“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

புதன், 25 ஆகஸ்ட், 2010

வெங்காயம் சுக்கானால்......



http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSiBh5QysW69s0VvfgnAcc-TZZ8wwsh7EeOpxM2cb1WhBzBjivPoQ


சர்வ சாதாரணமா நமக்கு என்னென்ன நோய் வருகிறது என்று பார்த்தால் முக்கியமாகத் தலைவலி. எண்சான் உடலுக்குத் தலையே பிரதானம்
என்று கூறுவதைக் கேட்டு இருப்போம். ஏதாவது ஒரு பிரச்சனையைப் பற்றி பேசும்போது
, அது ஒரு பெரிய தலைவலி என்று அடிக்கடி
சொல்ற அளவுக்கு ரொம்ப பிரசித்தி பெற்றது இந்தத் தலைவலி.

ஒரு சிலருக்கு அடைமழை போல லேசான தலைவலி நாள் முழுவதும்
இருந்து கொண்டே இருக்கும். இது நம்மைப் பறபறப்பாக ஓடவும் விடாது. ஓரிடத்தில் உட்காரவும் விடாது.

இன்னும் சிலருக்கு உண்மையாகவே இரண்டு பேர் தலைக்குள் சுத்தியலால் முடிஞ்ச்வரைக்கும் பலமா அடிப்பது போல இருக்கும். இது இடி ரகத் தலைவலி.
கிராமப்புறத்தில் இதனை மண்டை இடி என்று கூறுவார்கள். சிலருக்குக் கழுத்தில் தொடங்கி கண்கள்
, உச்சந்தலை வரைக்கும் நரம்பு வழியாக ஒரு தலைவலி எக்ஸ்பிரஸ் பாஸ் ஆகும். இது மண்டைக் குத்தல் ரகம். இது குளித்த பின்பு சரியாகத் தலை துவட்டாமல் விடுவதால், தலையில் நீர் கோத்துக் கொள்வதால் ஏற்படுகிறது. எக்ஸ்பிரஸ்ஸோ பாசஞ்சரோ எதுவாக இருந்தாலும் வந்துட்டா
ஒரே தலைவலிதான்.

எண்சான் உடலில் ஒரே ஒரு சாண் தான் வயிறு. இதில் தான் இருக்கிறது உயிர் பொம்மலாட்டத்தின் சூட்சுமக் கயிறு. ஒரு பெண் துறவியாய்ச் சுற்றித் திரிந்த ஒளவையாருக்கே தொல்லை கொடுத்த உறுப்பு வயிறு என்றால் நம்புவீர்களா? வயிறுபடுத்தும் பாடு பற்றி ஒளவை பாடுவதைப் பாருங்கள்.


ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்

இரு நாளுக்கு ஏல் என்றால் எலாய்

ஒருநாளும் என்நோ அறியாய்; இடும்பைகூர்

- என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது.

என்னதான் வயிறோட வாழ்ந்து குப்பைக் கொட்ட முடியாது என்று ஒளவை சொன்னாலும் வயிறை நாம் குப்பைக் கூடை போல் நிரப்பிக் கொண்டே இருந்தால்!? உபரி உணவுகளான நொறுக்ஸுக்குத் தடை போடுவது தான் நல வாழ்வுக்கு ஒரே விடை என்று எவ்வளவு தான் படித்தாலும் நம் மூளைக்குப் புரியும் அளவு நாசமாப் போன நாவுக்குப் புரிவது இல்லையே.

பந்தியில் நின்றாய் முந்தி

பரிசாய்ப் பெற்றாய் நல் தொந்தி,

அது குருதியின் இடை நிற்கும் நந்தி

இறுதியில் இயங்கும் இதயம் விந்தி

முடிவில் சடுதியில் இறப்பாய் இயல்புக்கு முந்தி

இனியும் இந்நிலை வேண்டுமா நீ சிந்தி எனவே

இருப்பாய் பந்திக்குச் சற்றே பிந்தி

என்ற புதுப்பாடலும் உணவுக் கட்டுப்பாட்டினைப் பற்றிக் கூறுவதே.

அட நொறுக்குத் தீனிகளை விடுங்க, முதன்மை உணவே கூட அளவுக்கு அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும், அல்லது உருளை, சேனை என்று எதையாவது நாக்கு ருசி பார்த்து விட்டாலும் சரி வயிற்றுக்குள் வாயு பகவானின் ஆட்சி ஆரம்பித்து விடும். அசிடிடி, அப்புறம் ஒரே உப்பிசமாக இருக்கிறது என்பார்கள், நெஞ்சைக் கரிக்கிறது என்பார்கள்,

நெஞ்சுக்குத்தல் என்பார்கள், நெஞ்செரிப்பு என்பார்கள்.. தொப்புளைச் சுற்றி குத்தி
வலிக்கிறது என்பார்கள். பசியேப்பம் என்பார்கள், புளியேப்பம் என்பார்கள். ஒரே
புலம்பல்ஸ்தான் போதுமா வயிறு தொடர்பான நோய்கள்.

காது, மூக்கு, தொண்டை (ENT – ear , nose, throat) என்ற மூன்றும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகத் தொடர்புடையது. அதிலும் மூக்குத் தொடர்பான நோய்கள் உடனடியாகத் தொண்டைக்கு வேட்டு வைக்கும் சக்தி வாய்ந்தன. சளியினால் தொண்டையினால் கரகரப்பு, இருமல் கபம், மூச்சு இரைப்பு போன்றவை. காதையும் பாதிக்கத் தவறாது. காது குத்தல் இது அதிக பனி, வாய்வு
போன்றவற்றால் ஏற்படுகிறது.

இந்த நோய்கள் மட்டுமல்ல, மூலம், வாதம், காய்ச்சல் போன்ற அனைத்து நோய்களின் நிவாரினி யார் என்று கேட்டால் தி ஒன் அண்ட் ஒன்லி சுக்குதான் என்கிறது தமிழ் மருத்துவம். சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்ல; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளுமில்லைஎன்ற பழமொழியும் இருப்பது எல்லோருக்கும் தெரியும்.

தீபாவளி அன்று கண்டிப்பாக எல்லோர் வீட்டிலும் முக்கிய இடத்தைப் பிடிப்பது தீபாவளி மருந்து. இது சித்தர்கள் சொன்னது மட்டுமல்ல. நம்ம வீட்டு சித்திகள் வீட்டிலேயே கிண்டுவதும்தான். இந்த லேகியத்தில் பெரும்பங்கு வகிக்கும் பலசரக்குப் பொருள் சுக்குதான். தீபாவளி அன்று அதிகாலையில் நாம் விழுஙகிடும் அத்த்னை பண்டங்களையும் ஜீரணிக்கும் சக்தி நம் வயிற்றை விட இந்தச் சுக்குத்தான் அதிகம்.

பொதுவாக எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய கைமருந்து சுக்குப் பொடி. வயிறு தொடர்பான நோய் எதுவாக இருந்தாலும் உடனே வெந்நீரில் சுக்குத்தூளைக் கலக்கிக் குடித்தால் அஜீரணம், ஏப்பம், வயிற்றுப் பொறுமல், வயிற்று உப்பிசம், வ்யிற்று வலி, நெஞ்சுக்கரிப்பு, நெஞ்சு எரிச்சல் போன்றவை நீங்கும். முக்கியமாக வாயு பகவானுக்கு முக்கிய எதிரி இந்தச் சுக்கு. வாயுவினால் ஏற்படும் நெஞ்சுக்குத்தலுக்கு உடனடி நிவாரணம் இதனால் கிடைக்கும்.

