்றி அனைத்து மாணவர்களுக்கும் செய்து அவர்களை மகிழ்வித்த அன்பின் இருப்பிடம் அவர்.
         “நம்மை மறந்தாரை நாம் மறந்தறியோம்; ஏம்மா மாசத்துக்கு ஒரு முறையாவது ஒரு போன் பண்ண மாட்டியா என்று அன்புடன் கடிந்து இன்று ஒரு வைவா வா; இன்று ஒரு செமினார் வா” என்று அன்பு அழைப்பு விடுக்கும் அன்பை எண்ணி மனம் கசிந்து உருகுகிறது. நானும் அதிகமாக உரிமை எடுத்துக்கொண்ட பேராசிரியர் என்றால் அது இவராகத்தான் இருக்க முடியும்.
“எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வாம்மா... நான் சொல்லச் சொல்ல நீ எழுதி முனைவர் பட்ட ஆய்வேட்டை ஒப்படைத்து விடும்மா” என்று ஆயிரம் முறை கூறிய அந்த அன்பை எப்படி மறப்பது?
               
        சிறு சிறு விதி மீறல்களால் ஒரு மாணவர் பயனடைவார் என்றால் அதனால் பரவாயில்லை என்று கூறி எவ்வாறாயினும் மாணவர்கள் பயனடைய வேண்டும் என்று அவர்களின் நலனில் அக்கறை காட்டும் கனிவை எண்ணி பல முறை வியந்துள்ளேன். எதையும் வெளிப்படையாகப் பேசும் வெள்ளை மனத்தால் மாணவர்களின்

             மனங்களையெல்லாம் கொள்ளை கொண்ட அவர் ஆன்மா சாந்தி அடையவும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஆறுதல் அடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மனம் கொள்ளாச் சுமையுடன்....


ஞாயிறு, 20 நவம்பர், 2011

மொழிப்பாடம் கற்பித்தலில்.....

 


“கல்வி பயிற்றலில் பல்வேறு மாற்றங்கள் வந்த
விடத்தும் தமிழின் பண்பாட்டுப் பெறுமானம்
காரணமாக, அதன் பயில்வு முறையில்
அதிக மாற்றங்கள் ஏற்பட்டன என்று
கூறமுடியாது. தமிழ் வகுப்பும் தமிழாசிரியரும்
கல்விப் போக்கில் பொதுவான ஓட்டத்துடன்
இணையாப் பொருளாகக் கொள்ளப்படும்
ஒரு நிலைமை காணப்பட்டு வந்துள்ளது”
-முனைவர் கா. சிவத்தம்பி.- 

கற்றல் என்பது கற்பித்தலின் மூலமே நிறைவு பெறுகிறது. பள்ளிக் கல்வியில் சிறப்பிடம் பெற வேண்டிய பாடங்களுள் ஒன்று மொழிப்பாடம். மொழித் திறனைப் பெறுபவர் நடைமுறை வாழ்க்கையுடன் பொருந்தி வாழும் வல்லமையைப் பெறுவர். அம்மொழித் திறனை மாணவர்கள் பெறுவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் மொழியாசிரியர்கள். ஆனால் மொழியாசிரியர்கள் என்றாலே பிறதுறை அறிவும் பயன்பாடும் அற்றவர்கள் என்ற எண்ணம் பரவலாக நிலவி வருகிறது. நவீன தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள, தொலைத் தொடர்புச் சாதனங்களின் ஆட்சிக்காலமான, அந்நிய மொழி மோகம் நிறைந்த இன்றைய சூழலில் மொழிப்பாடம் கற்பித்தல் என்பது மொழியாசிரியர்களை எதிர் நோக்கியுள்ள பெரிய சவாலாகும். இக்காலக் கட்டத்தில் மொழிப்பாடம் கற்பிக்க வேண்டிய முறைமைகளையும் மொழிப்பாடம் கற்பிப்பதில் உள்ள குறைபாடுகளையும் தொடர்ந்து ஆராய வேண்டியது தேவையாகிறது.

நாப்பழக்கமே செந்தமிழ்
 
 
பொதுவாக இந்நூற்றாண்டைத் தொலைத் தொடர்பு யுகம் என்றழைக்கலாம். கணினியில் மூழ்கிப் போவதைப் போலவே தொலைக்காட்சியிலும் மூழ்கிப் போய் விடுகின்றனர் மாணவர்கள் சிலர். தொலைக்காட்சியின் உச்சரிப்புப் பிழைகள் மாணவர்களிடமும் பதிந்து விடுகின்றன, முக்கியமாக மாணவர்கள் விரும்பிப் பார்க்கும் சன் மியூசிக், ஜாக்பாட் (ஜாக்பாட்டில் கேள்வி என்பது பல ஆண்டுகளாக, கேல்வி என்றே உச்சரிக்கப்பட்டதைத் தமிழ் அறிந்தவர்கள் அறிவர்) முதலிய நிகழ்ச்சிகளில் ல, ள, ழ, ந, ன, ண, ர, ற ஆகிய எழுத்துகள் ஒலி வேறுபாடுகள் இன்றியோ அல்லது தவறாகவோதாம் பெரும்பாலும் ஒலிக்கப்படுகின்றன. புதிதாகப் படித்து முடித்து வரும் தமிழாசிரியர்களில் சிலரும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழ் மொழியின் தனிச்சிறப்பே சிறப்பு கரம். இவ்வொலி இன்று தன் சீரிழந்து நிற்கிறது.
“நுனிநா அணரி அண்ணம் வருட
ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்” (தொல்.எழுத்து: 95)
நுனி நாக்கு மேல்நோக்கி வளைந்து அண்ணத்தைத் தடவ ழகரம் பிறக்கிறது.
“நாவிளிம்பு வீங்கி யண்பல் முதனுற
ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்” (தொல்.எழுத்து: 96)
நாக்கு மேல்வாய்ப் பல்லின் அடியில் அண்ணத்தைத் தொட்ட அளவில் லகரமும், அண்ணத்தை வருட ளகரமும் பிறக்கிறது.இவ் இலக்கணங்களை மனத்தில் நிறுத்திக் கொண்டு இவ்வொலிகளை உச்சரித்துப் பழகுதல் வேண்டும். மாணவரோ பிறரோ யாராகவிருப்பினும் செய்தித் தாளைப் படித்து அதனை ஒலிப்பேழையில் பதிவு செய்து,  மீண்டும் மீண்டும் போட்டுக் கேட்கும்போது தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியும். இப்பயிற்சியின் மூலம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பதை உணர முடியும். இதற்காகவே
“ஓடுற நரியில ஒரு நரி கிழநரி கிழநரி தலையில ஒரு முடி நரைமுடி.
உருளுது பெறழுது தத்தளிக்குது தாளம் போடுது”
என்னும், இது போன்ற நா நெகிழ் பயிற்சிகள் நம் முன்னோர்களால் முற்காலத்தில் கொடுக்கப்பட்டன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எழுத்தறியத் தீரும் இழிதகைமை

