“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

ஜெயிக்கப் போவது யாரு? கோவா?..காவா?



மாணவர்களுக்குக் கடிதம் எழுதப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தேன். கூட்டு விண்ணப்பம் என்று கரும்பலைகையில் கடிதத்தலைப்பு இட்டேன். மாணவர்கள் இயல்பாகவே குரும்பானவர்கள். என் மாணவர்கள் குரும்பானவர்கள் மட்டுமல்ல கரும்பானவர்களும். அவர்கள் அது என்ன கூட்டு மிஸ்? கத்திரிக்காய கூட்டா? பொடலங்காய் கூட்டா? என்று அவர்களுக்கே உண்டான கிண்டலும் கேலியுமாகக் கேட்க ஆரம்பித்தனர்.. இந்த எக்கோ அதிகமாகி சத்தம் வகுப்பறையைத் தாண்டி வெளியில் செல்லும் நிலை.. அதனை ரசித்தாலும் ரசித்ததை வெளியில் காட்டிக்கொள்ளாமல் கோபம் போல முகத்தை வைத்துக் கொண்டு ”எப்போதும் உங்களுக்கு விளையாட்டுதான்; எதைச் சொன்னாலும் சாப்பாட்டுலதான் நினைவெல்லாம்; சாப்பாட்டு ராமன்களா, ஒழுங்காகப் பாடத்தைக் கவனிங்கடா” என்று கூறிவிட்டு மீண்டும் விட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தேன். கூட்டு விண்ணப்பம். விளக்கம் தரப்பட்டது. இன்றைய அரசியல் சூழல் எல்லாம் அலசி ஆராயப்பட்டது. இறுதியாக யார் யாரிடம் எது குறித்து விண்ணப்பம் வைக்க வேண்டும் என்பதெல்லாம் பாடம் கூறி முடித்து, நீ வசிக்கும் தெருவில் பூங்கா அமைத்துத் தர வேண்டி ஒரு விண்ணப்பம் வரைக என்று மாணவர்களிடம் ஒரு வினா வைக்கப்பட்டது.    

            உடனே ஒருவன் ’ஏற்கனவே தெருவுக்கு இரண்டு பூங்காக்கள் உள்ளன;; என்று கூறியவன் அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. இந்த சிறுசுகளும் பெருசுகளும் செய்யற அழும்பு தாங்க முடியல மிஸ். ஒவ்வொன்றும் அரைக்கால டிரவுஷ்ரையும் ஒரு கேன்வாசையும் போட்டுட்டு பூங்காவில் ஏதோ இராணுவ பெரைடு நடத்துர மாதிரி, மார்ச் ஃபாஸ்ட் போட்டுக் கொண்டு விக்கு விக்குனு என்று பூங்காவைச் சுற்றி வருவது பாக்கச் சகிக்கல; வேற கடிதம் சொல்லுங்க மிஸ்” என்றான். சொல்றதைச் செய்யுங்கடா. இங்க நான் டீச்சரா நீ டீச்சரா என்று மனசாட்சியைக் கழட்டி வைத்துவிட்டு ஒரு அதட்டலைப் போட்டேன். அவர்கள் பெட்டிப்பாம்பாகக் கடித்தத்தை எழுதி முடித்தார்கள். 

          என்னதான் அவர்களை அதட்டி அமரவைத்து விட்டாலும் என் மனத்திலும் உலகம் எங்கோ போய்க்கொண்டு இருக்கின்றதே. என்ற எண்ணம் எழாமல் இல்லை. என் தெருவிலும் ஒரு பூங்கா உள்ளது. காலையிலும் மாலையிலும் அந்தப் பூங்காவில் உலா வருவத்ற்காகக் காரில் உலா வருபவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது இந்தியா ஏழை நாடு இல்லை என்று நினைக்கத் தோன்றும். அண்ணாநகர் டவரைத்தாண்டி காலை நேரம் செல்ல வேண்டி வந்தால் குறைந்தது ஒரு மணிநேரமாவது முன்னால் கிளம்பி ஆக வேண்டும். இந்தக் கூட்டம் சுனாமியின் உபயம் என்று சொல்லலாம். அதற்காக கடற்கரையில் வாக்கிங் போகும் கூட்டம் குறைந்து இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் கற்பனை. எங்கிருந்துதான் இத்தனை கூட்டம் வழிகிறதோ தெரியவில்லை. ஆனால் இந்தப் பூங்காக்களால் வேக நடைப்பயிற்சிக்கு ஒரு தளம் என்பதைத்தவிர வேறு பயன் உள்ளதா? உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு வேம்பு, ஒரு அரசு, ஒரு வில்வம், ஒரு துளசி என்று ஏதாவது மரம் அங்கு இருக்கிறதா? 