சுக்கை நன்றாகப் பொடி செய்து அதனுடன் வெல்லத்தையும் சிறிதளவு நெய்யையும் சேர்த்து ஒரு எழுமிச்சம்பழ அளவு தின்றால் நாவுக்குச் சுவையாகவும் வயிற்றுக்கு இதமாகவும் இருக்கும். பித்தத்தினால் ஏற்படும்
வாய்க் கசப்பு நீங்கி நன்கு பசி எடுக்கும்.

சுக்குத்தூளைச் சூடான பாலில் கலந்து குடித்தால் தொண்டை கரகரப்பு, தொண்டை வலி போன்ற தொண்டை தொடர்பான நோய்கள் நீங்கும்.

வெறும் வாயில் சுக்கைப் போட்டு மென்று அதன் சாறை மட்டும் விழுங்க, குரல் கரகரப்பு, தொண்டைக் கட்டு போன்றவை நீங்கும்.

சுக்கை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் எந்த தலைவலியானாலும் பறந்து போகும். சுக்குப் பற்றால் முழங்கால் மூட்டு வலிக்கும் நிவாரணம் கிடைக்கும்.

சிறிதளவு சுக்கினை லேசாகத் தட்டித் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, அதில் பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு (இரண்டும் இல்லாவிட்டால்
சாதா வெல்லம்) தேவையான அளவு சேர்த்து வடிகட்டி குடித்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு என்ற பழம்பாடல் ஒன்று நாள்தோறும்
சுக்கு நம் உணவில் அமைய வேண்டிய அவசியத்தைக் கூறும். இஞ்சியின் உலர்ந்த நிலையே சுக்கு என்பது அனைவரும் அறிந்ததே. இத்தனை மருத்துவ குணம் கொண்ட சுக்கின் மருத்த கூறும் பாடல் இதோ.

சூலைமந்தம் நெஞ்செரிப்பு தோடஏப்பம் மழலை
மூலம் இரைப்பிருமல் மூக்குநீர் வாலகப
தோடமதி சார்த்தொடர் வாத குன்மநீர்த்
தோடமஆ மம்போக்குஞ் சுக்கு

இப்போது புரிந்து இருக்கு ஏன் இத்தனை நோய்களுக்கான் பீடிகை என்று. மனிதனின் உள நோயைப் போக்கும் அறநூல் திரிகடுகம்.திரிகடுகம் என்பது மூன்று காரமான மருந்துப் பொருள்கள். சுக்கு, மிளகு, திப்பிலி இம்மூன்றும் உடல் நோயைப் போக்கும் குணம் கொண்டவை என்றாலும் இம்மூன்றினுள்ளும்
முதலிடம் பிடித்துள்ளது சுக்கே.

இது சிஞ்சிபெரசியே (Zingeberaceae) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாவரப் பெயர் சிஞ்சிபெர் அசுபிசினேல். (Zingiber officinale). நாகரம், விசுமஞ்சுண்டி, நல்லகோடதரம், வேர்க்கொம்பு, சீதரம், சிங்கிகம், மாதிசம், அலறகட்டி, தன்னப்பி, சவுண்டம், அருக்கன், அதகம், ஆர்த்ரகம், உபகுல்லம், உலர்ந்த இஞ்சி, கடுபத்திரம், சுண்டி, சொண்டி, செளவர்ணம், நவசுறு என்று பல பெயர்களில் தமிழ் நூல்களில்
வழங்கப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பு. சுக்கு புற நஞ்சு; கடுக்காய் அகநஞ்சு என்பார்கள். சுக்கின் தோலில் நஞ்சு இருப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாக இஞ்சியைச் சமையலுக்குப்
பயன் படுத்தும் போது தோல் எடுத்த பின்பே பயன்படுத்துவோம். ஆமாம் இஞ்சியில் இருந்து தோலை உரித்து விடலாம். சுக்கில் இருந்து எப்படி என்று கேட்பது புரிகிறது. கல்லில் இருந்தே நாரை உரிப்பவர்கள் இருக்கிறார்களே! சுக்கிலிருந்து முடியாதா? கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள். அதுசரி..இதையும் நானேதான் கூற வேண்டுமா? சுக்கைச் சிறிதளவு தட்டிவிட்டு மிக்ஸியில் போட்டுத் தூளாக்கிய பின்பு சல்லடையில் போட்டுச் சலித்தால் தோல் எல்லாம் மேலே நின்று விடும்.

சளி பிடிக்க விடாமல் தடுக்கும் சக்தி சுக்குக்கு உண்டு சுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகிறது. இதன் மூலம் சிக்கன்குனியா, பன்றிக்காய்ச்சல் இரண்டையும் கட்டுப்படுத்தும் குணம் சுக்குக்கு உண்டு என்று கண்டறிந்துள்ளனர்.

மாரல்:
நீர் நிறைந்த இந்த உடலை வெங்காயம் என்பது சித்தர் பாணி. இந்த வெற்று உடலைச் சுக்காக்குவது அவர்களுக்குக் கை வந்த கலை. நாமும் சுக்கை நாள் தோறும் பயன் படுத்தி வந்தால் சித்தர் பேணுவது போல நம் உடலும் சுக்காக சிக்கென இருக்கும். உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்... இத்தனை நோய்களுக்கு மருந்தாக இருக்கும் சுக்கை நாம் அன்றாடம் உணவில் பயன் படுத்தாமல் இருக்கலாமா? யோசிங்க..... திரும்பவும் வரேன் வேற மருந்துப் பொருளோட... இப்ப.. வரட்டா....




நன்றி குமுதம் ஹெல்த்.



வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

மருத்துவமா நகைச்சுவையா...




எங்களால் முடிஞ்சதைச் செஞ்சிருக்கோம்; இனிமே இறைவன் கையிலதான் இருக்கு

இன்னும் 24 மணிநேரம் கழிந்தால்தான் சொல்ல முடியும் 

ஐ ஏம் வெரி சாரி..

இட் ஈஸ் எ மெடிக்கல் மிராக்கல்

“இதற்கு முன் இது போல கேஸ் மெடிக்கல் ஹிஸ்டிரியிலயே இல்ல.

திரைப்படம் உச்ச கட்டத்தை எட்டும் போது ஒரு வெள்ளைக் கோட்டு ஆசாமி ஆபரேஷன் தியேட்டரில் இருந்து கையுரைகளைக் கழற்றிக்கொண்டே வந்து, மேலே பார்த்துக்கொண்டு சோகமான மேற்கண்ட சொற்களில் ஒன்றிரண்டை உதிர்த்துவிட்டுப் போவார். நமக்கோ வருத்தத்திற்குப் பதில் அடக்கமுடியாமல் சிரிப்பே வரும். இது ஊமைப்படம் பேசும் படமாக மாறியதில் இருந்து திரி டி ஃபோர் டி என்று எத்தனையோ முன்னேற்றங்களைக் கண்ட திரைப்பட வரலாற்றின் தொன்று தொட்டு இன்று வரை காணப்படும் மாறாத இலக்கணம்..
(இதில் இந்த ஐ ஏம் வெரி சாரி ரொம்ப ஸ்பெஷல். கீழே பார்த்துக்கொண்டு சொன்னால் ஒரு பொருள். மேலே பார்த்துக்கொண்டு சொன்னால் ஒரு பொருள். முன்னது நோயாளியை முடித்து விட்டுச் சொல்வது. பின்னது இனிமேல்தான் முடிக்கப் போகிறேன் மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள் என்றுரைப்பது)

இதில் இன்னும் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களின் வீட்டுக்குச் சென்று ஒரு நோயாளியைப் பார்க்கும்போதும் இந்த இன்ஸெண்ட் சொற்களுக்குச் சொந்தக்காரர்கள் வெள்ளைக் கோட், கழுத்தில் ஸ்டெதாஸ் கோப், கையில் பிரீஃப் கேஸ், முகத்தில் ஒரு சோக ரேகை.... வாயில் சோக டயலாக். பாவங்க இந்த டாக்டர்கள். சொந்த வீட்டிலாவது சாதாரனமாக வேஷ்டி, கைலி, அல்லது இரவு உடை அணிய விடுவார்களா இந்தத் திரைப்படக்காரர்கள் என்று தெரியவில்லை.

