“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

திங்கள், 29 நவம்பர், 2010

அறுவை - அன்றும் இன்றும்





ஒரு மருத்துவமனையில், பலர் அறுவை சிகிச்சைக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் மயக்க ஊசி போட்டு ஆபரேஷன் தியேட்டர் முன்பு அமரவைத்திருந்தனர் அம்மருத்துவ மனையின் மருத்துவர்கள். பெரிய மருத்துவமனைகளில் எல்லாம் சிறு சிறு அறுவை சிகிச்சைகள் இவ்வாறு ஒரே நேரத்தில் அடுத்தடுத்துப் பலருக்குச் செய்வது வழக்கம். முதலில் மயக்க மருந்து கொடுத்து அமரவைத்திருப்பர். உள்ளே அழைத்துச் சென்ற பின்பு அப்பகுதி மட்டும் மறத்துப் போகும் ஊசி போட்டு அறுவை சிகிச்சை செய்து விடுவர்.

அம்மருத்துவ மனையில் அறுவை சிகிச்சைக்கு அமர்ந்தவர்களில் ராமனும் ரஹ்மானும் அடங்குவர். உள்ளிருந்து ஆப்ரேஷனுக்காக ரஹ்மானை அழைக்க, பாதி மயக்க நிலையில் இருந்த ராமன் தன்னைத்தான் அழைக்கிறார்கள் என்று நினைத்து உள்ளெ சென்று விட்டார். அதிவிரைவில் அமோகமாக அறுவை சிகிச்சை முடிந்தது. பின்னர் தான் தெரிந்தது அவர் ராமன் என்று. அறுவை சிகிச்சையில் ஒரு சிறு வித்தியாசமே. ராமன் வந்திருந்தது விரைவீக்க அறுவை சிகிச்சைக்கு. ரஹ்மான் வந்திருந்தது சுன்னத் அறுவை சிகிச்சைக்கு. என்ன நடந்திருக்கும் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். இது கட்டுக்கதை அல்ல. உண்மைச் சம்பவம். ஆந்திர மாநிலத்தில் நடந்தது.


ஏன் நடிகை ஸ்ரீதேவியின் தாயாருக்கு நடை பெற்ற அறுவை சிகிச்சைபற்றி பக்கம் பக்கமாக எல்லா இதழ்களூம் கிழித்துத் தள்ளியதை நம்மால் மறக்கத்தான் முடியுமா? இத்தனைக்கும் ஸ்ரீதேவியின் தாயாருக்கு மருத்துவம் அளித்தது அமெரிக்காவின் புகழ் பெற்ற ஒரு பெரிய மருத்துவமனை.


இவற்றையெல்லாம் ஏன் கூறுகிறேன் என்றால், அறுவை சிகிச்சை அத்துனை எளிதாக, விரைவாக, அதிகமாக இக்காலங்களில் நடைபெறுகிறது. யாராவது கிடைப்பார்களா, என்று உடல் உறுப்புகளை வெட்டி எறிய கத்தியுடன் காத்திருக்கும் மருத்துவர்கள் பெருகிவிட்டனர். அதனால் ஒரு சில தவறுகளும் நடைபெறுகின்றன. அதுமட்டுமல்ல போகிற போக்கில் உறுப்புகளைத் திருடிப் பிழைக்கும் சதிகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. சரி முந்தய காலங்களில் அறுவை முறை இருந்து இருக்குமா? அவர்கள் இது போன்ற சிகிச்சை முறைகளை மேற்கொண்டு இருந்தார்களா? என்பதை அறிய வேண்டாவா?


பண்டைய காலங்களில் அறுவை சிகிச்சை நடக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் வீரயுகம் என்று அழைக்கப் பட்ட போர்க்காலங்களில் இது போன்ற சிகிச்சைகள் நிச்சயமாக இருந்து இருக்க வேண்டும்.


கூர்மையான நகங்களை உடைய கழுகின் தாக்குதலால், புண் எய்தி தன்னிடம் தஞ்சம் அடைந்த ஒரு புறாவுக்காகத் தன் தசையைத் தந்தான் ஒரு மன்னன். கானகத்தில் கண்களில் குருதி வழிய அமர்ந்து இருந்த ஒரு தெய்வக் கற்சிலைக்கு, தன் கண்ணை எடுத்து அப்பினான் ஒரு வேடன். இச்செய்திகள் எதனைக் குறிக்கின்றன? இக்காலத்து உடல் உறுப்புக் கொடைக்கு முன்னோடிகளாக இவர்கள் இருந்து உள்ளனரோ என்று என்று எண்ணத் தோன்றுகிறது. சிபி சக்கரவர்த்தி புறாவுக்குத் தன் தசையைத் தந்தது, இன்றைய தோல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னோடியாக இருக்குமோ என்ற ஐயமும் எழுகிறது. ஆய்வு நோக்கில் சிந்தித்துப் பார்த்தால் இதுதான் உண்மையாக இருக்குமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில் புறாவைக்காக்க வேடனுக்கு ஏன் தசையைக் கொடுக்க வேண்டும் சிபி. அங்கு என்ன நடந்து இருக்கும்? ஒரு வேளை அம்புப் பட்டுச் சிதைந்து போன தசைக்குப் பதிலாகத் தன் தசையை வைத்து தைத்திருப்பானோ மன்னன். இதன் உட்பொருளைப் புரிந்து கொள்ளாமல் புறாவுக்குத் தன் உடலின் தசையை அறுத்துக் கொடுத்தான் சிபிச்சக்கரவர்த்தி என்று இன்றும் கூறிக் கொண்டிருக்கிறோமா என்றும் தெரியவில்லை. ஏனெனில் இது கர்ண பரம்பரை கதை.


ஆனால் இரண்டாவதை, மருத்துவ அடிப்படையில் நோக்கினாலும், ஆன்மீக அடிப்படையில் நோக்கினாலும், இன்றைய கண் படல மாற்று அறுவை சிகிச்சைக்கு வழிகாட்டிய பாமரன் கண்ணப்பன் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.




பண்டைய காலத்தில் அறுவை செய்வதற்கு செம்பினால் ஆன கத்தியைப் பயன் படுத்தினர் என்கிறது அகழ்வாய்வு அறிக்கை. சிந்து வெளி ஆய்வில் கிடைக்கப்பட்ட ஆயுதங்களில் மடுத்துத்துவத்துக்குரிய கத்திகள் கிடைத்துள்ளன். இதன் சிறப்பு என்ன என்றால பக்க விளைவுகளை ஏற்படுத்தாத உலோகம் செம்பு என்பதை அவர்கள் அறிந்து இருந்தனர் என்பதை அறிய முடிகிறது.