         வனபோஜனம் என்று ஒரு விழா கொண்டாடுவார்கள். அக்காலத்தில். இக்காலத்திலும் இந்த வனவிழா சில கிராமங்களில் அது நடைபெறுவதாகத் தெரிகிறது.. அவ்விழாவில் வனத்தில் இருக்கும் மரங்களுக்குத் திருமணம் செய்து வைப்பர், ஊர்கூடி அம்மணவிழாவைக் கொண்டாடுவர். ஒன்றுகூடி உண்டு மகிழ்வர். 

              பெரும்பாலும் திருமால் கோயில்கள் எல்லாம் சிறு குன்றிலும் அவன் மருகன் முருகன் கோயில்கள் எல்லாம் பெரும் குன்றுகளிலும் அமைந்திருக்க்கும். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பர். குமரன் கோபம் கொண்டு ஆண்டிக்கோலத்துடன் மலையில் நிற்கும் கோலம், நம் உடலுக்கு நோய் வராமல் காக்கும் பொருட்டு என்றால் இதை ஆன்மீகம் என்று எள்ளி நகையாடுவர். 

         மலையேறி இறைவனை வழிபடச் செல்லும் ஒருவருக்கு வேறு எதாவது உடற்பயிற்சி தேவையா என்பது கேள்விக்குரியது. திருமால் கோயில்களும் மலைகளில் அமைந்து வருவது திருப்பதி, அழகர் கோயில், தான் தோன்றி மலை போன்ற ஆலங்களால் அறியலாம். இவையெல்லாம் மனிதர்களின் உடற்பயிற்சிக்கு என்று அமைந்தவை என்று கூறத்தான் வேண்டுமா? 

         முற்காலத்தில் எல்லா சமயத்து மக்களும் கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கினர். அவரவர்க்கு தனித்தனி கோயில்கள் இருந்தன. இதனை, 

”பிறவா யாக்கை பெரியோன் கோயிலும் 
ஆறுமுக்ச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் 
வால்வளை மேனி வாலியான் கோயிலும் 
நீலமேனி நெடியோன் கோயிலும் மாலை 
வெண்குடை மன்னவன் கோயிலும்” 

என்ற சிலப்பதிகாரப் பாடலால் அறியலாம். 

          கோவில் பக்கம் சென்று பாருஙகள். இப்போதெல்லாம் மிகப்பிரபலமான ஒரு சில கோயில்களைத் தவிர பிற கோயில்கள் ஆள் அரவமற்றே காணப்படுகின்றன.. இதில் என்ன வேடிக்கை என்றால். செம்மறி ஆட்டு கூட்டம் ஒன்று போன பாதையில் மற்ற அனைத்தும் போகும். அது எங்கு என்று கவலைப்படாமல். அது போல இன்றைய மக்கள் நிலையும் மாறிவிட்டது. 

           அயல் நாட்டுக் கலாச்சாரம் அழகாக நம்மைப் பிடித்துக்கொண்டது. மலை ஏற, கோயில்களுக்குச் செல்ல மாட்டார்கள். ஆனால் வீட்டில் மலையளவு பணத்தைச் செலவு செய்து உடற்பயிற்சி சாதனங்களை வாங்கிக் குவித்து இருப்பார்கள். இந்தப் பணக்கார வர்க்கத்தைப் பார்த்து சூடு போட்டுக் கொள்ளும் பூனைகளாக அன்றாட உணவுக்கே அல்லாடும் ஏழைகளும். பார்லருக்கும் ஜிம்முக்கும் சென்று இருக்கின்ற கொஞ்சம் நஞ்சம் பணத்தையும் செலவு செய்தே தீருவேன் என்று அடமாக வாழ்ந்து, மனதளவிலும் உடலளவிலும் நோயாளிகளாக மாறி விடுகின்றனர். 

        ஆலய தரிசனத்தால் விளையும் நன்மைகளை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். நீண்ட சுற்றுப்பாதை அமைந்த கோயில்கள் இந்தியாவில் ஏராளம். இச்சுற்றுப்பாதையை மும்முறை வலம் வந்தாலே உடல் நோய்கள் அகன்று விடும். 