எண்களின் கூட்டு கணிதம் என்றும் எழுத்துக்களின் கூட்டு இலக்கணம் என்றும் கூறுவர். பண்டைய முறையில் உயிர் எழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் ஒலிக்கக் கற்பிக்கும்போது இரண்டு இரண்டு எழுத்துக்களாகச் சேர்த்துக் கூறுவர். (விதி விலக்கு ஐ, ஒள.
அஆ    இஈ    உஊ    எஏ   ஒஓ
கங்    ச்ஞ்   ட்ண்   த்ந்    ப்ம்    ய்ர்   ல்வ்   ழ்ள்   ற்ன்
இவ்விணை எழுத்துகளை இன எழுத்துகள் என்பர். இவற்றுள் மெய்யெழுத்துக்களை ஒலிக்கப் பயிற்சி கொடுக்கும் போது இம்முறையில் எழுதியே பயிற்றுவித்தல் அவசியமாகும். மேலும் ண, ன, ந ஆகிய மூன்று எழுத்துகளையும் முறையே டண்ணகரம், தந்நகரம், றன்னகரம் என்றே கூறச் செய்தல் வேண்டும். இம்முறையில் பயிற்றுவித்தலால் ண் என்னும் எழுத்துதான் டகரத்தின் முன் வரும், ‘ந்’ என்னும் எழுத்தின் பின் ‘த’ தான் வரும் ‘ன்’ என்னும் எழுத்தின் பின் ‘ற்’ தான் வரும் என்பதையும் புரிந்து கொள்ளவும் நினைவில் நிறுத்தவும் மாணவர்களுக்கு எளிதாக இருக்கும். மேலும் கற்பிக்க வேண்டிய முறையும் இதுவே. ஆனால் மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்கள் கூட மூன்று சுழி ண் இரண்டு சுழி ன்  என்றுதான் கூறுகின்றனர். மாணவர்களின் இந்நிலைக்கு அவர்களுக்கு முறையாகக் கற்பிக்காமையே காரணம் எனலாம். “எழுத்தறியும் தீரும் இழிதகைமை” என்பார் சிவஞான முனிவர். எனவே மொழிப்பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் எழுத்துகளையும் அவற்றை ஒலிக்கும் முறைகளையும் அவற்றுக்கு வழங்கும் பெயர்களையும் அறிந்து முறையாகப் பயிற்றுவித்தால் மாணவர்களின் இவ் இழித் தகைமை நீங்கும். மொழிப்புலமை ஓங்கும்.

இலக்கணமும் இன்சுவையே

ஆங்கில வழியில் பயில்வதே இன்றைய நாகரிகமாக உள்ளது.தமிழ்ப் பாடத்தை ஆர்வமின்றிப் பயில்வதும் அதிலும் இலக்கணப் பாடத்தைப் புறக்கணிக்கும் சூழலும் உருவாகி வருகிறது. கருத்தைப் பிறருக்கு எடுத்துச் சொல்வது பேச்சும் எழுத்தும். மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் துணை புரிவது இலக்கணமே. இலக்கணம் கற்பிக்கும் போது பழைய மரபுகளை மீறாமல் புதிய உத்திகளைப் பயன் படுத்தி ஆர்வத்தைத் தூண்டுவது கற்பித்தலில் தலையாய ஒன்றாகும்.
மனத்தி னெண்ணி மாசறத் தெளிந்து
இனத்தின் சேர்த்தி உணர்த்தல் வேண்டும் (தொல்.பொருள்: 656)