அக்காலத்தில் தசையைச் சேர்த்துத் தைப்பதற்கு வெள்ளூசியைப் பயன் படுத்தினர் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. தையல் போடுவதற்கு செந்தலை எறும்புகள் என்ற ஒரு வகை எறும்புகளையும் பயன்படுத்தினர் என்பர். எப்படி என்று கேட்கிறீர்களா? தையல் போட வேண்டிய தோலில் இவ்வெறும்புகளை விடுவர். அவை சதையை இறுக்கமாகக் கவ்விப் பிடித்துக் கொள்ளும்போது (அதாவது கடிக்கும் போது) அதன் உடல் படுதியை வெட்டி எடுத்து விடுவார்களாம். எத்தனை தையல் போட வேண்டுமோ அத்தனை எறும்புகளை பயன் படுத்துவார்களாம். (இச்செவிவழிச் செய்தியை வழங்கியவர் ஆசிரியர். முனைவர் சி. வெ. சுந்தரம்)

சாதாரனமாகத் திருவள்ளுவர் ஒருவரைப் பாராட்டி விடுவாரா என்பதையும் இங்கு நாம் சிந்திக்க வேண்டும். ‘அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்று கூறுகிறார், என்றால் யாரோ ஒருவர் பிறருக்கு எலும்பைத் தந்திருக்கிறார் என்றுதானே பொருள். அதுமட்டுமல்ல ‘என்பும்’ என்று கூறும்போது அச்சொல்லுக்கு முன்னாலோ பின்னாலோ மற்றொரு சொல்லையும் இணைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தமிழ் சொற்கள் பெரும்பாலும் இரட்டைச் சொற்கள். நன்மையும் தீமையும், இரவும் பகலும், கையும் காலும், என்பது போல எலும்புடன் இணையும் மற்றொரு சொல் தோல். எலும்பும் தோலும் என்பது இணைச் சொற்கள். இதற்கும் சான்று திருவள்ளுவரே தருகிறார், ‘என்பு தோல் போர்த்திய உடம்பு’ என்ற மற்றொரு திருக்குறளில். எனவே எலும்பையும் தோலையும் திருவள்ளுவர் காலத்துக்கு முன்பே கொடையாகத் தந்தவர்களோ அல்லது தந்தவரோ இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது அல்லவா? யார் அவர் என்பதைத் தெரிந்து கொள்ள பரிமேலழகரின் திருக்குறள் உரையைப் பார்த்தால், சங்கப் பாடல் ஒன்றைச் சான்று காட்டுகிறார். அப்பாடலில் பேசப்படுவது சிபி மன்னனின் கொடைப் பண்பைப் (தசை தானத்தை) பற்றியே. எனவே சிபி தசையைக் கொடுத்தார் என்பது தெளிவு. யாருக்கு என்பதில் தான் ஐயம். இந்த ஆய்வை பிறகு பார்ப்போம். இப்பொழுது அந்த சங்கப் பாடலைப் பார்ப்போமா?


“கால்உணவு ஆகச் சுடரொடு கொட்கும்


அவிர்சடை முனிவரும் மருள, கொடுஞ்சிறைக்


கூர்உகிர்ப் பருந்தின் ஏறுகுறித்து, ஒரீஇ,


தன்அகம் புக்க குறுனடைப் புறவின்


தபுதி அஞ்சிச் சீரை புக்க


வரையா ஈகை உரவோன்”


அறுவை மருத்துவ முறை பற்றி ஒவ்வொரு குறிப்புகள்ஒவ்வொரு நூலில் காணப்படுகின்றன. அறுவை மருத்துவத்தில் என்னென்ன முறைகள்செய்யப்பட்டன என்பதை விளக்கிக் கூறுவதாக அமைகிறது சீவக சிந்தாமணி.


சீவக சிந்தாமணி காப்பிய நூலாக அமைந்ததினால், விரிவான செய்திகளைத் தருவதாக அமைந்து' அறுவை முறை மருத்துவத்தை விவரிக்கிறது.

”முதுமரப் பொந்து போல முழுமெய்யும் புண்க ளுற்றார்க்கு
இதுமருந் தென்ன நல்லார் இழுதுசேர் கவளம் வைத்துப்
பதுமுகன் பரமை மார்பில் நெய்க்கிழி பயிலச் சேர்த்தி
நுதிமயிர்த் துகிற்குப் பாயம் புகுகென நூக்கி னானே''

மரப்பொந்துபோல உடல் முழுவதும் ஏற்பட்ட புண்களுக்கு ஏற்ற மருந்து எது? என்பதை அறிந்த மருத்துவர், அம்மருந்தை வாயில் கவளத்தை வைப்பது போல் வைப்பர்; பின்னர் எலி மயிரால் நெய்யப்பட்ட ஆடையால் போர்த்தி,காற்றுப் புகாதவாறு பாதுகாப்பர் என்று உரைப்பதினால், புண்பட்டார்க்குச் செய்யப் படுகின்ற மருத்துவ முறைகள் தெளிவாக்கப் பட்டுள்ளன.

” நெய்க்கிழி வைக்கப் பட்டார் நெய்ப் பந்தர் கிடத்தப் பட்டார்
புக்குழி யெஃக நாடி யிரும்பினாற் போழப் பட்டார்'

உடலுக்குள் புகுந்த இரும்புத் துண்டுகளை அறுவை முறையால் அறுத்தெடுத்துள்ளனர் என்று இப்பாடலடிகள் விளக்குகின்றன. நெய்யில் தோய்த்த துணியைப் இரும்புத்துண்டு நுழைந்த உடற்பகுதியின் மேல் போர்த்துவர். புண்பட்டாரை நெய்ப்பத்தலில் கிடத்துவர்; உடலுக்குள் புகுந்த இரும்புத் துண்டுகளை அறுவை முறையால் அறுத்தெடுப்பர்;

கால அடிப்படையில் இடைக்காலத்துக்கும் சற்று பின்னோக்கிச் சென்று பார்ப்போம். சோழர்கள் ஆட்சி காலத்தை, இலக்கிய அடிப்படையில் சிற்றிலக்கிய காலம் என குறிப்பர். சோழர்கள் ஆட்சி காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. இந்த ஒன்பதாம் நூற்றாண்டில் அறுவை சிகிச்சை இருந்திருக்கிறது என்பதற்கு ஊர் பெயருடன் சான்று உள்ளது. கொங்கு மண்டலத்தில், மகப்பேற்று அறுவை சிகிச்சை முறை ஒரு துறையாக வளர்ந்த நிலையில் இருந்திருக்கிறது. அதனைப் பெண் மருத்துவர் (மருத்துவச்சி) செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இச்செய்தி ‘கொங்கு மண்டல சதகம்’ என்ற சிற்றிலக்கியத்தால் அறியலாகிறது. காந்தபுரம் என்ற ஒரு பகுதியை ஆண்ட வேந்தனின் மகள் பிள்ளையைப் பெற்றெடுக்க முடியாமல், பிரசவ வேதனையால் துன்பப்படுகிறாள். அப்பெண்ணின் வயிற்றைக் கிழித்துத் தன் திறமையால் குழந்தையை வெளியில் எடுத்தாளாம் கொங்கு நாட்டைச் செர்ந்த நறையூரில் வாழ்ந்த மருத்துவச்சி ஒருவர்.