கடிகாரத்தை வயிற்றில் வைத்துத் தைத்துவிட்டு அல்லாடும் டாக்டர், மூளை ஆபரேஷனைத் மாற்றி செய்து விட்டு தவிக்கும் டாகடர் என்று நகைக்கொடைக்கு விருந்தாகப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களைச் சற்றும் நகைச்சுவை உணர்வே இல்லாதவர்கள் என்ற ஒரு படிமமாக உருவாக்கிய புண்ணியம் இந்த தமிழ்த்திரைப்படத்திற்குச் சொந்தமானது.

எனக்குத்தெரிந்த ஒரு எலும்பு மருத்துவர் அஷோக் நகரில் இருக்கிறார். இந்த திரைப்பட டாக்டர் இலக்கணத்திற்கு நேர்மாறானவர் அவர். சிரிக்காமல் பேசுவது அரிது. அதுமட்டுமல்ல எப்பேர்பட்ட தீர்க்க முடியாத மோசமான நோயாளியிடம் கூட சொல்ல வேண்டியதை அவர்கள் மனதில் ஏறுவது போல கூறுவார்.  இதுதாங்க ஆனா நீங்க இதை ஈசியா சமாளித்துக் கொள்ளலாம் என்று நகைச்சுவை ததும்ப கூறி நோயாளியின் மனதில் கவலையே இல்லாமல் சுமையை ஏற்றி வைப்பார். சுமக்க தைரியத்தையும் கொடுப்பார்.

என் அருகாமை வீட்டுப் பெண்மணி ஒருவர் முழங்கால் முட்டி வலியால் மிகவும் அவதிப்பட்டர். நடக்க முடியாத நிலை. அப்பெண்மணியை இவரிடம் அழைத்துச் சென்றேன். இது ஆபரேஷன் செய்தால் மட்டுமெ சரியாகும். ஆனால் ஆபரேஷன் செய்து கொள்ள நீங்கள் என்ன வாஜ்பேயா? என்றார் பாருங்கள். நாங்கள் அதிர்ந்தே போனோம். பிறகு அதற்குத் தேவையான பலம் உங்க பர்ஸுக்கும் இல்ல. எங்க நர்ஸுக்கும் இல்ல என்றார். அதிர்ந்து போய் என்ன கூறுகிறீர்கள் என்று கேட்டால் இல்லம்மா அது அதிகம் செலவு ஆகும் ஆபரேஷன். உஙக உடலில் அந்த அறுவைச் சிகிச்சையை தாங்கும் அளவு சக்தி இல்லை. அதனால் வாஜ்பேயி மாதிரி ஆபரேஷன் செய்து கொள்ளாதீங்க..ஆனா அவர் மாதிரி வாழுங்க இனிமேல் என்றார். அப்போதும் புரியாமல் விழித்த போது, பேசாமல் இனிமேல் வாஜ்பேயிமாதிரி வீட்டில் ஒரு சேர் போட்டு உட்கார்ந்து உங்கள் கணவரைச் சமைத்துப் போடச் சொல்லுங்கள் என்று சிரித்துக் கொண்டே சொன்னார். பிறகு அருமையாக விளக்கினார். குறைந்த செல்வு மாத்திரை மருந்துகளில் நிவாரணம் அளித்தார்.  

வெ:ள்ளைக் கோட்டுப் போட்ட ஆங்கில மருத்த்வர்களை விடுங்கள். நம் பண்டைய தமிழ் மருத்துவர்கள்  எப்படி இருந்தார்கள்.? அழுக்குப் பிடித்த காவி வேட்டியும் ஜடா முடியும் அவர்களைச்சுற்றி நான்கு இலை தழைகளும் என்று இருந்தனர். இவர்களின் மொழி குறிப்பு மொழி. பிறர் அறிய எதையும் கூற விரும்பாத இவர்கள் அதற்குக் கூறிய காரணம் எவரும் மருத்துவத்தை அரைகுறையாகக் கற்றுத் தவறாக மருத்துவத்தைச் செய்து விடக்கூடாது என்பதாம். இதன் உள்நோக்கம் வேறு. வழி வழியாக இவர்களின் பரம்பரைக்கு மட்டும் இம்மருத்துவம் சொந்தம் என்று கருதியதே. அது போகட்டும். இவர்களிடம் நகைச்சுவை உணர்வு இருந்ததா? இல்லை பிடி சாபம் மருத்துவர்களா? கீழ் கொடுத்துள்ள ஒரு பாடலைப் பார்த்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள். வயிற்றுக்கடுப்பால் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் ஆகடிய காவியம் கூறும் மருந்து இது.

ஆனைக்கன்றில் ஒரு பிடியும் அசுரர் விரோதி இளம் பிஞ்சும்
கானக் குதிரை மேற்றோலும் காலில் செருப்பாய் மாட்டியதும்
தாயைக் கொன்றான் தனிச் சாற்றில் தயங்கிக் காய்ச்சிக் குடிப்பீரேல்
மானே பொருதும் விழியாளே வடுகும் தமிழும் குணமாமே

ஆனை - அத்தி
அசுரர் விரோதி அரக்கர்களை அழித்த முருகன், இங்கு முருகன் என்பது  முருங்கை.
கானக்குதிரை - மாம்பட்டை
காலில் செருப்பு - செருப்புப் பாததில் தட்டுப்படுவதால் செருப்படி
தாயைக் கொன்றான் - வாழை
வடுகும் (தெலுகு) தமிழும் - தமிழ் பேசும் தெலுங்கர்கள்

விளக்கம; அத்திப்பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, மாம்பட்டை, செருப்படி, வாழைச்சாறு ஆகியவை வயிற்றுக்கடுப்பு நோய்க்கு மருந்தாம். வடுகும் தமிழும் என்பது வயிற்றுக்கடுப்பின் போது வயிற்று வலியின் போது முனகும் முனகல் தமிழ் வடுகு மொழி போல இருக்குமாம். இது நகைச்சுவைக்காக இட்ட சொல். இது போல பல மருத்துவப் பாடல்கள் இருக்கிறது..மற்றொன்று பார்ப்போமா?

ஆய்க் கல்லை அள்ளி
அதிலே கொஞ்சம் உள்ளி
இயத்தைக் கொஞ்சம் கிள்ளி
     வைத்து உருக்க வள்ளி
பொன்னாங் கண்ணி பொடுதலே
     தம்பி கூனன் தலையிலே
சிவனை வைத்துச் சுடுங்கடி
     கடையில் கொண்டு வில்லுங்கடி


தம்பி கூனன் தலையிலே சிவனை வைத்துச் சுடுவதா? எப்படி?
தம்பி கூனன் என்பது அயப்பொடி என்ற ஒரு உலோகப்பொடியைக்குறிக்கும். சிவன் என்பது குறிப்பு மொழியாக இரசமணியைக் குறிக்கும்.
ஆயக்கல் என்பது;  ஆயன் என்றால் திருமால். திருமால் அணியும் அரிதாரம். (நாமக்கட்டி)
இயம் என்றால் இரும்பு. இவை எல்லாம் சேர்த்து செய்யப்படும் மருந்து எது? இவ்ற்றைச் சேர்த்து இதனை தயாரித்து கடைக்குக் கொண்டு சென்று விற்பதாமே.

     பொன் மனச்செம்மல், புரட்சித் தலைவர் என்றவுடன் ஒரு விலையுர்ந்த மருந்தின் பெயர் நமக்கு நினைவு வருமே. அந்தப் பொன்னான மேனியின் தக தக ஜொலிப்புக்குக் காரணமானது. அதேதான். அதேதான்.  தங்க பஸ்பம். அதன் செய்முறையை விளக்கும் பாடல் இது. நாமக்கட்டி, வெள்ளைப்பூண்டு, இரும்பு, வெள்ளி, அயப்பொடி, இரசம் (பாதரசம்) ஆகியவற்றைச் சேர்த்து உருக்கினால் ஒரு பதமான நிலையில் இரும்பு பொன்னாக மாறுமாம். தயாரிக்கும் போது சற்றுக் கவனம். தங்கக் கம்பியைத் தயாரிக்கிறேன் என்று வேறு கம்பியை எண்ணும் நிலை வந்து விடவ் போகிறது. சரி நீங்கள் விரும்பினால் அடுத்த இதழிலும் நகைச்சுவைத் தொடரும்.... 



நன்றி குமுதம் ஹெல்த்.













புதன், 18 ஆகஸ்ட், 2010

இதயத்துக்குக் கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை).

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSH1aZa5GOLwW3MSg_BHe7m0djyYRlN3Hl7VebWvBdFuXn7vpo&t=1&usg=__rxKeZ4oUdE9mGRuvGg1JxTctoaw=

காலையில் தினமும் கண்விழித்தவுடன் கும்பிடும் தெய்வம் இது. இன்னும் பொருத்தமாகக் கூற வேண்டுமானால் கண் விழிக்கும் முன் மூக்கால் கண்டு (நுகர்ந்து) கும்பிடும் தெய்வம் என்றும் கூறலாம். எத்துனை முக்கியமானதாக இது இருந்திருந்தால் இதற்கென டீ டைம் என்று இரு நேரத்தை காலையிலும் மாலையிலும் ஒதுக்கி வைத்திருப்பர் எல்லா வேலை இடங்களிலும். எந்த இடத்திற்குப் போனாலும் எது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இது கிடைக்காமல் இருக்கவே இருக்காது. அவ்வாறு எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது இது. வாழ்வில் மக்கள் உற்சாகமாகவும் ஊக்கமாகவும் செயல்பட உதவிடும் காரணிகளில் முக்கியமானது இது.. இல்லம் தொடங்கி, பணி புரியும் அலுவலகங்கள் மட்டுமன்றி ஓட்டுநர், நடத்துநர், இழுப்பவர்(வண்டி) சாதி மதம் பாட்டாளி, பணக்காரன் என்று பேதமின்றி அனைவருக்கும் சக்தி கொடுக்கும் ஒரே பாணம் இது. முக்கியமாகப் பாட்டாளிகளின் ஊக்க டானிக் இது. அலுவலங்களில் பலரின் வெளிநடப்புக்கும் அதே வேளையில் விரைவான பணி முடிப்புக்கும் பெரிதும் உதவுவது இதுவே. அதுதான் டீ என்று நம்மால் விரும்பி அழைக்கபடும் தேயிலை. பச்சைத்தேயிலைக்குப் பச்சைக்கொடி காட்டியவர் சீன நாட்டு மன்னராகத் திகழ்ந்த ஷென் நங். புதிதாகப் பறிக்கப்பட்ட பச்சைத் தேயிலை இலைகளை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்த போது வெளிப்பட்ட கருஞ்சிவப்பு நிற திரவத்தைக் குடித்த போது ஏற்பட்ட கொள்ளை உற்சாகத்தில் குதிக்கவே ஆரம்பித்து விட்டாராம். இந்த ஆட்டத்தில் தொடங்கியதே கிரீன் டீயின் ஆட்டம். அது மட்டுமல்ல ’சாயா’ என்ற சொல்லும் ’சா’ சீன மொழி சொல்லில் இருந்துதான் தோன்றியுள்ளது.

தேயிலையின் தோற்றம், அதன் பெயர் தோற்றம் எல்லாம் சீனா, கருதப்பட்டாலும் இது உலகெங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.
ஆண்டுக்கொரு முறை விளையும் தாவர வகையான். இதன் ஃபேமிலி பெயர் கெமிலா சினசிஸ் (Camellia sinensis). இதில் சுவை என்னவென்றால் இந்தப் பெயர் ஒரு கிறித்துவ பாதிரியாரின் பெயர். செரொக் காமெல் என்ற இப்பாதிரியார் தேயிலையை உருவாக்கவும் இல்லை. கண்டு பிடிக்கவும் இல்லை. பின் இவரின் பெயர் எதற்கு? தாவரவியல் அறிஞரான இவர் அறிவியலுக்கு ஆற்றிய தொண்டைப் பாராட்டும் வகையில் இவர் பெயர் அதிகமாக விளையும் இந்த தாவர இனத்திற்கு வைக்கப்பட்டது.

டீ இலை அதாவது தேயிலை ஒன்றுதான் ..ஆனால் அது வெள்ளை தேயிலை, கருப்புத் தேயிலை , மஞ்சள் தேயிலை, பச்சைத் தேயிலை என்று இதற்கும் வண்ணம் பூசி அழைப்பர்..

இது ஆண்டுக்கொரு முறை விளையும் பச்சைத்தாவர வகை. பச்சைத் தேயிலை என்பது டீ என்று மூச்சுக்கு முந்நூறு முறை நம்மால் அழைக்கப்படும் சாதாரனத் தேயிலையின் வேறுபட்ட பக்குவ நிலையே ஆகும் பொதுவாக பறிக்கப்படும் தேயிலை சரியாக உலர்த்தப்படாவிட்டால் அதில் உள்ள ஆகிஸிஜன் வெளியேறி அதில் உள்ள குளோரோஃபில் எனப்படும் பச்சயம் அழிந்து விடும். அப்போது அதிலிருந்து டானின் என்றதொரு இரசாயானம் வெளிவருகிறது. இதனால் டீ ஒரு விதமான துவர்ப்புச் சுவையை அடைகிறது. இதனை தமிழில் நொதித்தல் என்பர்.

நாம் அயல் நாட்டில் இருந்து கொண்டு வரும் கீரீன் டீயை மிகச்சுவையானது என்று அருந்த விரும்புகிறோம். அதில் பிற தேயிலையைப் போல நொதித்தல் இருக்காது. அதற்கு முன்னரே அதன் இலைகளை இளம் குருத்துகளுடன் மிதமாகச் சூடாக்குவர். இதனால் இதில் உள்ள நொதிகளின் நிலை மந்தமாக்கப்படுவதால் இயல்பாக இருக்கும் துவர்ப்புச்சுவை குறைந்து ஒரு கசப்புச்சுவை வருகிறது. இதில் உள்ள ஃபாலி ஃபினாலின் சிதைவது இல்லை.

மூளைக்கும் உடலுக்கும் சுறுசுறுப்பு அளித்து உற்சாகமூட்டுவது ஒருபுறம் இருக்க, இது இதயத்தைக் காக்கிறது என்பது இன்றைய மருத்துவ ஆயவு கண்டறிந்த உண்மை. அதனால் உயிர்காக்கும் பாணம் இது என்றும் தயங்காமல் கூறலாம் என்கின்றனர் கிரீக் நாட்டின் மருத்துவ ஆய்வுக்குழு. பச்சைத்தேயிலயில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு துணைபுரிகிறது. .
நம் உடலுக்குத்தேவையான ஆண்டி ஆக்ஸெண்ட் கிரீன் டீயில் அதிகமாக இது உள்ளது. இது வைட்டமின் சியில் இருந்து கிடைப்பதைவிடவும், வைட்டமின் டியில் இருந்து கிடைப்பதைவிடவும் முறையே 100 சதவீதமும் 25 சதவீதமும் அதிகம் கிடைக்கிறதாம். இரத்தத்தில் உள்ள டிரை கிளிசரைடுகளின் அளவைக் கட்டுப்படுத்தி (LDL கெட்ட கொழுப்புச்சத்து) நல்ல கொழுப்புச்சத்து அளவை அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் இதயத்தைப் பசுமையாக வைத்திருக்க உதவுகிறது இந்த பச்சை தேயிலை.