என்பது தொல்காப்பியம். இலக்கண விதிகளை இலக்கிய வழிகளில் மட்டுமல்லாமல் உலகியல் வழிகளிலும் பொருத்திக் காட்டுதல் வேண்டும் என்பதையே தொல்காப்பியர் “இனத்திற் சேர்த்தி” என்னும் தொடரால் உணர்த்துகிறார். கற்பித்தல் நிலையில் இலக்கணம் கற்பிக்க கரும்பலகையை மிகுதியும் பயன்படுத்துதல் வேண்டும். ஒப்புமைக் கூறுகளைக் கரும்பலகையில் எழுதிக் காட்டுதலும் ஐயப் பகுதிகளைத் தடை விடைகளைக் காட்டி தெளிவித்தலும் வேண்டும்.
இலக்கணப் பாடத்தில் உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில் முக்கிய இடத்தைப் பெறுவது இலக்கணக் குறிப்பு, பகுபத உறுப்பிலக்கணம், புணர்ச்சி இலக்கணம் ஆகிய மூன்றும். பிற்காலத்தில் எந்நிலையிலும் இவ்விலக்கணங்கள் மாணவர்களுக்குப் பயன்படாது போயினும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுத் தரும் பகுதிகள் இவை. இப்பகுதியைக் கற்பிக்கும் ஆசிரியர் மூன்று அல்லது நான்கு மாணவர்களை ஒரே நேரத்தில் அழைத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சொற்களைக் கொடுத்து, கரும்பலகையில் இலக்கணக் குறிப்பையும் உறுப்பிலக்கணத்தையும் எழுதச் சொல்லுதல் வேண்டும். உறுப்பிலக்கணம், இலக்கணக் குறிப்பு இரண்டையும் ஒரே நேரத்தில் எழுதச் சொல்லும் போது மாணவர்கள் இரண்டு இலக்கணங்களையும் ஒரே நேரத்தில் பயிற்சி பெறுவதுடன் பகுபத உறுப்பிலக்கணம் இலக்கணக் குறிப்பின் அடிப்படையிலேயே அமையும் என்பதையும் மாணவர்கள் அறிவர். இலக்கணக் குறிப்பு தொழில் பெயராகவிருப்பின் விகிதி, தல், அல், அம், ஐ, கை இவற்றுள் ஒன்றாக இருக்க வேண்டும், வியங்கோள் வினை முற்றாக இருப்பின் க, இய, இயர் என்னும் மூன்றில் ஒன்றாக அதன் விகுதி அமைதல் வேண்டும் முதலியவற்றை அறிந்து சொற்களைப் பகுப்பர். எனவே உறுப்பிலக்கணம் எழுதும்போது அதன் இலக்கணக் குறிப்பையும் எழுதச் சொல்லுதல் இன்றியமையாதது. சொற்களைப் பிரிக்கவும் சேர்க்கவும் பழகிக் கொண்டால் உயர்நிலை வகுப்புகளில் இலக்கிய வாசிப்பும் எளிதாக இருக்கும்.

இலக்கணக் குறிப்பைப் பயிற்றுவிக்கும் போது மாணவர்களுக்கு அனுபவம் மிக்க பொருள்களின் அடிப்படையில் எடுத்துக்காட்டுகள் அமைந்திடின் ஆர்வம் மிகுவதுடன் மனத்தில் நிறுத்துவது எளிதாகிறது. சான்றாக உருவகத்தை விளக்க “என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே” (திரைப்பாடல்) முதலிய பாடல்களை மூலம் விளக்கலாம். “புதிய வானம் புதிய பூமி” என்பதில் வானம் X பூமி என்று வருவது முரண் தொடை என்றும் “ஓ ப்ரியா! ப்ரியா!” என்னும் பாடலில் ப்ரியாவை அழைப்பது விளி வேற்றுமை என்றும் “மலை மலை மலை மலே மலே” இப்பாடலில் இப்படி அடுக்கி வருவதுதான் அடுக்குத்தொடர் என்றும்,
“சலசல சலசல இரட்டைக் கிளவி
தகதக தகதகஇரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால்
பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ”
இப்பாடல் வழி இரட்டைக்கிளவியின் விளக்கமும் தரலாம். ஆசிரியர் மனத்தின் எண்ணி மாசறத் தெளிந்து இவ்வுத்திகளைப் பயன் படுத்தி மாணவர்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தால் இலக்கணப் பாடமும் இனிமையான அனுபவமாக அமையும். ஆனால் இம்முறையில் பயிற்றுவிக்கும் போது ஆசிரியருக்குத் தெளிவு இருந்தால் மட்டுமே மாணவர்களுக்கு ஐயங்கள் எழாவண்ணம் பயிற்றுவிக்க இயலும். அதே சமயம் ஊடகங்களின் மொழிகளை உள்வாங்கிக் கற்பிக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருத்தல் வேண்டும். ஊடகங்களுக்குரிய பண்பாட்டு நெறிகள் வகுப்பறைக்குள் வராமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும்.

இலக்கணப் பாடம் பயிற்றுதல் என்பது மொழியின் பயன்பாட்டை உணர்த்துவது என்பதாகும். நவீன காலத்துக்கும் முற்பட்ட காலத்தில் அமைந்த பயிற்றல் முறையினைச் சமூகச்சூழலும், வாழ்வியல் பாங்கும் முற்றிலும் மாறியுள்ள இக்காலத்தும் பின்பற்றுவதும் தமிழாசிரியர்கள் தங்களைக் காலத்திற்கு ஏற்ப தகவு அமைத்துக் கொள்ளாததையே காட்டும். எனவே சூழலுக்கு ஏற்ப மாறி மொழி வளம் பேணுதல் வேண்டும்.