“குறைவறு தெண்ணீர் நதியணை காந்த புரத்தொடுநல்


இறைமகளார் மகவீனப் பொறாது உடல் ஏங்க வகிர்


துறைவழி ஏற்று மகிழ்வூட்டும் அங்கலை தோன்றி வளர்


மறைவழி நேர் நறையூர் நாடுசூழ் கொங்கு மண்டலமே”

இப்பாடலில் கூறப்பட்டுள்ள ‘வகிர் துறைவழி’ என்பது வயிற்றை வகிர்ந்து (கிழித்து) குழந்தையை வெளியில் எடுக்கும் மருத்துவமுறையை குறிக்கிறது. ‘துறை’ என்ற சொல் அக்காலத்தில் அறுவை மருத்துவத்துறை பரவலாக இருந்ததைக் காட்டுகிறது. ஏனெனில் ‘வகிர்வழி’ என்று கூறியிருந்தால் சாதாரனமாக வகிர்ந்து எடுத்தாள் என்று கொள்ள இடமிருக்கிறது. ஆனால் ‘வகிர் துறைவழி’ என்ற சொல்லாட்சி அறுவை மருத்துவத்துறை என்ற ஒரு துறை அக்காலத்தில் தோன்றி வளர்ந்து இருந்ததையும், ‘அங்கலை தோன்றி வளர் நேர் நறையூர்’ என்பது அரிய கலையான இம்மருத்துவ முறை, கொங்கு நாட்டின் நறையூரில் வளர்ந்து இருந்தது என்பதையும் குறிக்கிறது.


இதற்கும் சற்று முந்தைய கி.பி. 600 முதல் 850 வரையிலான காலத்தைப் பக்தி இலக்கிய காலம் என்பர். இதுவும் சோழர்களின் ஆட்சி காலமே. இக்காலத்தில் அறுவைச் சிகிச்சை, படிநிலை வளர்ச்சி அடைந்த நான்கு நிலையில் இருந்து வந்துள்ளது.Justify Full
உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு இந்த நான்கு முறைகளைக் கையாண்டு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். திசுக்களில் நுன்கிருமிகள் பரவுவதால் அழற்சி ஏற்படுகிறது. அதனால் பக்கத்தில் உள்ள இரத்தக் குழாய்களில் இரத்த உறைவு ஏற்பட்டு அப்பகுதியைச் சுற்றி வீக்கமும் அதனால் தாங்க முடியாத வலியும ஏற்படுகின்றன. அவ்வீக்கத்தில் இருக்கும் நுண்மங்கள், வெள்ளை அணுக்களின் ஒரு பாலிமார்ப் அணுக்கள் அவ்விடத்தில் உள்ள புரதப் பொருள்களை நொதிகளாக மாற்றி, அழுகும் திசுக்களை நீர்மமாக்குகிறது. இதுவே சீழ் எனப்படுகிறது.

உடலில் கட்டிகள் தோன்றினால், கட்டிகளை அறுத்தல், அதனுள் தேங்கிய இரத்தத்தை அகற்றுதல், அப்பகுதியை நன்கு சுத்தப் படுத்துதல், பின்னர் மருந்தை இட்டுக் கட்டுதல் என்ற நான்கு நிலையில் மருத்துவம் செய்யப்படும்.

இந்த நான்கு நிலைகள் அக்காலத்தும் இருந்து வந்திருக்கிறது. இதனை பின்வரும் கம்பராமாணப் பாடலால் அறியலாம்.


“உடலிடைத் தோன்றிற்று ஒன்றை
அறுத்து அதன் உதிரம் ஊற்றிச்
சுடலுறச் சுட்டு வேறோர்
மருந்தினால் துயரம் தீர்ப்பர்”

ஆனால் இன்றைய காலத்தில் சுத்தப்படுத்துவதற்கு டிங்சர். சாவ்லான், அல்லது டெட்டால் பயன் படுத்துவது போன்றல்லாமல் அக்காலத்தில் நெருப்பால் சுட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது. இம்மருத்துவம், முறையான சித்த
மருத்துவர்களால் செய்யப்பட்டு வந்துள்ளன என்பதற்கும் இலக்கியச் சான்றுகள் காணப்படுகின்றன.

இக்காலத்தில் நோயாளி மருத்துவர் மீதும், மருத்துவர் நோட்டின் மீதும் காதல் கொண்டிருப்பதைப் போல் அல்லாது அக்காலத்தில் மருத்துவர் மீது நோயாளியும், நோயாளி மீது மருத்துவரும் காதல் கொண்டிருந்தனர். இன்னும் சொல்லப்போனால் நோயாளிகள் மருத்துவன் மீது பக்தியே கொண்டிருந்தனர் எனலாம்.

பக்திப் பணுவல்களை இயற்றிய
வைணவ ஆழ்வார்களில் ஒருவரான குலசேகராழ்வார், இறைவன் எத்துனை துன்பன்களைத் தந்தாலும் அவனிடம் தனக்கு அன்பு குறையாமல் இருக்கிறது என்பதைக் கூறும் போது, அதற்கு உவமையாக ”மருத்துவன் வாளால் அறுத்து, சுட்டு மருத்துவம் செய்தாலும், அவன்மீது அன்பு குறையாத நோயாளி போல” என்ற உவமையைப் பயன்படுத்துகிறார். பாடல் இதோ.

“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாக் காதல் நோயாளன்போல் மாயத்தால்
மீளாத்துயர் தரினும் வித்துவக்கோட் டம்மானேநீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே”

புண்ணுக்கு மருந்திட்டு அதனைப் பஞ்சால் சுற்றும் வழக்கமும் சங்கம் முதலே இருந்து வந்துள்ளது. போர்மேல் கொண்ட ஆசையால் போர்க்களத்தில் ஏற்பட்ட புண்ணுக்கு மருந்திட்டு கட்டிய பஞ்சினைக் கூடக் களையாது ஆயுதங்களை ஏந்தித் திரிந்தனராம் வீரர்கள். இதனை

”செருவா யுழக்கி குருதி யோட்டி
கதுவாய் போகிய துதிவா யெ•கமொடு
பஞ்சியும் களையாப் புண்ணர்”

என்ற பாடல் சுட்டுகிறது.

ஒன்பது மாதக் கர்ப்பினிப்பெண் ஒருத்தி சாலையில் நடந்து கொண்டிருந்தபோது எதிர் பாராத விதமாக அங்கு ஓடி வந்த காளை கொம்பால் வயிற்றில் குத்திவிட்டது. வயிற்றில் ஏற்பட்ட துளையின் வழியாக குழந்தையின் கையின் ஆள்காட்டி விரல் வெளியில் வந்து விட்டது. அப்பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். வேறு வழியின்றி அறுவை சிகிச்சை செய்துதான் கையை உள்ளே வைக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். குழந்தையை வெளியில் எடுக்க முடியாது. எடுத்தால் குறைமாதக் குழந்தையாகி பரிதவிக்கும். என்றெல்லாம் குழம்பிக்கொண்டு மருத்துவர்கள் நிற்க, தலைமை மருத்துவருக்கு ஒரு சிந்தனைப் பொறி கிளம்பியது. செவிலியிடம் ஒரு ஊதுபத்தியைக் கொளுத்தி எடுத்துவரச் சொன்னார். அந்த பத்தியால் குழந்தையின் விரலை லேசாகச் சுட்டார் (தொட்டார்). உடனே குழந்தை விரலை வெடுக்கென உள்ளே இழுத்துக் கொண்டது. பிறகு கொம்பு பாய்ந்த தாயின் வயிற்றை தையல் போட்டு மூடினர். இது ஆங்கில மருத்துவ யுகமான இக்காலத்தில் நடந்தது.