கிரீன் டீயில் ஃபாலிஃபினால்கள் அதிகம் கிடைக்கின்றன. இவை டியூமர் எனப்படும் மூளைக்கட்டி செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
கேன்ஸர் செல்களின் டிஎன் ஏ உருவாக்கத்தைத் தடுப்பதுடன் நல்ல திசுக்களுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி கேன்ஸர் திசுக்களை அழிக்கின்றன.

கிரீன் டீயில் உள்ள ஃபாலிபினால்கள் அமிலோஸ் சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரையைத் தடுத்து சர்க்கரையை மெதுவாகச் சிதைவடையச் செய்வதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப் படுகிறது.

இது மட்டுமல்ல இது எலும்பு நோய்களுக்கும் அழும்பாக பயன் தந்தே தீர்வேன் என்கிறது. ஒரு நல்ல செய்தி ஆர்தரைடீஸ் எனப்படும் மூட்டு வாதம் இதைக்கண்டால் ஓடிப்போகும் என்கிறார்கள்.

எலும்பு என்று கூறியவுடன் அடுத்து நமக்கு நினைவுக்கு வருவது என்ன? பற்கள்தானே. ஆம் அதற்கும் மருந்தான ஃபுளூரைடு பற்சிதைவு, பற்குழி ஆகியவற்றில் இருந்து பற்களைக் காக்கிறது.

இதைக் குடிப்பவர்களுக்குப் பசி வராது. அப்படியென்றால் என்ன? மாவுப்பொருள்களின் செரிமானம் குறைவு படுகிறது என்பதே. இதனாலும் ஒரு பயன் உண்டே. உடல் எடை கூடும் (குண்டு நோயும் மன்னிக்கவும் அது நோய் அல்ல) விளைவும் இதனால் கட்டுப்படுத்தப் படுகிறதாம்.. இதனால் தான் பச்சை தேயிலை அதிகம் அருந்தும் வெள்ளை அழகிகள் (Forigners) பெரும்பாலும் ஒல்லியாக இருக்கிறார்களோ!!

பொதுவாக காபி குடிப்பவர்களை நாம் காபி குடிப்பதை விட தேநீராவது அருந்துங்கள் என்போம். அதிலும் பிற தேயிலையை விட பச்சைத் தேயிலை வயதாவதையும் தடுக்கும் அதியனின் நெல்லிக்கனி போன்றது. ஒளவை இளைமையாக இல்லை. வாழ்நாள் மட்டும் அந்த நெல்லிக்கனி கூட்டியது என்றறிகிறோம். ஆனால் இந்த இலை நெல்லி அதாவது தேயிலை இளமையையும் அழகையும் கூட்டுகிறதாம். முகப்பொலிவை அதிகரிக்கிறதாம்.

ஒரு சுவையான வரலாற்றுச் செய்தியும் உண்டு. காந்தியடிகள் உப்புச்சத்தியாகிரகம் செய்வதற்கு முன்னோடியாக இருந்தது பாஸ்டன் தேநீர் விருந்து என்பர். அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தின் போது தேயிலைகளைக் கப்பல்களில் இருந்து துறைமுகத்திற்கு இறக்கிக் கொண்டு வராமல் கடலில் தூக்கி வீசினராம். இந்த உத்தியே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உப்புச் ச்த்தியாகிரகமாக மாற்றம் பெற்றது என்பர்..
அடடா உற்சாகமாகத் தேயிலையைப் பற்றி பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை. தேயிலை குடிக்கும் நேரம் ஆயிடுச்சே....பச்சை..... பச்சை....ஆமாங்க பச்சைத் தேயிலைதான் (கிரீன் டீ) நான் கிளம்புகிறேன்..நீங்களும்.......


நன்றி குமுதம் ஹெல்த்.

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

உள் நின்று உடற்றும் பசி.......



கத்துங்கடல் சூழ்நாகைக் காத்தான் சத்திரத்தில்
அத்தமிக்கும் பொதில் அரிசிவரும்: குத்தி
உலையில்இட ஊர்அடங்கும்; ஓர்அகப்பை அன்னம்
இலையில்இட வெள்ளி எழும்

ஏதோ வைவது போல இருக்கிறதா? ஆம் நாகைக்காத்தான் சத்திரத்தில் சூரியன் மறையும் நேரத்தில் வழிப்போக்கர்க்களுக்கு சோறு ஆக்குவதற்கு அரிசி வரும். அதனைக் குத்தி உலையில் இடும்போதே நடுச்சாமம் ஆகிவிடும். சாமத்தில்
யார் விழித்திருபார்? ஊர் அடங்கி விடும். உண்பதற்காகச் சோற்றை
அள்ளி இலையில் வைக்க விடிந்தே போகும். இது தானே இதன் பொருள். இது இன்றைய மூன்று
, நான்கு, ஐந்து நட்சத்திர உணவகங்களின் நடைமுறை. ஆர்டர் செய்து விட்டு ஒரு ஊருக்குச் சென்று திரும்பி வந்தாலும் நாம் ஆர்டர் செய்தது வந்திருக்காது. (காதலர்க்குக் கடலை போட இது நல்ல வசதி).

காளமெகம் கூறுவது, பஞ்ச காலத்தில் வழிப்போக்கர்களுக்கான இரவு உணவுக்கு மலையி அரிசிவரும். அரிசியைக் கொதிக்கும் உலையிலஇடப் பசியால் கொதித்துக்கொண்டிருக்கிற, தங்கள் வயிறு உலை அடங்கிவிடும்.என்று மகிழ்ந்து மக்கள் அமைதியடைவர். உண்பதற்காக ஓர் அகப்பைச் சோற்றை அள்ளி இலையில் இட, சோற்றின் வெள்ளை நிறத்தைக் கண்டு வெட்கப்பட்டு வெள்ளி (மின்னும் நட்சத்திரம்) ஓடிப்போகுமாம்.

மருத்துவத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும்போது இடையில் எங்கு கவி காள மேகம் வந்தார் என்று சிந்திக்கிறீர்களா? அந்தக் காலத்தில் அசோகர் சாலையோரத்தில் நிழல் தரும் மரங்களை நட்டார். குளங்களை வெட்டினார் என்று வரலாற்றுப் பாடம் படித்துள்ளோம். அதே போல ஆங்காங்கு அன்னச் சத்திரங்கள் அமைத்து உணவும் வழங்கி வந்தனர் என்றும் படித்துள்ளோமே, அதனையும் நினைவு படுத்துவதற்குத்தான் இப்பாடல்.

தொடர்ந்து அதிகமாக உண்பதையும் அதனால் ஏற்படும் ஒபிசிடி நோயையும் பார்த்துக் கொண்டிருந்தால் பசியினால் விளையும் நோயைப் பார்க்க வேண்டாமா? ஆம், பசியினால் என்ன நோய் வரப்போகிறது? ஒன்றும்
இல்லை. தலை சுற்றல், மயக்கம், வயிற்று உபாதை, வாயுத்தொல்லை, கடைசியில் முகப்பொலிவு இழந்து, கண்கள் மங்கி, உடல் தளர்ந்து உயிர் போகும். அவ்வளவுதான்.