செவியுணவே சுவையுணவு

அறிவுக்கு விளக்கம் கொடுக்க வந்த திருவள்ளுவர் “தான் பிறர் வாய் நுண்பொருள் காண்பது அறிவு” (குறள்-424) என்கிறார். ஆன்ற பெருமையைத் தரும் செவிக்கு உணவாகிய, கேள்விச் செல்வத்தைப் பெற மாணவர்கள் பெரிதும் விரும்ப வேண்டும். செவி வாயாக நெஞ்சு களனாகக் கேட்டு, கேட்டவற்றை விடாது உள்ளத்து அமைத்தல் வேண்டும். காட்சி வழிக் கற்றலுக்கு அடுத்த நிலையில் அதிகப்பலன் தருவது கேட்டல் வழிக் கற்றலில்தான். காட்சி, கேள்வி வழியில் 50 விழுக்காடு கற்றல்நடைபெறுகிறது என்றால் அதில் 11 விழுக்காடு கேட்டல் வழியில் நடை பெறுகிறது. (ஆய்வுத்தகவல்: உயர்நிலைத்தமிழ் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள். ப.17) கல்வியாளர்களில் பெரும்பாலோர் விரிவுரை முறையையே சிறந்தது என்கின்றனர். இக்கேட்டலில் மானவர்கள் திறன் பெற்றுள்ளனரா என்பதை அறிய மேல்நிலை வகுப்புகளில்  ‘கேட்டல் பேசுதல் திறனறி தேர்வு’ (Testing off Oral – Aural skills) நடத்தப்படுகிறது. இத்தேர்விற்கு ஆசிரியர் ஏதேனும் ஒரு பகுதியைப் படித்துக்காட்டி படித்தவற்றுள்  சில வினாக்களை எழுப்பிச் சோதித்தல் வேண்டும். சிலர் பொதிகைத் தமிழ்க் கையேட்டில் உள்ளவற்றைப் படித்துக் காட்டுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது  மாணவர்களிடம் சலிப்பை ஏற்படுத்தி கேட்டல் திறனைக் குன்றச் செய்கிறது.
மாற்றாகச் சான்றோர்களின் அல்லது தலைவர்களின் (சுதந்திர தின உரை, குடியரசு நாள் உரை, சமயச் சொற்பொழிவுகள்) வானொலி தொலைக்காட்சி உரைகளை ஒலிப்பேழையில் பதிவு செய்து ஒலிபரப்பி அவற்றில் வினாக்கள் கேட்கும் போது மாணவர்கள் புதிய அனுபவத்தால் ஆர்வத்துடன் விடை இறுப்பதுடன் கேட்டல் அனுபவமும் சுவையானதாக மாறுகிறது. அத்துடன் ஆசிரியர் நமக்காக அருமுயற்சிகள் எடுக்கிறார் என்று ஆசிரியர் மீது நன் மதிப்பும் ஏற்படுகிறது. “கல்வி என்பது எழுத்தறிவை மட்டுமே கொடுக்கக் கூடியதாக இருக்கக் கூடாது. அது மனிதனைச் சிந்திக்க வைக்கக் கூடியதாகவும் புரிந்து கொள்ள வைப்பதாகவும் பொறுமையை வளர்ப்பதாகவும் இருத்தல் வேண்டும்.” என்னும் அறிஞர் இராதா கிருட்டிணன் அவர்களின் கருத்துக்கு அரண் செய்வதாக அமையும்.

இயக்குநர் ஆசிரியர்

முத்தமிழில் வைப்பு முறையால் கடைநிலைப் பட்டாலும் தொல்காப்பியரால் முதல் நிலையில் வைத்து எண்ணப் பெறுவது நாடக வழக்கு (தொல்.பொருள்: 56). இயற்றமிழ் கட்புலனுக்கும் இசைத்தமிழ் செவிப்புலனுக்கும் இன்பத்தை நல்குகின்றன. நாடகத்தமிழ் ஒன்றே கட்புலனுக்கும் செவிப்புலனுக்கும் ஒரு சேர இன்பத்தை நல்குகிறது. பள்ளிப்பாடத் திட்டத்தில் இளநிலை வகுப்பு முதல் உயர்நிலை வகுப்பு வரை எல்லா வகுப்புகளிலும் உரைநடைப் பகுதியில் நாடகம் ஒன்று அமைந்திருக்கும். இந்நாடகத்தைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர் நாடகத்தில் எத்தனை கதை மாந்தர்கள் உள்ளனரோ அத்தனை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவருக்கும் அவரவர்க்குரிய பாத்திரத்தை ஒப்படைத்து அவர்களை வகுப்பில் முன்பக்கம் பிற மாணவர்கள் பார்க்குமாறு நிற்க வைத்தல் வேண்டும். அவர்கள் படிக்க வேண்டிய பகுதியை ஒரு முறை படித்துப் பார்த்துக் கொள்ளச் சொல்ல வேண்டும். மாணவர்கள் படிக்கும் போது குரல் மாற்றம், குரல் ஏற்றத்தாழ்வு, இடத்திற்கேற்ப சைகளை முதலியவற்றைச் செய்யுமாறு உற்சாகப் படுத்துதல் வேண்டும். அனைத்து மாணவர்களும் பங்கு பெறும் வகையில் நாடகம் பலமுறை நடத்தப் பெறுதல் வேண்டும். இம்முறையில் படிக்கும்(நடிக்கும்) மாணவர்கள் தாங்கள் நடிக்கும் கதை மாந்தராகவே மாறி விடுகின்றனர். அப்பாத்திரத்தின் பண்புகளையும் தம் பண்பாக மாற்றிக் கொள்கின்றனர். நாடகப் பாடம் நடத்தும் ஆசிரியர் ஓர் இயக்குநர் போலிருந்து கற்பிக்கும் போது மட்டுமே நாடகப்பாடம் செறிவுடையதாக அமையும்.(க. அறிவுடைநம்பி, தமிழ்வழி கற்றல் கற்பித்தல் புதிய உத்திகள்- ப:242) மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து எக்குழு நன்கு நடித்துக் காட்டுகிறது? என்று போட்டியும் வைக்கலாம். நன்கு நடித்தவர்களுக்கு சிறு சிறு பரிசுகள் அல்லது தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் கொடுத்து ஊக்குவிக்கலாம்.ஆனால் இம்முறைப் பயிற்றுவித்தலில் காலச்செலவு அதிகம். ஆசிரியரின் பணிச்சுமையும் கூடுதலாகிறது. இதனால் இவ்வாறு செய்யாமல் ஒரு சிலர் நாடகச் சுருக்கத்தைக் கூறி பாடத்தை முடித்து விடுகின்றனர். ஆனால் பாடம் பல ஆண்டுகட்குப் பின்னும் மாணவர் நெஞ்சில் மறவாமல் இருக்கும்.

எதிர்காலப் புலன் வேண்டும்

ஏடன்று கல்வி சிலர் எழுதும் பேசும்
இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும்
வீடன்று கல்வி; ஒரு தேர்வு தந்த
விளைவன்று கல்வி; அது வளர்ச்சி வாயில் (குலோத்துங்கன் கவிதைகள்: ப. 202)
என்பது வா.செ.குழந்தைசாமியின் கல்விக் கொள்கை. நாளும் வளர்ந்து கொண்டிருக்கும் இத்தலைமுறை மாணவர்களின் எண்ணக்கரு உருவாக்கத்திலும் ஆளுமை வளர்ச்சியிலும் சமூகச் சூழலை விளங்கிக் கொள்வதிலும் மொழிப்பாடம் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது. தொழில்மயம், நவீனமயம், உலகாயதமயம் போன்ற காரணிகளால் இன்றைய தலைமுறையினர் அறிவில் மூத்த தலைமுறையினர் என்றெண்ணும் அளவில் வியத்தகு முன்னேற்றம் அடைந்துள்ளனர். இன்றைய மாணவர்கள் மிகக் கவனமாகக் கையாள வேண்டிய கூரிய ஆயுதம் போன்றவர்கள். இவர்களுக்குப் புகட்டப்படுகின்ற கல்வி பதம் பார்த்து, பகுத்தறி சிந்தனையுடன் கற்கின்ற நிலையில் அமைய வேண்டும். 2001 ஆம் ஆண்டில் உறுதி செய்யப் பெற்ற தேசிய கல்வித் திட்டத்தின் படி அமைந்த 1986 ஆம் ஆண்டின் கல்விக் கொள்கை.
  1. இந்திய ஒருமைப்பாட்டு உணர்வு
  2. இந்திய அரசியல் சட்டத்தின்கீழ் கடமை ஆற்றல்
  3. சமூக்த் தடைகளை அகற்றுதல்
  4. பொதுச் சொத்துகளைப் பாதுகாத்தல்
  5. ஆண் பெண் நிகர்மை
  6. நிகர்மை, சகோரத்துவம், குடியாட்சி
  7. இந்திய பொதுப் பண்பாட்டு மரபு
  8. சுற்றுச் சூழல் பாதுகாப்பு உணர்வு
  9. சிறுகுடும்ப கொள்கைப் பதிவு
  10. அறிவியல் மனப்பான்மை.
 
ஆகிய பத்து அழுத்தமான பொருண்மைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்கிறது. (உயர்நிலைத் தமிழ் கற்பித்தலில் புதிய அணுகு முறைகள். ப.10) ஆனால் இளநிலை பாடத்திட்டத்தில் சூழ்ச்சியையும் வஞ்சகத்தையும் கற்றுக் கொடுக்கின்ற பாங்கில் பாடங்கள் அமைந்துள்ளன. (சொர்க்கத்தில் நரி, நான்காம் வகுப்பு தமிழ்ப் பாடநூல்) பழைய பாடத்திட்டத்தில் காகத்தை ஏமாற்றிய நரி; புதிய பாடத்திட்டத்தில் ஓநாயை ஏமாற்றுகிறது. பழைய மொந்தையில் புதிய கள். காகத்தை ஏமாற்றிய நரி நாம் ஒருவரை ஏமாற்றினால் நம்மை ஒருவர் ஏமாற்றுவார் என்ற அறத்தைப் புகன்றது. புதிய நரி தன்னலத்திற்காக ஓநாயை ஏமாற்றுகிறது. மேல்நிலை வகுப்புகளில் வீரச்சுவை கலிங்கத்துப் பரணி (மேல்நிலை முதலாமாண்டு) முதலிய பாடங்கள் வீரம் என்னும் பெயரில் வன்முறையைத் தூண்டுவனவாக உள்ளன. இவை போன்ற பாடங்களைக் கற்ற பின்பு அவற்றின்படி ஒழுக வேண்டிய மாணவர்களின் மனங்களில் வன்முறை எண்ணங்கள் துளிர் விடும் என்பதும் கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டிய ஒன்று. காலச்சூழலுக்கு ஏற்ப அமையாத பாடத்திட்டங்களும் கற்றல் கற்பித்தலில் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இந்நிலையை,
உங்கள் புத்தகங்கள்
கண்களைத் திறப்பதில்லை
ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன
என்று வெகு நேர்த்தியாகக் கண்டிப்பார் கவிக்கோ அப்துல் ரகுமான். பாடத்திட்டம் காலத்திற்கேற்ப மாணவர்களை வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செலுத்தும் எதிர்காலப் புலனுடன் அமைதல் வேண்டும். அதற்காகப் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளைப் பாடத்திட்டக் குழுவினர்க்குத் தொடர்ந்து அனுப்புதல் வேண்டும்.
இறுவாய்.
மாறாத பொருளெதுவும்
வளர்வதில்லை
வையத்தின் விதியிதற்கு
மாற்றமில்லை (வா.செ.குழந்தைசாமி)
என்பார் அறிவியல் அறிஞர் கவிஞர் குலோத்துங்கன். மாறி வரும் சூழலுக்கு ஏற்ப கல்வியில் மாற்றம் ஏற்பட வேண்டும்.இலக்கியங்கள் நற்பண்புகளையும், மனித நேயத்தையும் வளர்ப்பனவாய் அமைதல் வேண்டும். இலக்கணம் வளர்ந்து வரும் சமுதாயத்தின் பயன்பாட்டுக்கு ஏற்ற வழி எளிமைப் படுத்தப்பட வேண்டும்.