ஒருவரின் மூக்கின் வழியாக மூளைக்குள் சென்று அமர்ந்து விட்டது தேரை ஒன்று. எப்படி என்று மூக்கின் மீது விரல் வைக்கிறீர்களா? ஒரு வேளை உறங்கிக்கொண்டிருக்கும் போது சென்றிருக்கும். அவ்வளவு பெரிய மூக்குத் துவாரமா என்றெல்லாம் கேட்கக்கூடாது. தேரை குட்டியாக இருந்திருக்கலாம் இல்லையா?

சரி விஷயத்திற்கு வருவோம. தேரை மூளைப்பகுதியைக் கெட்டியாகக் கெளவிப் பிடித்திருந்தது. அகத்தியரின் அறுவை சிகிச்சை தொடங்கியது. மூளைக்குள் இருக்கமாகப் பற்றியிருந்த தேரையை எடுக்க வழி என்ன என்று சிந்தித்தார். ஏனெனில் மூளை மிகவும் மென்மையான பகுதி மட்டுமல்ல. உடல் உறுப்புகள் அனைத்தையும் இயக்கும் முக்கிய பகுதி. உடனே உடனிருந்த தேரையார் உபாயம் ஒன்று கண்டு சொன்னார்.


ஒரு நீர் நிறைந்த மட்பாண்டத்தை எடுத்து வந்து தேரையின் முன் காட்ட, மூளைக்குள் இருந்த தேரை நீருக்குள் தொப்பென்று குதித்தது.
http://www.kaboodle.com/hi/img/2/0/0/25/2/AAAAAmOm5_0AAAAAACUtZA.jpg
உன்னைப் போற்றுகிறேனடா என் சீடா என்று கட்டியணைத்து கொண்டாராம் அகத்தியர் தேரையாரை. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்த நம் மண்ணின் மருத்துவர்களாகிய சித்தர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன சமயோசிதத்தில்? இந்தப் பாடல் சற்று நீளமானாது. ஆனால் சுவையானது. படித்துப் பாருங்களேன்.

“பொருந்தியே தேரையது மூளைதன்னை

பொலிவான நாசிவழி தன்னில் சென்று

வருந்தியே மூளைதன்னைப் பற்றியல்லோ

வாகுடனே தேரையது பொருந்தி நிற்க

கவனிக்கும் வேளையிலே கத்தி கொண்டு

கருத்துடனே மூளைதனைக் கீறிப்பார்க்க

மவுனமென்ற மூளைதன்னில் தேரை தானும்

மார்க்கமுடன் கவ்வியல்லோ கொண்டு நிற்க

புவனமென்ற மூளைதன்னில் தேரை தானும்

புகழான தேரையர் முனிவர் தாமும்

சவனமென்ற பாணியினால் எடுக்கத் தந்திரம்

சாற்றினார் தேரையார்தாம் சாற்றினாரே.


சாற்றவே மண்பாண்டம் தன்னில் தானும்

தன்மையுள்ள சலமதனை நிறைய விட்டு

ஆற்றலுடன் தேரைமுன்னே எதிரே காட்ட

அங்கனவே மூளைவிட்டு குதிக்கலாச்சே

நாற்றிசையும் மேவு புகழ் அகத்தியனார்தாம்

நல்லறிவு கண்டுமல்லோ மனமுவந்து

போற்றியே என்சீடா பொன்னரங்கா

பொலிவான தெள்ளமிர்த சிங்கமாமே”

ஒரே கல்லில் இரு மாங்காய். சித்தர் மூளைப்பகுதியைக் கூட அறுவை செய்துள்ளனர். அத்துடன் இத்தகு சம்யோசித சிந்தனையிலும் சிறந்தே விளங்கி இருந்திருக்கிறார்கள்.

சரி கத்தியால் மூளையைக் கிழித்தாகள். தைப்பதற்கு எதனைப் பயன்படுத்தியிருப்பார்கள். அடுத்த இதழில் பார்க்கலாமே.


அறுவை தொடரும்....




நன்றி குமுதம் ஹெல்த்.





வெள்ளி, 26 நவம்பர், 2010

பிஸ்தா எடு!! கொண்டாடு.....


http://www.defendingfoodsafety.com/uploads/image/Pistachios(1).jpg
அவன் பெரிய பிஸ்தாடா! என்று சொல்வது ஒரு வகை என்றால், அவன் பெரிய பிஸ்தாவாடா? என்று கேட்பது மற்றொரு வகை. இவை இரண்டும் ஃபுல் அடிக்கும் பயில்வானாக இருந்தாலும், புல் தடுக்கி பயில்வானாக இருந்தாலும் ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும் சொற்களாகிப் போயின. பிஸ்தாவுக்கும் ஆண்களுக்கும் அப்படி ஒரு நெருங்கிய தொடர்பு. அதிலேயும் பிஸ்தாவோடு மிகுந்த தொடர்புடையவர்கள் ரொம்ப நோஞ்சான் ரொம்ப பலசாலி இருவரும்தான். குடிக்கறது கூழாக இருந்தாலும் பெரிய பிஸ்தா மாதிரி உதார் விடுவதற்கு ஒரு குறைவும் இருக்காது. பாவம் இந்த நடுத்தரம் அவர்களை விட பாவம் பெண் தாதாக்கள். என்னதான் பலசாலிகளாய் இருந்தாலும் கண்டிப்பாக சொர்ணாக்கக்களுக்குப் இந்த பிஸ்தா ஜம்பம் எல்லாம் பொருந்தாது.

ஒருவருக்குத் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டால் போதும். அவனுக்கு இலவச அறிவுரை என்று வழங்குபவர்களின் வாய் உதிர்க்கும் முத்துக்களில் இந்த பிஸ்தா முக்கியமாக இடபெறும். `பாதாம், பிஸ்தா, முந்திரி எல்லாம் சாப்பிட்டு, உடம்பை தேத்துபா…’ இப்படி...அப்படி என்னதான் உள்ளது இந்த பிஸ்தாவில்?.
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQJupf0cTM8FZc5oByJoSQtCxgoWCpOM0FPs2S3fqo0BiOr16gV
ஒரு 100 கிராம் பிஸ்தாவில்
557 கலோரி உள்ளது. அதாவது 29%
கார்போஹைடிரேட்ஸ் 27.97 கிராம். இது 21.5%
புரதம் 20.60 கிராம். 37%
மொத்தக் கொழுப்பு 44.44 கிராம் 148%
கொழுப்பு 0.0 மிலிகிராம் 0%
நார்ச்சத்து 10.3 கிராம் 27%
http://www.pistachiohealth.com/sites/default/files/images/hcp-nutrition-main.jpg 
விடமின் A -553, 18% விட்டமின் C -5. 12% விட்டமின் E-150% தியாமின் 72.5% சோடியம் 1 மி.கி..பொட்டாசியம் 1.025 மி.கி., கால்சியம் 107மி.கி. 11% காப்பர் 1.3 மி.கி. 144% இரும்புச்சத்து 4.15 மி.கி. 52% மக்னீசியம் 121மி. கி. 30% மாங்கனீசு 1.2 மி.கி. 52% பிராஸ்பரஸ் 376 மி.கி. 54% செலினியம் 7 மிசிகி. 13% சின்க் 2.20 மிகி. 20% இத்தனையும் நிறைந்து உள்ளது. இவை முக்கியமானவை. 30 வகையான வைட்டமின்கள், மினரல்கள், உட்டச்சத்துக்கள் ஆகியவை பிஸ்தாவில்  நிறைந்துள்ளன என்கின்றது. இத்தனை சத்துக்களை உள்ளடக்கிய அது தானே பிஸ்தா. 
  