மிகினும் குறையினும் நோய் செய்யும் என்பார்உலகப்புகழ் மருத்துவர் திருவள்ளுவர். உடல் நோய், உள நோய் எல்லாவற்றுக்கும் மருந்துகண்ட தெய்வப் புலவர் ஆயிற்றே. ‘நாம் உண்ணும் உணவில் ஆற்றலுக்கு உதவும்
மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கு உதவும்
புரதச்சத்துக்கள், வைட்டமின் எனப்படும் உயிர்ச்சத்துக்கள், மணிச்சத்து எனப்படும் மினரல்ஸ், நீர்ச்சத்து ஆகியவை அவரவர் பால் பகுப்பு, (ஆண்/பெண்) வயது, உடல் உழைப்பு ஆகியவற்றுக்கு ஏற்றவாறு இருத்தல் அவசியம். இது மிகாமலும் குறையாமலும் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு சத்து குறைவதாலும் ஒரு நோய் வரும். ஒட்டு மொத்தமாக பசித்து இருந்தால்.... எல்லா சத்துக்கும் குறைபாடு. இக்குறைபாடுகளால் ஏற்படும் நோய்க்குப் பெயர் பசிப்பிணி. உடலின் உள்ளே இருந்து வருத்துவதால் ‘உள்
நின்று உடற்றும் பசி
என்றும், உயிரையே அழித்து விடுவதால் ‘அழிபசிஎன்றும் மிகப் பொருத்தமாகப் பெயர் சூட்டுவார் தெய்வப்புலவர்.

பசிப்பிணி மருத்துவர் மணிமேகலையைப் பற்றி அறியாதவர் இருக்க முடியாது. அவர்களிடம் இக்கால மருத்துவர்களைப் போல எம்.பி.பி.எஸ், எம்.எஸ். போன்ற பட்டங்கள் இல்லை. மெடிசின் கிட் இல்லை. கழுத்தில் ஸ்டெத் இல்லை. ஆனால் அமுத சுரபி மட்டும் இருந்தது. கையில்
அமுதசுரபியை ஏந்தி பசித்தவர்களுக்கு எல்லாம் சோறிட்டு அவர்களின் பசிப்பிணியைப் போக்கினார் அந்தப் புத்தத் துறவி. இச்செய்தியைப் பாடத்தில் படிக்கும்போது நமது ஆசிரியர்கள் கொடை, தானம், பிறருக்கு உணவிடுதல் நல்ல பண்பு என்று விளக்கி இருப்பார்கள்.

மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
ஊண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

என்று உயிர் காக்கும் மருத்துவத்தைச் செய்தவர் மணிமேகலை.


இவருக்கும் முன்பே சங்க காலத்தில் ஒரு மருத்துவர் இருந்து இருக்கிறார். சிறு குடிக்குச் சொந்தக்காரரான பண்ணன் என்ற இவர் பசியுற்று வந்தவர்களுக்கெல்லாம் சோற்றை வாரி வாரி வழங்கியுள்ளார். அவருக்கு பசிப்பிணி மருத்துவன் என்று தமிழ் டாக்டர் பட்டம் கொடுத்துள்ளான் சோழன் கிள்ளிவளவன் (இது இக்காலக் கெளரவப் பட்டம் போன்றதல்ல). இதனைச் சுட்டுகிறது ஒரு புறநானூற்றுப் பாடல்.

இவர்களைத் தொடர்ந்து வாடிய பயிரைக் கண்டு இம்மருத்துவத்தை இடைவிடாது செய்தவர் புரட்சித்துறவி அருட்பிரகாச வள்ளலார்.

பசித்தவர்களுக்கு உணவிட்டு டாக்டர் பட்டம் பெறுவது என்பது அந்தக் காலத்தில் சாதாரனமாக இருந்திருக்கிறது. இப்போது முடியுமா?
இந்திர லோகத்து அமிர்தமே கிடைத்தாலும் இனிமையானது என்று தாம் மட்டுமே உண்ண மாட்டார்கள் நம் முன்னோர்கள். தமிழர்களின் கலாச்சாரச் சிறப்பே பசித்தவர்களுக்குச் சோறிட்டு பிறகு தாம் உண்பதே. இதனை,

“பாத்தூண் மரீஇ யவனைப் பசி என்னும்
தீப்பிணி தீண்டல் அரிது


என்று கூறும் தமிழ் மறை. அதாவது தனக்குக் கிடைத்த உணவைப் பிறருக்கும் கொடுத்து தானும் உண்டு வாழ்பவனுக்குப் பசி என்னும் தீயைப் போன்ற கொடிய பிணி தீண்டாதாம். பசி என்பது பொது நோய். இது உயிர்கள் யாவற்றையும் பற்றியிருப்பது. உடலில் ஏற்படுகிற அனைத்து நோய்களுக்கும் பசியே மூல காரணம்.

பெரும்பசி (திரிகடுகம், பாடல் 60), வயிற்றுத் தீ (புறம், 74), யானைத் தீ (மணிமேக€லை) என்ற நோய்கள் 'தீராத பசி' தொடர்பான நோய்களாகக் காணப்படுகின்றன. பழைய இலக்கியங்களில் பசியை, நோய் என்று எங்கும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. சங்க இலக்கியம் தொடங்கி திருக்குறள், மணிமேகலை வரை பசியைப் பிணி அதாவது பசிப்பிணி என்றே குறித்துள்ளன.
எல்லா இலக்கியங்களும் பசியைப்
பிணி என்று ஏன் குறிப்பிடுகின்றன. ஆராய்ந்து பார்த்தால் நோய்என்ற சொல்லுக்கும் பிணிஎன்ற சொல்லுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. நோய் என்பது நம் உடலை நொய்ந்து போகச்செய்வது. அரிசியின் குருகிய வடிவத்தை நொய் என்பது என்பர். நொய்- நொய்தல் இதுவே நோய் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் விருந்தாளி போன்றது. அவ்வப்போது வரும் போகும். விருந்தும் மருந்தும் மூன்று நாள் தானே.

ஆனால் பிணி என்பது பிறப்பு முதல் இறப்பு வரை நம் உடலைப் பிணித்துக் கொண்டிருப்பது. ஜென்மத்தில் பிடித்தது சாகும் வரை விடாது
என்பார்களே. அது இதைத்தான். குழந்தை பிறந்தவுடன் ஏன் அழுகிறது? தொடர்ந்து தொப்புள்கொடி வழியாகச் சென்று கொண்டிருந்த உணவு வெளியில் வந்தவுடன் ஒரு சில மணி நேரங்கள் தடை படுகிறது. உடனே குழந்தை பசியால் அழுகிறது. கருவில் உண்டான பசி இறப்பு வரை தொடர்ந்து உயிர்களைப் பிணித்துக் கொண்டிருப்பதால் பசியைப் பிணி என்று கூறினர். அது மட்டுமல்ல பசியைப் ‘பாவி
என்றுரைக்கும் மணிமேகலை.

குடிப் பிறப்பு அறுக்கும்; விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும் புணை விடூஉம்
நாண் அணி களையும்; மாண் எழில் சிகைக்கும்
பூண் முலை மாதரோடு புறங்கடை நிறுத்தும்

என்று பசிப்பிணியைப் பாவி என்றும், அப்பசிக்கொடுமையால் விளையும் துன்பங்களையும் பட்டியல் இடும் மணிமேகலை. அது உண்மைதானே. உடல் நோய்க்கு மட்டுமல்ல, இன்று பல நோய்களுக்கும், சமூக விரோதச் செயல்கள் நடைபெறவும் காரணமாக இருப்பது இந்தப் பசி என்ற பாவிதானே.

வயிற்றுக்குச் சோறிட
வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்
என்று பாடியவன் பாரதி. அவன் அனுபவித்த பசிக்கொடுமைதான் மகாக்கவியாகிய அவனையே,
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இச்செகத்தினை அழித்திடுவோம் என்று ஒரு போராளியைப் போல
குரல் கொடுக்க வைத்தது. கவிஞனுக்கும் வயிறு உண்டல்லவா?