அனைத்துக்கும் மேலாகத் தமிழாசிரியர்கள் மொழிப்பாடம் கற்றுக் கொடுக்க என்றோ படித்தது  போதும் என்னும் தம் நிலையில் இருந்து மாற வேண்டும். காலச்சூழலுக்கு ஏற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். இன்றைய நவீனப் போக்குகளை அறிந்து கொள்ளல் வேண்டும். நவீன எழுத்தாளர்களை ஓரளவேனும் அறிந்து கொள்ள வேண்டும். பிற மொழி இலக்கிய அறிவுடன் விளங்க வேண்டும். முக்கியமாக சற்றேனும் ஆங்கில இலக்கிய அறிவும் அவர்களுக்கு இருத்தல் அவசியமாகிறது. குறைந்த அளவு, பல்துறை சார்ந்த நுட்பங்களை அறிந்து கொள்வதில் ஆர்வமுடையவர்களாக இருத்தல் வேண்டும். தாம் பல் துறை வல்லாண்மையுடனும் பயிற்றுவித்தலில் புதுமைப் போக்கையும் ஆசிரியர்கள் கையாண்டால் மொழிப்பாடம் கற்பித்தல் உன்னத நிலையை அடையும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தமிழ் வகுப்புகளை வெற்றுக் கட்டிடங்கள் மட்டும் கேட்கும் நிலை உருவாவது திண்ணம்.



இக்கட்டுரை வல்லமை மின்னிதழில் வெளியானது.
நன்றி வல்லமை மின்னிதழ்.
http://www.vallamai.com/archives/10451/


செவ்வாய், 15 நவம்பர், 2011

பிளாஸ்டிக் இராணிகள்



நினைத்தவுடன் கைகளை வீசிக்கொண்டு கடைக்குப் போவது
வேண்டிய பொருள்களை வாங்குவது வாங்கி, கலர் கலர் பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வருவது இதெல்லாம் இனிமேல் நடக்காது. அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் நடந்த ஒரு சில நல்ல விஷயங்களில் ஒன்று பல்பொருள் அங்காடிகளில் பிளாஸ்டிக் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்க ஆணை பிறப்பித்துள்ளது.என்ன காரணம் என்று கேட்டால் அப்போதுதான் அடுத்த முறை வீட்டில் இருந்து வரும்போதே துணிப்பையோ கூடையோ ஏதாவது எடுத்துக்கொண்டு வருவார்கள். பிளாஸ்டிக் பை அரசிகளின் ஆட்சி குறையும் என்ற நோக்கத்தில் என்பதாம். இந்த நடவடிக்கைக்கு அம்மாவுக்கு பெரிய ஜே.

இப்படி ஒரு புறம் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. மறுபுறமோ பிளாஸ்டிக் கவர் என்ன நாங்க எங்க உடலையே பிளாஸ்டிக்கால கவர் செய்து கொள்வோம் என்று கூறுகின்றனர் பலர். அதுவும் எதற்காக எல்லாரையும் கவர் பண்ணுவதற்காகவே. கவர்ந்திழுக்கச் செய்யும் கண்ணழகு, முதல் சொக்க வைக்கும் கால் அழகு வரை அனைத்து உறுப்புகளையும் பிளாஸ்டிக்கினால் வடிவமைத்துக் கொண்டு புகழ் உச்சியில் ஏறி உலகை வலம் வந்து கொண்டு இருக்கின்றனர் பிளாஸ்டிக் இராணிகள் பலர்.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை சக்கைப் போடு போட்டுக்கொண்டு
உள்ளது இவர்களால என்றால் மிகையில்லை.

பிரேஸில் நாடுதான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் நம்பர் ஒன். அதிக எண்ணிக்கையில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண்கள் நிறைந்த நாடுகளில் பிரேஸில்தான் முதலிடம். பிரேசிலில் பிப்ரவரி முதல் வாரம் நடக்கும் ஒரு திருவிழா, உலக பிரசித்தம். அரை குறை ஆடையுடன் கவர்ச்சிப் பெண்கள்சம்பா என்னும் அந்நாட்டு நடனம் ஆடி வருவதை பார்க்க கூட்டம் குவியும். இந்நடனம் ஆடுவதற்காக பிரேசில் மாடல் அழகி ஏஞ்சலா பிஸ்மார்சி தனது 21 ஆம் வயதில் தொடங்கி 42 ஆம் வயது வரை, நாற்பத்து இரண்டு (42) முறை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இதற்காக இவர் தன் முதல்
கணவரை விவாகரத்து செய்து விட்டு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரைத் திருமணம் செய்து கொண்டார். இத்துடன் தீர்ந்ததா இவர் பிளாஸ்டிக் மோகம். அதன்மீது உள்ள மோகத்தால் அவரையும் விவாகரத்து செய்து விட்டு அவரைவிட சிறந்த அறுவை சிகிச்சை நிபுணரை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதே போல இந்நாட்டு இன்னொரு மாடல் ஷைலா ஹெர்ஷே தன் மார்பகங்களைப் பெரிதாக்கிக் கொள்ள முப்பது முறை பிளாஸ்டிக் அறுவை செய்து கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் ஒரு கேலனுக்கு மேல் சிலிக்கான் இம்ப்ளாண்ட் செய்யக்கூடாது
என்று சட்டமிருப்பதால் தன் தாய்நாடான பிரேசிலுக்குச் சென்று இந்த ஆப்பரேஷனைச் செய்து கொண்டவருக்கு. அதனாலேயே பிரச்சனை ஆகிவிட்டது. ப்ளட் ஸ்ட்ரீமில் இன்பெக்‌ஷன் ஆகி, இரண்டு மார்பகளிலும் பரவி விட்டது. இவரின் உயிரை காக்க வேண்டுமானல் உடனடியாய் அவரது மார்பகங்களையே எடுக்க வேண்டியுள்ளது என்கிறார்கள் டாக்டர்கள். எதிலும் ஒர் அளவு வேண்டும். அதிக ஆசை ஆபத்தில்தான் முடியும். இயற்கைக்கு எதிரான காஸ்மெடிக் சர்ஜரிகளுக்கான எச்சரிக்கை இது என்பதை அனைவரும் அறிய வேண்டும்.