மூடிய கிளிஞ்சல்கள் போலக் காணப்படும்,  இதன் உடபுறம் பச்சை நிறத்தில்காணப்படும் பிஸ்தாவை `பிஸ்தாச்சியோ (Pistachio)என்று உலக அளவில் அழைக்கிறார்கள்

 

மத்திய கிழக்கு பகுதியில் முதன் முதலாக கண்டுபிடிக்கபட்ட பிஸ்தா மரம், உலகின் மிகப் பழமையான பருப்பு வகை மரங்களுள் ஒன்று என்பர். சுமார் 7000 ஆண்டுகளுக்கும் முன்பே பிஸ்தா மரத்தைப் பயிரிட்டு வளர்த்துள்ளனர். பிஸ்தாவிலும் வளர்ப்பிலும் அமெரிக்காதான் பிஸ்தா. ஆம் உலகிலேயே அதிக அளவில் பிஸ்தாக்கள் (பிஸ்தா மரங்கள்) நிறைந்த  நாடு அமெக்கா. 1903 முதலே கலிஃபோர்னியாவில் பிஸ்தா மரங்கள் பயிர் செய்யப்பட்டு வந்துள்ளன என்கிறது ஆய்வு. .


இனிப்பான சம்பவத்தைப் போல கசப்பையும் ஜீரணிக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த தமிழர்கள் தமிழ்ப் புத்தாணடில் வேப்பம்பூ பச்சடி செய்து கொண்டாடுகிறோம்.. அதுபோல சீனர்கள் ஒவ்வொரு புத்தாண்டையும் கொண்டாடும்போது, இந்த பிஸ்தா பருப்புகளை அனைவருக்கும் வழங்கி மகிழ்கிறார்கள். உடல் நலம், மன நலம், ஒளிமயமான எதிர்காலம், மகிழ்ச்சி, துள்ளல் ஆகியவற்றின் அடையாளமாக பிஸ்தாவை  நினைக்கின்றனர். அதனால் புத்தாண்டில் பிஸ்தாவே முதலிடம் பிடிக்கிறது. அதுமட்டுமல்ல அவர்கள் பிஸ்தாவை மகிழ்ச்சி பருப்பு (Happy nut), என்றே அழைக்கிறார்கள்.  உலகிலேயே அதிக அளவில் பிஸ்தா ஈட்டர் யார் என்றால் சீனர்களே. அவர்களின் நொறுக்ஸில் முக்கிய இடமும் பிஸ்தாவுக்கே.

ஈரானியர்களும் பிஸ்தாவை அதிகமாகப் பயன் படுத்துகின்றனர். இவர்கள் பிஸ்தாவை சிரிக்கும் பருப்பு (smiling nut)என்று அழைக்கின்றனர்.

ரஷ்யாவில் கோடைக்காலத்தில் பிஸ்தா பருப்பு அதிகப் பயன்பாட்டில் உள்ளது என்கிறது ஒரு ஆய்வு. கோடைக்காலத்தில் அடிக்கும் பீருக்கு இது தான் உடன் துணையாம்.

 ஒரு காலத்தில் சரியான செரிமானத்திற்காக சாப்பிடும்போது ரசம் ஊற்றி சாப்பிடுவோம். அந்த ரசத்தை இப்போது ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளில் சூப்பு என்று சாப்பிடுவதற்கு முன்னால் ஒரு கின்னியில் ஊற்றி கொடுக்கின்றனர். நாமும் ஸ்பூனால் உரிஞ்சி உரிஞ்சிக் குடிக்கிறோம். இது பசியைத் தூண்டி அதிகம் சாப்பிட வைக்கும். இதே போல பிரான்ஸ் நாட்டினர், சாப்பிடுவதற்கு முன்பு பசியை அதிகரிக்கச் செய்ய மது அருந்துவார்களாம். அப்போது மதுவுடன் இசைக்கும் பக்க வாத்தியம் பிஸ்தாவாம்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஏழை நாடு இந்தியா, பிஸ்தா சாப்பிடுவதிலும் ஏழைதான். குடிப்பது கூழ் கொப்பளிப்பது பன்னீராகவா இருக்க முடியும்? .ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக அயல்நாட்டு டாலர் புழக்கம் நிறைந்த வீடுகளில் பிஸ்தாவும் இடபிடிக்கிறது. மற்றவர்கள் படம் போட்டுக் காட்டினால்தான் பிஸ்தா எப்படி இருக்கும் என்று அறியும் நிலையில் இன்றும் உள்ளனர்.

சரிங்க.. அப்படி என்னதான் இந்த பிஸ்தாவில் நம் உடலுக்கு நன்மை தரும் விஷயம் இருக்கிறது?

முக்கியமாக மூன்று நோய்கள் உலகில் உலா வந்து தன் இஷ்டம் போல மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. அவை புற்று நோய், இதய நோய், சர்க்கரை நோய். இந்த மூன்று நோய்களும் பிஸ்தா என்றால் கண்ணுக்கு எட்டாத தூரத்திற்கு ஓடி நிற்குமாம். இதைக் கூறுவது அமெரிக்க ஆய்வறிக்கை.

தினமும் பிஸ்தா சாபிட்டு வந்தால் எந்த வகையான புற்று நோயும் வராமல் தடுக்கலாம் என்று அமெரிக்க புற்றுநோய் ஆய்வு சங்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் மட்டும் நான்கு கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்கிறது ஆய்வறிக்கை. ரொட்டியுடன் கையளவு பிஸ்தா உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு கணிசமாக குறையும். மேலும், பசியைத் தூண்டி விடுகிறது என்றும் ஆய்வாளர்கள் நிருபித்துள்ளனர்.

பிஸ்தாவில் குறைந்த அளவு கலோரி, குறைந்த அளவு கொழுப்புடன் அதிக அளவில் நார்ச்சத்து இருபதால் உடல் எடை அதிகம் கொண்டவர்கள், பிற உணவை குறைத்து அதற்கு பதிலாக பிஸ்தாவை உட்கொள்ளலாம் என்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு கை நிறைய தினமும் பிஸ்தா சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவு குறையும் என்கிறது ஒரு ஆய்வு.

நாள்தோறும் 1 அல்லது 2 பிஸ்தா பருப்புகளைச் சாப்பிடுவதன் மூலமாக, 9 முதல் 12 சதவீதம் உடலுக்கு தீமை செய்யும் கொழுப்பின் அளவைக் குறைக்கலாம். இதைக் கூறுவது டொரண்டோ பல்கலைக்கழக ஆய்வு. பிஸ்தா சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை டொரண்டோ பல்கலைக்கழக ஆய்வு உறுதிபடுத்தியுள்ளது. கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு வகைகளைச் சாப்பிடும் போது, அதனுடன் உணவுப்பொருளாக (சைட் டிஸ்ஸாக) பிஸ்தாவைச் சேர்த்துச் சாப்பிடும் போது, கார்போஹைட்ரேட்டை உடல் உள்ளிழுத்துக் கொள்வது மட்டுப்படுகிறது. கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ள பிரெட் சாப்பிட்டால்கூட, அது ரத்தத்தில் படியாமல் பார்த்துக் கொள்கிறது இந்த பிஸ்தா. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும் என ஆய்வு கூறுகிறது.