         வேம்பும் அரசும் இல்லா அம்மன் ஆலயங்கள் இல்லை. இவை இரண்டும் கருப்பைக்கு உயிர் வரம் தரும் கடவுள்கள். சங்க காலத்தில் வேப்ப மரத்தடியில் அமர்ந்தே ஊர்ப் பொதுச்செயல்களைச் செய்து வந்தனர். ”

மன்ற வேம்பின் மாச்சினை ஒண்டளிர்”, 
”:மன்ற வேம்பின் ஒண்குழை மலைத்து”, 
”மன்ற வேம்பின் ஒண்பூ வுறைப்ப” 

ஆகிய புறநானூற்றுப் பாடல்கள் காட்டுகின்றன. இதே போல அரச மரங்களும். அதனால்தான் 

அரச மரத்தைச் சுற்றி வந்து அடி வயிற்றைத் தொட்டுப்பார்த்தாளாம்” 

 என்ற பழமொழி எழுந்தது. இவை இரண்டையும் அரசன் அரசி என்றுரைக்கும் வழக்கம் கிரமங்களில் இன்றும் உள்ளது. இவர்களைப் பற்றி மட்டுமல்ல, இன்னும் ஆலயம் நல்கும் பயன்களையும் வரும் பதிவுகளில் பார்ப்போமா..... 


நன்றி குமுதம் ஹெல்த்.

11 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் ஆதிரா! குமுதம் ஹெல்த்தில் எழுதுகிறீர்களா! நீங்க எத்தனாம் கிளாஸ் டீச்சரம்மா? ஆலய பயன்களை அறிய ஆவலாக உள்ளோம்.

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள RVS,
    நான் குமுதம் ஹெல்த்தில் தமிழ் இலக்கியத்தில் மருத்துவம் என்ற தலைப்பில் தொடர் எழுதி வருகிறேன்.
    கல்லுரியில் இருந்து இப்போது பள்ளிக்குச் ஆசிரியராக பணி உயர்வு பெற்றுள்ளேன்..(சிந்திப்பது தெரிகிறது. ஆம் ஒரு சிறு பிரச்சனை..கல்லூரியை விட்டுவிட்டுப் பள்ளிக்குத் தாவி விட்டேன்.இட்ஸ் ஆல் இன் தி லைஃப் கேம்... எல்லாம் விதி)
    இப்போது மேல்நிலை வகுப்புகள் 9 முதல் 12 வரை மிகவும் மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்..(மீண்டும் கல்லூரி கிடைக்கும் வரை..)

    பதிலளிநீக்கு
  3. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.... ஆன்ம+லயம் ஆலயம் என்றிருந்தேன்...இன்று புதிதாக `ஆல்` யம் ...ஆல் போன்ற மரங்களை உள்ளடக்கிய இடம் என்பதையும் அறிந்தேன்.....

    வேண்டுதலில் மலை ஏறிச்சென்று வேண்டுதல் என்பது எவ்வளவு சிறப்பானது....வயதனாவர்கள் , நோய் வாய்ப்பட்டவர்கள்..ஏறிச்செல்வது சற்றுகடினம்....ஆனால் ஏற முடிந்தவர்களும் மலை எற்றத்தை தவிர்த்து, வின்ச்சோ, மற்றவாகனங்கள் கொண்டோ தான் செல்கிறார்கள்.... இது மனதிற்கும் சரி , உடல் நலத்திற்கும் எந்த வகையிலும் பயனில்லை.....

    ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி....உங்கள் பதிவில் பல் மட்டுமல்ல பலவற்றிர்க்கும் உறுதி என்பதை காட்டியுள்ளீர்கள்...

    நல்ல பதிவு மிஸ்....

    பதிலளிநீக்கு
  4. மாணவர் குறும்புடன், உங்கள் எழுத்தையும் ரசித்து படித்தேன். :-))

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள ஆனந்தி,
    இந்த சிறு குடிலுக்கு முதல் முறை வருகை புரிந்துள்ளீர்கள். மிக்க நன்றி ஆனந்தி. அத்துடன் எழுத்தையும் ரசித்ததற்கும் நன்றி..அன்புடன்...