தான் மணக்க இருக்கும் கேனி என்னும் ஒரு பெண்ணுக்கு எட்டு முறை பிளாஸ்டிக்கினால் அறுவை சிகிச்சை என்னும் சில டச்சப்புகளைச் செய்து பின்னர் மணந்து கொண்டுள்ளார் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ரெசா வோசவ் என்னும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுனர். முப்பத்து மூன்று வயதான கேனி ஹோட்டலில் பணி புரிந்த ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கே‌னி‌யி‌ன் மார்பகத்தையும், உதடுகளையும் பெரிதாக மாற்றி, கண்ணிமைகளை கொஞ்சம் உயர்த்தி,. நெற்றியை சமப்படுத்தி அவரை அழகு ராணியாக்க ரெசா வோசவுக்கு 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவு ஆனது.

பிளாஸ்டிக் இராணிகள் மட்டுமல்ல. பிளாஸ்டிக் இராசாக்களும்
இருக்கிறார்கள். ஆண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பாப் இசையால் மக்கள் மனங்களில் இன்றும் வாழ்ந்து வரும் பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையிலும் மன்னன். உலக அளவில் அதிக எண்ணிக்கையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் இவர்.

இப்படிப்பட்ட எண்ணற்ற தகவல்கள் பிளாஸ்டிக் என்னும்
நவயுக அழகின் பிரம்மாவைப் பற்றி வந்துகொண்டிருக்கின்றன. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக்கின் உதவியால் அதிரடிக்கின்ற பிரபங்களைப் பாருங்கள். இவர்கள் புண்ணியத்தால் இப்போது எல்லா தரப்பு மக்களும் பிளாஸ்டிக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

பிக் பிரதர் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி



இலண்டன் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ பேமஸ் ஷில்பா ஷெட்டி இரு முறை தன் மூக்கை வடிவமைத்துக்கொண்டவர். இவரது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை ஊரறிந்த.. இல்லை உலகம் அறிந்த விஷயம். இவரே பாலிவுட் நடிகைகள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முன்னோடியாகத் திகழ்ந்தவர் எனலாம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளரான ஷில்பா ஷெட்டி அழகி என்பது மட்டுமல்ல. இவர் அழகு நிலையத்துக்குச் சொந்தக்காரர் என்பதும் நாம்
அறிந்து கொள்ள வேண்டியது. மும்பையில் உள்ள இவரது அழகு நிலையத்தின் பெயர் அயோசிஸ்




பிக் பாஸ் புகழ் ராக்கி சவந்த் Rokhi savanth

http://beforeaftersurgery.info/rakhi-sawant-before-and-after-plastic-surgery4677232.jpg

பிக் பாஸ் புகழ் இவரின் மூக்கும் உதடுகளும் அழகானதில் அவரின் தந்தையரின் ஜீன்களை விட பிளாஸ்டிக் ஜீனின் பங்கே அதிகமானது. மூக்கு, உதடு மட்டுமல்ல உடல் அழகின் ரகசியமே பிளாஸ்டிக்கால்தான். இவர் நெகிழி (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சையால் இடுப்பைக் குறைத்தவர். வயிற்றுப்பகுதியைக் குறைத்தவர். அதே சமயம் மார்கங்களைச் சிலிக்கானால் கூட்டியவர். இந்த செயற்கை அழகிக்கு இன்னொரு புகழும் உண்டு. கலிகாலத்தில் ஒரு சுயம்வரம் நடத்தித் தனக்குப் பிடித்த மணமகனைத் தேர்வு செய்தவர். இதைவிட இன்னொரு சிறப்பு இந்த சுயம்வரத்திற்கு மனுசெய்தவர்கள் 12515. ராக்கியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 16 பேர். தலை சுத்துதா? ஆளை விடுங்க....

தமிழன் புகழ் பியங்கா சோப்ரா Priyanka chopra
மிஸ் இந்தியா பிரயங்கா சோப்ரா. இந்திய அழகியாகத் தேர்வான இவர் காமினி, பேஷன், அட்ராஸ் போன்ற படங்களில் நடித்ததால் சிறந்த நடிகையாகவும் தேர்வானவர். இவர் மூக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர் என்பது பலர் அறியாதது. இன்று பாலிவுட்டின் மிகப்பிரபலமான நாயகி.. 