இந்தப் பசிக்கொடுமையால் இன்று ஒரு நாடே
அடையாளப் படுத்தப் பட்டுள்ளது. சோமாலியா என்றால் அனைவர் நினைவிலும் பதிந்துள்ள காட்சி, விழிகள் குழிவெய்தி, மண்டை பெருத்து, உடல் சுருங்கிய அந்தக் குழந்தைகளின் உருவங்கள்தானே.

மருந்து என்றால் என்ன? உடல் நோய்களைத்
தடுப்பது; உள நோய்களைத் தடுப்பது; நோய் வராமல் தடுப்பது; உயிர் போகாமல் தடுப்பது; உயிர் போகாமல் தடுப்பது. இதைத் திருமூலர் வாக்கால் கேட்க வேண்டுமா?

“மறுப்பது உடல்நோய் மருந்தென லாகும்
மறுப்பது உளநோய் மருந்தென லாகும்
மறுப்பது இனிநோய் வாரா திருப்ப
மறுப்பது சாவை மருந்தென லாகும்

உடல், உள்ள நோய்களைப் போக்கி உயிரைக் காப்பது உணவாகிய மருந்து. அதனால் தான் உடல் நோய்க்கு மருந்து கூற வந்த திருவள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் ஆறு குறட்பாக்களில் உணவைப்பற்றிப் பேசுகிறார்.

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்

என்று உணவு வழங்கி அப்பசியைப் போக்குபவரை தவ முனிவர்களை
விடவும் மேலானவர்கள் என்பார்.

மணிமேகலையைக் காற்றோட்டமில்லாத ஒரு அறையில் (புழுக்கறை) அடைத்து பட்டினி போட்டாளாம் உதயகுமாரனுடைய தாய். மணிமேகலைக்குப் பல மந்திரங்கள் தெரியுமாம். அதில் ஒன்று பசி ஒழிக்கும் மந்திரம். அப்போது அவள் அந்த மந்திரத்தை ஓதி உடல் வாடாது மகிழ்ச்சியாக இருந்தாளாம். இந்த மந்திரம் மட்டும் நமக்குத் தெரிந்திருந்தால்.........!!!!!!!!!!!!!! என்ன....??

நாம் செய்கின்ற ஒன்றிரண்டு வேலைகளையும் செய்ய மாட்டோம்.
உழைப்பு என்றால் என்ன என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவோம்.

மாரல்: பசியைப் பற்றி இலக்கியங்கள் கூறும் சான்றுகள் இருக்கட்டும். ஒரு நாள் சாப்பிடாமல் இருந்து பார்த்தால் நாமும் தான் பாடுவோம் பசிப்பாட்டு, பசித்தொகை, பசிப்புராணம் எல்லாம். அதனால் எவரும் பசித்திருக்க நாம் பார்த்திருக்கக் கூடாது. புசித்திருக்கச் செய்வோம். நாமும் புசிப்போம். இதன் தொடர்ச்சியைப் பிறிதொரு பதிவில் பார்க்கலாம்.. இப்போது பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம்’-- வாருங்கள்.




நன்றி குமுதம் ஹெல்த்.

















சனி, 7 ஆகஸ்ட், 2010

தொட்டு தொட்டு நமஸ்காரம் செய்யலாமா......


தொட்டு தொட்டு நமஸ்காரம் செய்யலாமா......

     சிலர் தண்ணீரே குடிக்க மாட்டார்கள். ஆடைக்கும் கோடைக்கும் ஏதாவது நோய் என்று கூறிக்கொண்டே இருப்பார்கள். அதிலும் முக்கியமாக நீர்க்கடுப்பு என்பார்கள். இதைப் பொதுவாக ஆங்கிலத்தில் Urinary Track infection என்பார்கள். இதற்கு என்ன மருந்து என்று கேட்டுப்பார்த்தால்  உளுந்துதான் உடனடி நிவாரணம் என்று அடித்துச் சொல்லுவார்கள். அதாவது எந்த உழளுந்தாக இருந்தாலும் அதை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாகக் கழுவிய பின் நல்ல சுத்தமான தண்ணீரில் ஊரவைத்து வடிகட்டிய நீரைக் குடித்து வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்குமாம். அடுத்து பத்து இருபது புளியங்கொட்டையை லேசாக இடித்து அந்த பொடியை தண்ணீரில் ஊர வைத்து அந்த நீரை குடித்து வந்தாலும் நீர்க்கடுப்பு போகும்.  பாக்கிலிருந்து இப்போது புளிக்கு வருகிறோம்.  ஒரு கொட்டைப் பாக்கு அளவு புளியைத் தண்ணீரில் கரைத்து அதில் சர்க்கரையைக் கலந்து கரைத்து குடித்தால் நீர்க்கடுப்புப் போகும்சோடாவில் எழுமிச்சம்பழம் பிளிந்து குடித்தால் நீர்க்கடுப்புப் போகும். நிறைய பழச்சாறுகளைக் குடித்தால் நீர்க்கடுப்பு நீங்கும். நீர் அதிகம் குடித்தாலே நீர்க்கடுப்புப் போகும். கால்களின் கட்டை விரல் நகங்களின் மீது சிறிது சுண்ணாம்பைத் தடவினால் நீர்க்கடுப்புப் போகும். காலையும் மாலயும் இரண்டு வேளை குளித்து  உடல் சூடு குறைந்தால் நீர்க்கடுப்புப் போகும். தலையில் எண்ணெய் வைத்து குளித்தால் நீர்க்கடுப்புப் போகும் என்று வரிசையாக அடுக்கிக்கொண்டே போவார்கள் நம் முன்னோர்கள். அத்தனையும் நீர்க்கடுப்புக்கு உகந்த மருந்துதான். .

            இதே போலதான் மூலச்சூடு, ஆசனக் கடுப்பும். மேலே கூறியதுடன் இந்த இரண்டும் வந்தவர்கள் கோடி கொடுத்தாலும் உட்காரவே மாட்டார்கள். பாலைக் குடி, இளநீரைக்குடி, வெந்தயம் சாப்பிடு என்று கூறக் கூற எல்லாவர்றையும் குடித்து இறுதியில் வாதத்தில் வந்து மாட்டிக்கொள்வர்.

            இயந்திரம் தங்கு தடையின்றி ஓட வேண்டுமாயின் எண்ணெய் போடவேண்டும்.  தண்ணிரை ஊற்றி வந்தால் சில சமயங்களில் துரு பிடித்து இயங்கு தன்மை குறைந்து விடுவது போல உடல் எலும்புகளின் இயங்கு சக்தியும் எண்ணெய்ப் பசையின்றி குறைந்து விடுகிறது. அப்போது கை கால்கள் நீட்டி மடக்க முடியாமல் போய் விடுகிறது. முட்டிக்கால்கள் வீங்கிக்கொண்டு வலி எடுக்க ஆரம்பித்து விடும். இதற்கு மருந்து என்னனென்னவோ செய்து பார்த்து ஓய்ந்து போவர்.