நாகரிக மோகம் நிறைந்த, வேக உணவு எங்கும் பரவி விட்ட நகர்ப்புறங்களில் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த 50 ஆண்டுகளில் 4 சதவீததில் இருந்து 11 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிலும் இந்தியாவில் குறிப்பாக இளம் வயதினர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற புள்ளி விவரம் கேட்கக் கடினமாக இருந்தாலும் அதுதான் உண்மை நிலை. பிஸ்தா பருப்பைச் சாப்பிட்டால் ரத்தத்தில் கொழுப்பு அளவு குறையும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பிஸ்தா பருப்புகளில் ஓமேகா-3 வகை கொழுப்பு உள்ளது. இது கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை கொண்டுள்ளது எனவே, இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாமாம்.
.
கலர் பார்க்கும் ரோட்டோர ரோமியோக்களுக்கு மிகவும் நற்செய்தி இது. பிஸ்தாவைப்  பச்சைப் பாதாம் என்றும் அழைக்கின்றனர். இதில் உள்ள பச்சை கண்களுக்கு ஒளியூட்டுவதை வெகு நேர்த்தியாகச் செய்கிறதாம். அப்பறம் என்ன கலர் பார்த்துக் கலக்க வேண்டியதுதானே.

செக்ஸ் உணர்வு குறைபாடு இக்காலத்தில் பரவலாக ஆண்களிடம் காண்ப்படுகிறது என்கிறது புள்ளி விவரம். இந்த உடலுறவு ஆர்வம் இன்மை உடல், உள நோய்களுக்கு பெரும்பாலும் காரணமாகி விடுகின்றது.

காதலினால் மானிடர்க்குக் கலவி உண்டாம்
கலவியிலே மானிடர்க்கு கவலை தீரும்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSazJeTXYWw_6bTTewQJKQEuiU4_pltM8hFD0hmNb9-xQ6xyl8ivA
என்பார் பாரதி பெண் என்றால் அழகு, ஆண் என்றால் ஆண்மை. என்பது தொன்று தொட்டு நிலவி வரும் சமூகக் கட்டு. இதில் பெண்மையை ஒளிவீசச் செய்ய எந்த அளவு ஈஸ்ட்ரோஜன் பயன் படுகிறதோ அதே அள்வு ஆண்மையைக் கூட்டுவதில் டெஸ்ட்டோஸ்டீரான் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த டெஸ்ட்டோடிரானை மருந்துகளால் அதிகரிக்க முடியாதாம். . டெஸ்ட்டோடிரானை அதிகரிக்கச் செய்வதில் பிஸ்தாவின் வேலை படு சுத்தமாக இருக்குமாம். தன் ஐந்தாவது வயதில் பழுக்கத்தொடங்கி 200 வயது வரை ஓயாது கனி ஈனும் பிஸ்தா ஈடு இணையற்ற இயற்கை வயாகராவாகி அரிய பயனைத் தருகிறது..

http://www.pistachiohealth.com/sites/default/files/images/WPDLogo_2_HR.regular.jpg
இது செரிக்க சற்று கடினமாக இருக்கும் ஆதலால் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளலாம். பிஸ்தாவைத் தேனுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது சுலபமாகச் செரிக்கும்

ஒரு சுவையான செய்தி.. பிஸ்தாவுக்கு என்றே ஒரு தினம் கொண்டாடுகிறார்கள் என்றால் நம்புவீர்களா? ஆம்  பைபிளில் இடம் பிடித்த(Genesis 43:11)இந்த வரலாறு படைத்த பருப்புக்குப் நன்றி சொல்லும் விதமாக பிப்ரவரி 26 உலக பிஸ்தா நாளாகக் கொண்டாடப் படுகிறது. 

அப்பாடா.. இதுவரை நீங்கள் பிஸ்தாவோ, இல்லையோ இந்த மகிழ்ச்சிப் பருப்பைக் கையில் எடுத்து விட்டீர்கள் அல்லவா. இனிமேல் நீங்கள் பிஸ்தாதான்.. பிஸ்தா எடு!! கொண்டாடு....




நன்றி குமுதம் ஹெல்த்.







ஞாயிறு, 21 நவம்பர், 2010

மணக்கும் சந்தனம் இனிக்கும் செய்திகள்..

சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை??


காசி என்பது புண்ணிய தலம் என்று கேட்டு இருக்கிறோம். படித்து இருக்கிறோம்.அதற்கு மற்றுமொரு வரலாற்றுப் பதிவும் உண்டு. பாரதியைப் பற்றி எழுதும் அனைத்து இலக்கியவரலாறு படைத்த எழுத்தாளர்களும் எழுதுவது பாரதி காசியில் இருக்கும்போது மீசை வைத்துக்கொண்டார். மீசை வைத்துக்கொள்வத்ற்காகவா பாரதி காசி சென்றிருப்பார்.புலம் பெயர்ந்த சோகம். அங்கும் போலிகளின் பொய் புரட்டு இவை பாரதியை மீசை வைத்துக்கொண்டுஎவருக்கும் அடங்காத காளையாகத் திரிய வைத்திருக்கும். பிற்காலத்தில் இது ஒரு வரலாறாகப்பதிவாகியது.

காசி பலரைத் தோற்றத்தில் மாற்றிய இடமாகும். துறவு பூண்டு வடதிசைச் சென்றஈரோட்டுப் பெரியாரின் தாடி வளரவும் காசியே போதிமரமாக இருந்ததுள்ளது. ஏனென்றால் இந்தமீசையும் தாடியும் வரலாற்றுப் பதிவு ஆகியுள்ளதே. இவற்றைப் பற்றி எண்ணும் போது திருவள்ளுவர்கூறிய,
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
என்ற குறள் நினைவுக்கு வராவிடின் நாம் தமிழராக இருக்க முடியாது.

தமிழகத்தைப் பொர்றுத்தமட்டில் மீசை எனறால் இருவருக்கு மட்டுமே என்றுநினைக்கும் நிலை. ஒன்று திருடனுக்கு. மற்றொன்று காவலருக்கு. இவர்களின் மீசை வரலாறுபடைத்து உள்ளது என்றால் அது மிகையாகாது. சரி மீசையைப் பற்றிய ஆய்வுக்கட்டுரை என்றுநினைத்துவிடாதீர்கள். மீசை என்றவுடன் நம் கண்களில் பளிச்சிடும் ஒரு நபர் வீரப்பன்.வீரப்பன் என்றவுடன் நம் நாசிகளில் வீசிடும் ஒரு மணம் சந்தனம். அதைப்பற்றி எழுதுவே இத்தனைசுற்றி வளைப்பு.. ஆமாம் பக்திமான் என்று தன்னை அடயாளப்படுத்திக்கொள்ளபலர் போடும் வேஷங்களின் முக்கிய இடம்பிடிப்பது சந்தனம். உடல் முழுவதும் சந்தனம் பூசிக்கொள்வதுஉடலுக்கும் நல்லது. பிறரிடம் நன் மதிப்பையும் பெற முடியுமே. சிலர் தன்னை சந்தனப்பொட்டுக்........என்று சொல்லிக்கொள்வது... திரையினால் நாம் அறிந்ததே. பொதுவாகக் கேரள நாட்டிளம் பெண்கள்மிகவும் அழகாக இருப்பர். காரணம் அவர்களின் முகத்தில் சந்தனம் நின்று நிலவுவதாலோ என்றும்எண்ணத்தோன்றும். விழாக்களில் நம்மை மணத்தோடு வரவேற்கும் சந்தனத்தை இந்த பதிவில் நாம்வரவேற்போமா?