கேங்ஸ்டெர் புகழ் கங்கனா ரானத் Kangana Ranaut



கேங்க்ஸ்டெர், ஃபேஷன், சகலக பூம்பூம் புகழ் கங்கனா ராவத் பல மொழிகளில் நடித்தவர் என்பதும் பிலிம் ஃபேர் விருது, அப்சரா விருது என்று பல விருதுகளை அள்ளிக்குவித்தவர் என்பது உலகறிந்த விஷயம். ஆனால் சிலிக்கன் மார்பகங்களை பொருத்திக் கொண்டவர் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம். 
அயன் ஹிந்தி புகழ் கொய்னா மித்ரா Koena Mitra
ரோடு, தூள், அயன், ஆசை போன்ற படங்களால் புகழ் பெற்றவர் இவர். இவர் மார்பகங்களைப் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் பெரிதாக்கிக் கொண்டவர். இரு முறை மூக்கு அறுவை சிகிச்சை தவறான முடிவைத்தர தான் கட்டிய அழகுக்கோட்டை இடிந்து இருளில் சிக்கி மீண்டும் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து பின்னர் மீண்டவர்.
கனிமொழி தமிழ் புகழ் சாஷன் பதம்சி Shazahn Padamsee
ராக்கெட் சிங் சேல்ஸ்மேன் ஆஃப் தி இயர் என்னும் ஹிந்தி படத்தில் அறிமுகம் ஆகி தமிழிலும் கனிமொழி என்னும் திரைப்படத்தில் தன் அழகிய உதடுகளைக் காட்டி ரசிகர்களை வசீகரித்தவர். இந்த அழகிய உதடுகள் பிளாஸ்டிக் சர்ஜரி தந்த கொடைதான்.

ப்ரீத்தி சிந்தா Preity Zinta
தில் சே, அர்மான், சோல்ஜர் புகழ் ப்ரீத்தி சிந்தாவைத் தெரியாத தமிழர்கள் இருக்க முடியாது. நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே என்ற பாடல் காட்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது மூக்கு, புருவம் எல்லாம் அறுவை சிகிச்சையால் மேலும் அழகானவை.

மினிஷா லம்பா Minissha Lamba


யாஹன் முதல் கிட்னாப், அனாமிகா என்று பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மூக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துள்ளார். மார்பக அறுவை (Breast enhancement surgery) சிகிச்சையும் செய்துள்ளார். ஆனால் இவர் செய்து கொண்ட மார்பக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இவருக்கு அதிக அளவில் வசீகரத்தைத் தராததால் மீண்டும் சிலிக்கான் மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளார். 
இந்த வரிசையில் ஜூஹிசாவ்லாவும் இணைவார்கள் என்று கீழே உள்ள புகைப்படங்கள் கூறுகிறது அல்லவா. 

http://makeupandbeauty.com/wp-content/uploads/2010/04/Cosmetic-Surgery-10.png 

ஒரே மாதிரி பாலிவுட் நடிகைகளைப் பற்றியே தெரிந்து கொண்டால் கோலிவுட் நடிகைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா என்ற குரல் கேட்கிறது. 
நம்ம பதினாறு வயது ஸ்ரீதேவி.

http://3.bp.blogspot.com/-IOMPdZUoTPE/TfvT60Ta8gI/AAAAAAAAAAw/qTxCk0EnPuc/s1600/Screen%2Bshot%2B2011-06-17%2Bat%2B4.23.07%2BPM.png
இது தமிழர்கள் அனைவரும் அறிந்ததே. அவர் மூக்கை அழகு செய்து கொண்டது ஹிந்தி திரையுலகிற்கு இலாபம். தமிழ் திரையுலகுக்கு நட்டம். அவருக்கு எப்படியோ தெரியவில்லை. பாவம் தமிழர்கள்.....  தமிழுக்கே உரிய அந்த முகம் மாறியதில் தமிழர்களுக்கு வருத்தமே.

ஜீன்ஸ் புகழ் ஐஸ்வர்யா ராய்??.

http://bollywoodproductions.com/uploads/thumbs/jcxjgc5xfs0hs5ur.jpg

அட உலக அழகி இவரும் மூக்கைத் திருத்திக் கொண்டிருக்க வேண்டும் என்பது பலரின் ஐயம். அவரது இளம் வயது புகைப்படங்களையும் இப்போதைய புகைப்படங்களையும் பார்த்து நீங்களே இந்த யூகத்தை முடிவு செய்து கொள்ளுங்கள்.

உலக நாயகனின் புதல்வி ஸ்ருதி ஹாசன்


அம்மாடியோவ்....... இவங்க சரியா மூச்சு விட முடியலைன்னுதான் மூக்கு அறுவை சிகிச்சை செஞ்சாங்களாம் அப்படின்னு சொல்லிக்கிறாங்க. அப்பறம் அவங்க மூக்கு தானாவே அழகா ஆயிட்டதாம். அதனால் என் குரல் ஒன்றும் பாதிக்கப்படவில்லை என்றும் அவரே கூறுகிறார். இவங்க போட்டோவையும் முன்னாலும் பின்னாலும் பாருங்க.. அறுவை சிகிச்சைக்குப் பின்னும் முன்னும்தான்.. நீங்களே கண்டு பிடிச்சிடுவீங்க.......உங்களுக்கும் ஏழாம் அறிவு இருக்குல்ல..

http://withfriendship.com/images/j/45340/rift-between-shruti-hassan-and.jpg http://iskinny.files.wordpress.com/2011/07/shruti2bhassan13.jpg?w=178&h=238

இதுக்குமேல நான் மூச்சு விட மாட்டேன். மாயா மாயா. எல்லாம் சாயா சாயா....


நன்றி குமுதம் ஹெல்த்