     இதற்கெல்லாம் மருந்தா ஒரு சிடு மூஞ்சி இருக்காருங்க.. அவரைப்பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமாபொது இடங்களில், என்னைப் பறிக்காதே, என்னைத்தொடாதே என்றெல்லாம் பலகையில் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்து இருப்போம். சில இடங்களில் ஆங்கிலத்திலும் Touch me not என்று எழுதி இருப்பதைப் பார்த்து இருப்போம். இது அந்த மலர்களையோ, சோலையையோ எவரும் வீணடித்து விடக்கூடாது என்ற எச்சரிக்கைக்காக என்பதையும் நாம் அறிவோம்.. இந்த வாசகத்தை சொல்லாமல் சொல்லும்  நகைச்சுவை வடிவேலு ஒன்று தாவர இனங்களில் உள்ளது. இந்தக் கோட்டைத்தாண்டி நீங்களும் வரக்கூடாது. நானும் வரமாட்டேன். வந்தா என்னடா செய்வே? நான் அலுதுருவேன் என்று வடுவேலு பாணியில் சொல்லும் இந்தத் தாவரமும். உங்களுக்குப் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

     புரியல்லன்னா இன்னொரு குறிப்பு. மக்களில் சிலர் சிடு மூஞ்சியாக இருப்பர். எவருடனும் பேச மாட்டார்கள். யாராவது  வலுவில் பேசினாலும் முகத்தைச் சுருக்கிக் கொண்டு உம்மனாம் மூஞ்சி போல இருப்பர். இவர்களை இந்தத் தாவரத்தின் பெயர் கூறி அழைப்பது உண்டு.  இப்ப தெளிவா புரிஞ்சு இருக்குமே. ஆமா தொட்டால் சிணுங்கிதான். இதுல என்ன சிறப்பு என்றால் தொட்டால் சிணுங்கி தொட்டால் மட்டும் தன்னைச் சுருக்கிக்கொள்ளும். ஆனால் சுட்டால் (திருடரது இல்ல) பறித்துப் பயன்படுத்தினால் விரிந்து நமக்கு பயனளிக்குமாம்

. http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTV52KGofdsnpWMCU7s5kfx5jwfzvy-UN6Wgkzf09ZunOS0PD8&t=1&usg=__wApFFxOwm2GTXG7ljRhVGoDRY68=

     பல நோய்களுக்கு மருந்தாகும் இதனை மூலிகை என்பதே பொருத்தமாகும். இதன் தாவரப் பெயர் MIMOSA PUDICA.  இது  FABACEAE என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் வேறு பெயர்கள் நமஸ்காரி, காமவர்த்தினி. இதன ஆங்கிலப் பெயரே Touch me not என்பது. பொதுவாக எல்லா இடங்களிலும் தானே வளரக்கூடிய இது 5 அடி வரைப் படரும் தன்மையது. சுமார் 60 செண்டி மீட்டர் உயரம் வரை வளரும். ஆற்றோரங்களில் காணப்படும்  இது மனிதர்கள் தொட்டாலோ, சிறு அதிர்வு ஏற்பட்டாலோ தன் இலைகளைச் உள்பக்கமாகச் சுருட்டிக்கொள்ளும் என்பது அனைவரும் அறிந்ததே.

            இதன் தனிச்சிறப்பு என்னவெனில் இதன் இலைகள் எதிர் எதிர் அடுக்கில் அமைந்து இருக்கும். மேலே சிவப்பாகவும் அடியில் ஊதா நிறத்திலும் இதன் பூக்கள் இருக்கும். இவை இலைகளின் ஊடாக மலர்ந்து காணப்படும். இதன் காய் சுமார் 25 மில்லிமீட்டர் நீளம் இருக்கும்.

             மலர்கள் சூரியனைக் காதலிப்ப்து நாம் அறிந்தது. ஆனால் இந்த சிடுமூஞ்சிக்கும் சூரியனுக்கும் காதல் என்றால் ...ஆம இதன் இலைகள் மாலையில் தன் இலைகளைச் சுருக்கிக் கொள்ளுமாம்.  காலையில் ஆதவனைக் கண்டதும் அழகிய தன் இலைகளை விரித்துக் கொள்ளுமாம்.

            சரி இந்தத் தொட்டாச்சிணுங்கியின் மருத்துவக் குணங்களைப் பார்க்கலாம்தொட்டாற் சுருங்கி வேரை பஞ்சு போலத் தட்டி அதனை ஒரு மண்சட்டியில் போட்டு அத்துடன் நீரைச் சேர்த்து பாதியாகச் சுண்டும் வரைக் கொதிக்க வைத்து அந்த நீரை நாளொன்றுக்கு மூன்று வேளை அரை அவுன்ஸ் வீதம் குடித்து வந்தால் நீர்க்கடுப்பு போயே போய்விடும். இதன் இலையை அரைத்து தினமும் தயிரில் கலந்து குடித்து வந்தாலும் சூட்டால் உண்டாகும் நீர்க்கடுப்புப் பிரச்சனை காணாமல் போய்விடும்.

     இதன் வேரையும் இலையையும் சம அளவு எடுத்து காயவைத்து உலர்த்தி பொடி செய்து சூரணமாக வைத்துக்கொண்டு நாள்தோறும் 10 முதல் 15 கிராம் பசும்பாலில் கலந்து குடிக்க மூலச்சூடு தொடர்பான நோய்கள் போய்விடும்.  இலைச்சாறை மூலப்புண்ணிலும் அதாவது ரணங்களில் தடவி வந்தால் புண் ஆறி விடும். ஆறாத ரணங்களும் ஆறி விடும்.

     இதன் இலையை விழுதாக அரைத்து பற்றுப் போட்டு வர வாதம் தொடர்பான கைகால் மூட்டுகளின் வலி, வீக்கம் குணமாகும். இதன் இலைகளை வெந்நீருடன் போட்டு கொதிக்க வைத்து ஊற்றி குளித்து வந்தால் இடுப்பு, முதுகு வலியும் குணமாகும். இவற்றைக் குறிக்கும் பாடல் இதோ....
      
     இன்னும் என்னனென்னவோ சொல்கிறார்களே...இதில் காந்த சக்தி இருக்கிறதாம். தொடுகின்ற போது இந்தக் காந்த சக்தி மனிதனின் உடலில் ஈர்க்கப்படும். தொடர்ந்து இதனைத் தொட்டு வந்தால் மனோ வசியம் ஏற்பட்டு மனம் நினைத்ததைச் செய்து முடிக்க முடியுமாம். பிடித்தவர்களை வசியம் செய்யவும் முடியுமாம்.  இதன் இலையை நாள்தோறும் தொட்டு வர பாலுணர்வு உணர்ச்சியை மிகுவிக்கும். இதனாலேயே இது காமவர்த்தினி என்று அழைக்கப்படுகிறது.

            ”மேகநீரைத் தடுக்க மேதினியிற் பெண்வசிய
     மாகவுன்னி னலகு மதுவுமின்றி தேகமிடைக்
     கட்டாகக் காட்டுகின்ற சாவைத்தூரத்தி லிடுந்
     தொட்டாற் சுருங்கியது சொல்
    

     அது மட்டுமல்ல தெய்வீக சக்தி நிறைந்ததாம். அதன் காரணமாகவே இது நமஸ்காரி என்று அழைக்கப்படுகிறது. மருத்துவ குணமும் தெய்வீக குணமும் நிறைந்த வேம்பு, துளசியை எப்படி இல்லத்தில் வைத்து வணங்குகிறோமோ அதே தகுதி இதற்கும் உண்டு. பாடலைப் பார்ப்போமா?

     ”’ப்கரவே இன்னுமொரு மூலிகைக் கேளு
     பாங்கான சிணுங்கியப்பா காப்புக்கட்டி நிகரவே
     பூசையிடு மந்திரத்தால் நினைவாக
     உத்தமனே தூபமிட்டு வைத்துக் கொள்ளே

     மாரல்:  நீர்க்கடுப்பு, மூலக்கடுப்பு, வாத வீக்கம் வலி, உடல் வலி ஆகியவற்றுக்கு அருமருந்து தொட்டாச் சுருங்கி. காம இச்சையை மிகுவிக்கும் மூலிகை வயாகரா தொட்டாச் சுருங்கி. இன்றைய தலை முறைகளிடன் இந்த ஆவல் குறைந்து வருவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது. நலமான வாழ்வு வாழ எல்லா உணர்வுகளும் அவசியம் என்ற அடிப்படையில்  அனைவரும் நமஸ்காரத்துடன் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.



நன்றி குமுதம் ஹெல்த்.