இது விலை உயர்ந்தது என்பது நாம் அறிந்தது. ஆனால் எந்த அளவு பயன்உடையது, மருத்துவ குணம் உடையது என்பது நம்மில் பலரும் அறியாதது. இந்தியாவில்காணப்படும் மரங்களில் மிகவும் விலை உயர்ந்தது சந்தனமரம். இதன் தாயகம் இந்தியாதான்.இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன. நன்கு வளர்ச்சியடைந்தசந்தன மரமே வாசனை நிரம்பியது.
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQzeZa4gdPQh3hZp6i9BeUDdU9ezR95Kr1kghVt1OFEdOvUnSmYFA
சந்தன மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து கொண்டது.இதில் இருந்து எடுக்கப்படும் அகர் என்னும் எண்ணெய் மருத்துவ குணம் கொண்டது. சருமத்திற்குகுளிர்ச்சி தரக்கூடியது. சிவப்பு, மஞ்சள், வெண்மை என்று மூன்று நிறத்தின் அடிப்படையில் சந்தன மரக்கட்டைகள் தரம்பிரிக்கப்படுகின்றன. நிறம் இவ்வாறு வேறுபட்டு இருந்தாலும் மருத்துவக் குணம் ஒன்று தான்.எனினும், செஞ்சந்தனம் சில சிறப்பு குணங்களைக் கொண்டு காணப்படுகிறது.

தென் இந்தியாவில்இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் சிறு மரம். சந்தன மரம் தமிழகக் காடுகளில், தானே வளரக்கூடியது.. தமிழகத்தில் தனிப் பெரும் மரமாகும். மாற்றடுக்கில் அமைந்த இலைகளையுடைய மரம். இலைகளின்மேற்பகுதி கரும்பச்சை நிறமாயும் அடிப் பகுதி வெளிறியும் காணப்படும். கணுப்பகுதியிலும்நுனிப் பகுதியிலும் மலர்கள் காணப்படும். உலர்ந்த நடுக் கட்டைதான் நறுமணம் உடையது. மருத்துவப்பயனுடையது. இதை காடில்லாத மற்ற இடங்களில் வளர்த்தால் அரசு அனுமதி பெற்றுத்தான் வெட்டவேண்டும். இதன் விலை மிகவும் அதிகம். இது நன்கு வளர்வதற்கு பக்கத்தில் ஒரு மரம் துணையாகஇருக்க வேண்டும். 2-3 ஆண்டுகளில் பழம் விட ஆரம்பிக்கும். இந்தப்பழத்தைப் பறவைகள் உட்கொண்டு அதன் எச்சம் விழும் இடத்தில் விதை மூலம் நாற்றுக்கள் பரவும்.விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தான் முழுப்பலன் கிடைக்கும்.

லேசான துவர்ப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும்கொண்டவை சந்தனக்கட்டைகள். உடலை தேற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வியர்வையை உண்டாக்குதல் போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. சந்தனத்தைத்தொடர்ந்து உபயோகித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். உடல் பலம் பெறும். ஆண்மைத்தன்மை அதிகரிக்கும். அறிவும், மன மகிழ்ச்சியும், உடல் அழகும் அதிகமாகும்.


மருத்துவ பயன்கள்:
சந்தனக்கட்டையை எலுமிச்சம்பழச்சாற்றில் உரைத்து, பசையாக செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூசிவந்தால் படர்தாமரை, வெண்குஷ்டம், முகப்பரு ஆகியவை குணமாகும். முகத்தில் இதை பயன்படுத்துவதால் அதில் வசீகரமும், அழகும் உண்டாகும். பன்னெடுங்காலமாக நம் நாட்டில் மைசூர் சாண்டில் சோப்புபயன்பாட்டில் உள்ளது இதனால் தானே.

ஒரு தேக்கரண்டி சந்தனத்தூளை அரை லிட்டர் தண்ணீரில் இட்டு காய்ச்சிகுடித்து வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.

சந்தனத்தை பசும்பாலில் உரைத்து, சுண்டைக்காய் அளவுகாலை, மாலை வேளைகளில் தொடர்ந்து 10 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் வெட்டைச்சூடுதணியும்.

2 தேக்கரண்டி சந்தனத்தூளை அரை லிட்டர் குடிநீரில் இட்டு காய்ச்சி குடித்துவந்தால் காய்ச்சல் குணமாகும்.

அதிகமாக சைட் அடிக்கும் ஆசாமிகளுக்கு கண்களில் கட்டி வருவது உண்டு.இந்த ஆசாமிகள் சந்தனக்கட்டையை எலுமிச்சம்பழச்சாற்றில் நன்கு அரைத்து பசை போல் செய்து, கண் கட்டிகள் மீது பற்று போட வேண்டும். இரவில் படுக்கைக்கு செல்வதற்குமுன்னர் இவ்வாறு செய்து காலையில் கழுவிவிட வேண்டும். 5 நாட்கள் தொடர்ச்சியாக இப்படிசெய்து வந்தால் கண் கட்டி குணமாகும். மீண்டும் விட்ட பணியைத் தொடரலாம்.

இன்னொரு பிரிவினர் எப்போதும் மதுவில் மோகம் கொண்டு ஃபுல்லில் தள்ளாடிக்கொண்டே இருப்பர். இவர்களுக்கு போதை இல்லை என்றால் வாழ்க்கையே இல்லாதது போல. இவர்களைஇப்பழக்கத்தில் இருந்து மாற்ற, நெல்லிக்காய்ச்சாறு 15 மில்லிஎடுத்துக்கொண்டு, அதில் சுண்டைக்காய் அளவு சந்தனவிழுதை கலந்து 40 நாட்கள் குடித்து வந்தால் மது மோகம் தீரும்.
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTXiE_w_i2xsrnAC510kVRl22xaec5hk_ifbnrC4SS8GW44n_ly
சந்தனத்தூள் 20 கிராம் எடுத்துக்கொண்டு, அதை 300 மில்லிலிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி 150 மில்லி லிட்டராகவடிகட்டி, 3 வேளையாக 50 மில்லி வீதம் குடித்து வர நீர்க்கோவை, காய்ச்சல், சீரற்ற மார்புத் துடிப்பு, மந்தம், இதய வலி ஆகியவை தீரும். இதயம் வலிவுறும்..

பலரைச் சங்கடப்படுத்தி வரும் பொது நோய் நீரிழிவு. இதற்கும் சந்தனம்தீர்வு தருகிறதாம்.. நெல்லிக்காய்ச்சாறு, அல்லது கசாயம் 50 மி.லி. யுடன் அரைத்த சந்தனம் 5-10 கிராம் கலந்து 48 நாள் காலை, மாலை குடிக்க நீரிழிவு குணமாகும்.
பசும் பாலில் உரைத்துப் புளியங் கொட்டையளவு காலை, மாலை சாப்பிட்டு வரவெட்டைச் சூடு, மேக அனல், சிறுநீர்ப் பாதை ரணம், அழற்சி ஆகியவை தீரும்

பசும்பாலில் சந்தனக்கட்டையை உரைத்து புளியங்கொட்டை அளவு காலை, மாலை சாப்பிட்டு வர வெட்டை சூடு, மேக அனல், சிறுநீர் பாதையில் உள்ள ரணம், அழற்சி குணமாகும்.

உடல், மன ஆரோக்கியத்திற்கான பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள் சந்தனத்தில்இருந்து தயாரிக்கப்படுகின்றன. கூந்தல் தைலங்கள், சோப்புகள், நறுமணப் பொருட்கள் தயாரிப்பில் சந்தனம் முக்கிய பங்கு வகிக்கிறது.

சரும பாதுகாப்புக்கு ஒன் அண்ட் ஒன்லி மருந்து சந்தனம் என்பது நாம் எல்லோரும்அறிந்ததே. உடலில் வரும் சிறிய வேர்க்குரு தொடர்ங்கி பெரிய கட்டிகள் வரை சந்தனத்தைக்கண்டால் அஞ்சி ஓடிடும். சந்தனக்கட்டையை பழச்சாற்றில் உரைத்து சொறி, சிரங்கு, தேமல் போன்ற தோல் வியாதிகளுக்குபூசலாம். சந்தனத்தை உடலில் பூசி வந்தால் சூரிய ஒளிக்கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகளைதவிர்க்கலாம். தோலைக் குளிர வைத்து நோயை ஓட வைக்கும் காரணிகளில் சந்தனத்திற்கு நிகர்அதுவே.
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRlNIwtLTxkD4nSllIjVwMGbswFG_o2dhcNH36nGlqJJeFFsXyPsA
சந்தனாதித் தைலத்தை தேய்த்து தலை முழுகி வந்தால் உடல் சூடு தணியும்.சந்தன எண்ணெய்-தைலம் -எசன்ஸ்’ 2-3 துளி பாலில் கலந்து குடிக்கஉடல் குளிர்ச்சி பெறும்

சந்தன விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய்க்கு சிறந்தமருந்தாக பயன்படுகிறது.

சந்தனத்தை தலையில் அரைத்துபூசி வந்தால் சுரத் தலைவலி, கோடைக்கட்டிகள், அதன் தழும்புகள் குணமாகும். மூளைக்கும், இதயத்துக்கும் உள்ள பலவீனம் சரியாகும். மொட்டைத்தலைக்கும் சந்தனத்திற்கும்உள்ள தொடர்பு நாம் அறிந்ததே.

இது ரொம்ப ரொம்ப முக்கியமானது. சந்தனத்துண்டுளை நீரில் ஊற வைத்து மையாய் அரைத்து சுண்டைக்காயளவு பாலில் கலந்து இரவு மட்டும் 20 நாள் கொள்ள பால் வினை நோய், தந்திபேகம், பிரமேகம், கனோரியா, பெண் நோய் என்று பலபெயர் பெறும் இவை யாவும் குணமாகி உடல் தேறி, நோய் தீரும்.
ஏதோ சந்தனம் நோய்க்கு மட்டும் மருந்து என்று நினைக்கக் கூடாது.பொதுவாக, நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும்சந்தனத்தை உடலில் பூசி, அது நன்கு உலர்ந்த பின் குளித்துவரலாம். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் உடலில் பார்ப்பவர்களின் நெஞ்சினிக்கும் வசீகரமும், மினுமினுப்பும் வரும். மேலும், உடல் குளிர்ச்சி தன்மையைப்பெறும்

இன்னொரு ஜீம்பூம்பாவும் இதில் உள்ளது என்கிறார்கள். மருதாணி விதை, சந்தனத்தூள் கலந்துசாம்பிராணிப் புகைபோல் போட பேய் பிசாசு விலகும். இது கேக்கவே அதிசயமாக உள்ளதா? அது விலகுதோ இலையோ நல்ல கிருமி நாசினி. அதனால்தான் பத்தி, சாம்பிராணி இவையெல்லாம் அதிகம் சந்தன மணம் இருப்பவை விற்பனை ஆகிறது

இதையும் சொல்லவேண்டியது என் கடமை. இப்போது பெரும்பானமையான கடைகளில்கிடைக்கும் சந்தனப் பவுடரில் உலர்ந்த பட்டாணியை அரைத்துக் கலக்கிறார்களாம்.. அது உடலுக்குமேலும் அறிப்பு போன்ற ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதாம். (நன்றி திரு இராமகிருஷ்ணர்ன்)
ஒரு சுவையான தகவலைக்கூறி இக்கட்டுரையை முடிக்கிறேன்.
பழைய காலத்தில் அதாவது சங்க காலத்தில் சந்தன மரத்தால் ஆன உரலில்தான் தானியங்களைக் குத்துவராம்.. அப்போது முத்துடைய யானைக் கொம்புகளை உலக்கையாகப் பயன் படுத்துவராம். இதை நான் கூறவில்லை. கபிலர் கூறுகின்றார். ஒத்துக்கொள்ள மாட்டீர்களா? பாடல் இதோ,
”முகைவளர் சாந்து உரல், முத்து ஆர் மருப்பின்

வகை சால் உலக்கை வயின்வயின் ஒச்சி “ (- கலி 40)

. இது கொசுறு.. ஒரு காலத்தில் சந்தனத்தைஅரைக்கும் கல்லை வடநாட்டில் இருந்து கொண்டு வந்து சந்தனத்தை அரைத்துப் பயன்படுத்தினர்என்று சங்கப்பாடல் நெடுநல் வாடை கூறுகிறது.
‘’வடவர் தந்த வான்கேழ்வட்டம்
தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்ப’’
எனவே திரு இராமகிருஷ்ணனின்தகவலையும் மனத்தில் கொண்டு சந்தனத்தைக் கடையில் வாங்கிப் பயன் படுத்தாமல் வீட்டில்சந்தனக் கட்டையை வாங்கி வைத்துக் கொண்டு, கல்லில் அரைத்துப் பயன் படுத்தவும். பிறப்பு முதல் இறப்பு வரைஇந்தச் சந்தனம் நம் வாழ்வில் இடம் பெறுகின்றது. செல்வந்தர்களைச் சந்தனக்கட்டையில் எரிக்கும்வ்ழக்கம் இருந்து வந்துள்ளது என்றால் சந்தனத்தின் உயர்வைச் சொல்லவும் வேண்டுமோ....

நன்றி குமுதம் ஹெல்த்.

செவ்வாய், 16 நவம்பர், 2010

ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்!!



http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSjTlKiVDXgiLE3fbtyrHX20ByHlC10-YIHQ4j6srcGM1qfYI-4
உலகெங்கும் வாழும் 
என் அன்பிற்கினிய 
இசுலாமிய உறவுகளுக்கு 
இனிய ஈகைப் பெருநாள் 
வாழ்த்துக்கள்!!






புதன், 3 நவம்பர், 2010

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..


http://img429.imageshack.us/img429/7582/diwali3500du.jpg 
உலகெங்கும் வாழும் 
தமிழர்கள் அனைவருக்கும், 
அகமும் புறமும் 
அறிவொளியும் 
தீப ஒளியும் பெருகிட  
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..