    பதிலளிநீக்கு
  6. ///அன்புள்ள ஆனந்தி,
    இந்த சிறு குடிலுக்கு முதல் முறை வருகை புரிந்துள்ளீர்கள். மிக்க நன்றி ஆனந்தி. அத்துடன் எழுத்தையும் ரசித்ததற்கும் நன்றி..அன்புடன்... ///

    வந்ததில் எனக்கும் ரொம்ப சந்தோஷங்க.. உங்கள் அன்பிற்கு நன்றி :-)))

    பதிலளிநீக்கு
  7. அருமையான கருத்து; அழகான எழுத்து.

    பதிலளிநீக்கு
  8. சிலப்பதிகாரம்,மற்றும் புறநானூற் று மேற்கோள்களை முந்திரி பருப்பாய் நிரவி, பால் பாயசமாய் இனிக்கும் பதிவு ஆதிரா!
    காலம் மாறும்! மீண்டும் பேராசிரியையாய் பீடு நடை போட இறைவனிடம் பிரார்த்தனைகளுடன் ...

    பதிலளிநீக்கு
  9. முதல் வருகை. முதல் பாராட்டு. மனத்தில் இனிக்கிறது. இந்த ஊக்கம் இன்னும் அழகாக எழுத ஊக்கும். மிக்க நன்றி அப்பாதுரை அவர்களே..

    பதிலளிநீக்கு
  10. //சிலப்பதிகாரம்,மற்றும் புறநானூற்று மேற்கோள்களை முந்திரி பருப்பாய் நிரவி, பால் பாயசமாய் இனிக்கும் பதிவு ஆதிரா//!

    ஜி தங்களுடைய பாராட்டு ஒரு சுவை. தங்களின் பரிவு ஒரு சுவை. சுவை மட்டும் அல்ல. சுகமும்.
    தங்களின் மென்மையான பாசமான அக்கறையான எழுத்துக்களைப் பதித்த அந்தக் கரங்களுக்கும் பதிக்க நினைத்த கனிவான இதயத்திற்கும் என் பணிவான நன்றியும் கனிவான அன்பும் என்றும் உரியது ஜி.

    பதிலளிநீக்கு
  11. அன்புள்ள பத்மநாபன்,
    //ஆலயம் தொழுவது சாலவும் நன்று.... ஆன்ம+லயம் ஆலயம் என்றிருந்தேன்...இன்று புதிதாக `ஆல்` யம் ...ஆல் போன்ற மரங்களை உள்ளடக்கிய இடம் என்பதையும் அறிந்தேன்...//

    முதலில் பதிவுலக மும்மூர்த்திகளில் ஒருவரான தங்கள் பின்னூட்டத்திற்கு இறுதியில் பதில் இடுவதற்கு மன்னிக்கவும்.

    புதிய சிந்தனையைத் தந்த தங்களுக்கு நீண்ட மடல் எழுத வேண்டும் என்று இருந்தேன். ஆனம லயம் ஆன்மாவின் ராகம். அது ஆலயத்தில் இனிமையாக இசைக்கப்படும் என்பதே உண்மை. அதற்குக் காரணம் உடல் உள ஆரோக்கியத்திற்குத் தேவையான இயற்கைச் சூழலும் அங்கு நிலவுவதால்.

    //வேண்டுதலில் மலை ஏறிச்சென்று வேண்டுதல் என்பது எவ்வளவு சிறப்பானது....வயதனாவர்கள் , நோய் வாய்ப்பட்டவர்கள்..ஏறிச்செல்வது சற்றுகடினம்....ஆனால் ஏற முடிந்தவர்களும் மலை எற்றத்தை தவிர்த்து, வின்ச்சோ, மற்றவாகனங்கள் கொண்டோ தான் செல்கிறார்கள்.... இது மனதிற்கும் சரி , உடல் நலத்திற்கும் எந்த வகையிலும் பயனில்லை.....//

    அதற்குத்தான் ஆயிரக்கணக்கில் செலவு செய்து த்ரெட் மில் (tred mill) வாங்கி அதில் ஏறுகிறார்கள், ஓடுகிறார்கள்.

    //ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி....உங்கள் பதிவில் பல் மட்டுமல்ல பலவற்றிர்க்கும் உறுதி என்பதை காட்டியுள்ளீர்கள்...//

    வேப்பம் காற்று உடல் நலத்திற்கு உகந்தது என்பதால் ஆலயங்களில் பெரும்பாலும் வேப்ப மரம் இருக்கும்.

    மிகவும் விளக்கமான தங்களின் பின்னூட்டத்திற்கு என் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு