பேராசிரியர்.
முனைவர். ப. பானுமதி
(கவிஞர் ஆதிரா முல்லை)
வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி
சென்னை 600 102
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல்:
innilaa.mullai@gmail.com
கஸல் காதலன் – கவிக்கோ
தமிழ்
கவிதை உலகில் காதல் மொழி பேசியவர்களே கவிஞர்கள் பலரும். ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலாவது
காதல் மொழி பேசாதவர்கள் இருந்திருக்க முடியாது. சிலர் மரபில் மகிழ்ந்தார். சிலர் புதுமையில்
பொலிந்தார். இன்னும் சிலர் வசனத்தில் வாழ்ந்தார். சிலர் ஹைக்கூவில் அமிழ்ந்தார். சிலர்
சென்றியூவில் செப்பினார். ஆனால் கஸலில்(GHAZAL) காதலித்தவர்களை விரல் விட்டு எண்ணி
விடலாம்.
கஸல்
என்றால் காதலியுடன் பேசுவது.. இந்த இலக்கிய வடிவம் அரேபியாவின் ஆதிக் காதலனிடம் பிறந்த
கவிதை மொழி.. பாரசீகர்கள் வளர்த்த கவிதை மொழி.. உருது மொழியாளர்களின். உள்ளுணர்வோடு கலந்த கவிதை
மொழி. அரபு மொழிக் கவிதையின் பண்டைய வடிவமான கஸல் என்னும் கவிதை வடிவம் பாரசீகர்களால்
வளர்க்கப் பட்டு உருதுவில் ஒளிவீசி இப்போது பல மொழிகளிலும் வியாபித்துள்ளது.
தமிழின்
கண்ணி என்னும் இலக்கிய வகையில் இந்த கஸல் வகையை அடக்கலாம். பூக்களை இரண்டிரண்டாக அடுக்கிக்
கட்டுவதைக் கண்ணி என்பதைப் போல தமிழ் செய்யுள் வகையில் இரண்டிரண்டு அடிகள் இணைந்து
வருவதைக் கண்ணி என்பர். இதனை உலா இலக்கியத்தில் பரவலாகக் காணலாம். தாயுமானவர் இயற்றிய
பராபரக் கண்ணியும் குணங்குடி மஸ்தான் சாகிபு இயற்றிய நிராமயக்கண்ணியும் கண்ணி இலக்கிய
வகைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
இதே போல
அரபு மொழி இலக்கியத்தில் இரண்டிரண்டு அடிகளாக அடுக்கி வருவதைக் கஸல் என்பர். இது ஐந்து
அல்லது ஐந்துக்கும் மேற்பட்ட கண்ணிகளைக் கொண்டிருக்கும். ஓசை நயத்தோடு ஆழமான காதல்
உணர்வுகளைப் பாடுவது கஸல். காதலின் தோல்வியை அதனால் ஏற்படும் வலியைக் கஸல் மொழி அழகாகப்
பேசி விடும்.. அரேபியாவில் இசுலாம் தோன்றுவதற்கு
முன்பே அரபு மொழி ஈன்றெடுத்த அழகான கவிக்குழந்தை கஸல். அரபு மொழியில் பிறந்த
இக்குழந்தை மெல்ல மெல்ல பல மொழிகளில் தன் காதல் மொழியைப் பேசத் தொடங்கியது. இத்தாலியின்
சானட் கவிதையை ஒத்திருக்கும் கஸல் கவிதைகள். கஸல் கவிதைகள் பெரும்பாலும் ஆன்மிகப் படிமங்களைக்
கையாண்டு எழுதப் படும். அதே வேளையில் காதலின் தெய்வீகத் தன்மையை, காதல் தோல்வியை, காதலர்களின்
பிரிவுத்துயரை,ப் பாடும் சோக இராகமாக இருக்கும். அந்தச் சோக இராகம் சுக இராகமாக இசைத்து
ஆன்மாவைத் தொட்டுத் தாலாட்டும்.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, உருது, அரபி, பாரசீகம்
ஆகிய மொழிகளில் தேர்ந்த பன்மொழி வித்தகரான கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களே. அரபி,
உருது, பாரசீகம் என்னும் மும்மொழியால் நடை பயின்ற கஸல் வகை கவிக் காதலியைக் கரம் பிடித்துத்
தமிழ் மொழிக்குக் கூட்டி வந்த முதல் காதலன், தமிழ் மொழியின் முதல் கஸல் வகைக் கவிதைத்
தொகுதி கவிக்கோ அவர்களின் “மின்மினிகளால் ஒரு கவிதை”(2004) என்னும் நூல். அதனை அடுத்து
ரகசியப்பபூ”(2005) என்னும் கஸல் கவிதைத் தொகுப்பையும் படைத்தளித்து காதலர்களின் நெஞ்சங்களில்
கவிதையாய் நிறைந்தார் கவிக்கோ.
“கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள” ( குறள்; 1101)
ஒண்டொடி கண்ணே உள” ( குறள்; 1101)
என்று இன்பத்துப் பால் வகுத்த வள்ளுவன் கூறுவதைப் போல கவிக்கோ
அவர்களும் காண்கின்ற, கேட்கின்ற, உணர்கின்ற அனைத்தையும் பெண்ணின் கண்களிலிருந்தே காண்கின்றார்.
“உன் கண்ணால்தான்/ நான் முதன்முதலாக/ என்னைப்
பார்த்தேன்” என்று அவளது கண்களால் தம்மைப் பார்த்து பின் காணும் பொருளிலெல்லாம்
அவளையே கண்டு களிக்கிறார். கண்டவற்றையெல்லாம் கவிதையாக்கிக் கவிதையாக்கி,
“உன் கண்களில் இடறிக்
கவிதைக்குள் விழுந்தேன்” (ப. 496)
என்று காதல் கவிதையில் அமிழ்ந்தே போகிறார். கவிஞரின் இந்த நிலையை,
“தனக்குகந்தவாறு வளைத்துக் கொண்ட கஸல் கவிதைத்
தொகுப்பில் அனைத்தையும் பெண்ணாகக் கண்டு கட்டித் தழுவிக்கொள்ளும் காதல் நிலைக்கு உயர்கிறார்”
என்று பேராசிரியர் பஞ்சாங்கம் அவர்கள் சொல்வது இங்கு நோக்கத்தக்கது.
காதல் அமரத்துவம் வாய்ந்தது.
“உன் முதல் பார்வை/ என்னைச்/ சிலுவையில் அறைந்தது/
மறு பார்வை/ மறு உயிர்ப்பைத் தந்தது” என்னும் இக்கவிதை “ஒரு நோக்கு நோய் நோக்கு மற்றது அந்நோய்க்கு மருந்து” (1091) என்னும் ஐயனின்
காதல் நோக்கின் வேறொரு பரிமாணம்.. தம்மை ஏமாற்றி அவளிடம் செல்லும் இதயத்தை, “நன்றி கெட்ட இதயம்/ எத்தனை நாள்/ நான் ஊட்டி
வளர்த்தேன்/ அவள் புன்னகையை/ வீசியதும்/ வாலாட்டிக் கொண்டு/ அவளிடம் ஓடிப் போய்விட்டதே”
(ப.462) என்று வசை பாடும் அழகில் தலைவனின் நெஞ்சோடு புலத்தலைக் காண முடிகிறது.
காதல் நினைவு அணு அணுவாகச் சித்திரவதை
செய்வது. அது ஒரு இன்ப நரகம். அந்த வேதனையைக் கவிஞர் அறிவுமதி அவர்கள்,
“அணுஅணுவாய்
சாவதற்கு
முடிவெடுத்து விட்ட பிறகு
காதல்
சரியான வழிதான்”
என்று பாடுவார். கவிக்கோ அவர்களோ
“உன்னை மறக்கும்போது
வாழ்கிறேன்
நினைக்கும் போது
இறந்து விடுகிறேன்”
எனப் பாடுகிறார்.
“பெரியாரின் சமூகச் சீர்த்திருத்தங்களை மட்டும் உள்வாங்கிக்
கொண்டேன். அதே சமயம் கடவுள் நம்பிக்கையைக் கைவிடவில்லை” என்று ஒரு நேர்காணலில் கூறும்
கவிக்கோ அவர்கள் மிகப் பெரிய முற்போக்குச் சிந்தனையாளராக இருந்தபோதும் அழுத்தமான ஆன்மிகச்
சிந்தனையில் திளைப்பவர்.
“காதலில் இறைவனும் காதலியாகிவிடுகிறான்.
தன்னை மறப்பதே ஞானம்.காதல் இதை சாத்தியமாக்குகிறது
உண்மையில் காதல் என்பது இறைவனைச் சுவைப்பதுதான்’
(ப.452)
என்று குறிப்பிடும் கவிக்கோ அவர்களின் கஸல் கவிதைகள்
காதலில் முளைத்து கடவுளில் முகிழ்கிறது.
“காதல் சாளரம்
திறந்தேன்
கடவுள் தெரிந்தார்”
கடவுள் தெரிந்தார்”
என்று
காதல் பாதையில் கடவுள் தரிசனத்தைக் காணும் கவிக்கோ, காதலைக் கடவுளின் வடிவமாகவே காண்கிறார்.
“காதல் இறைவனின்
இன்னொரு பெயர்” (ப.498)
என்று
கவிதை புணைகிறார். “நான் வெறும்/ ஓட்டை மூங்கில்/
காற்றும் நீ/ வாயும் நீ/ விரலும் நீ” (ப.477) என்று யாதுமாகி நின்ற இறையைக் கூறுவது
அவன(ள)ன்றி ஓரணுவும் அசையாது என்னும் சத்தியத்தைப் பறை சாற்றுகிறது.
“நீ பல்லவி
நான் சரணம்\
இறுதியில்
உன்னிடம் வந்துதான்
நான் முடிய வேண்டும்”
என்னும் இக்கவிதையில் முதலும் முடிவுமாக இருப்பவன்
கடவுள். பல்லவியாகவும் சரணமாகவும் இருப்பவன் இறைவன். உயிர்கள் ஒவ்வொன்றும் இறுதியில்
வீடு பேறு என்னும் பதத்தினை எய்த வேண்டும் என்பதைக் கஸல் மொழியில் சொல்கிறது. இது மேலோட்டமாகப்
பார்க்கும் போது காதல் கவிதையாகத் தென்பட்டாலும் அதன் உள்நோக்கு கடவுளின் தரிசனம் காணும்
பேரவாவே.
“திரை
விலக்கிப்/ பார்த்தால்/ உன் மர்மம்/ அதிகமாகிறது” (ப.466) என்றும்
“உன் முகத்திரையை விலக்கப் போவதில்லை/ ரகசியம்
திரைக்குள்தான்/ அழகாக இருக்கிறது”(ப.470) என்னும் இந்த இரு கவிதைகளும் இறை தத்துவத்தை
மிகவும் அழுத்தமாகவும் ஆழமாகவும் பதிவு செய்கின்றன. ஆணவம், கன்மம், மாயை முதலான உயிரை
மூடிக்கொண்டு இருக்கின்ற திரைகளை விலக்கினால் மட்டுமே முழுமையான இறை தரிசனம் காண முடியும்
என்ற உண்மையை காதல் என்னும் மேலாடையால் மூடிக் காண்பித்த ஆன்மிகத் தத்துவக் கவிதையாகத்தான்
காண முடிகிறது. இத்தொகுப்பின் கவிதைகளில் பெரும்பாலும் கவிக்கோ அவர்கள் காதலின் மேல்
ஏறி நின்று கண்டு தரிசித்த ஆன்மிகத்தை அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
ஆன்மிக அடித்தளத்தில் முகிழ்த்த கஸல் வகைக் கவிதைகளைத்
தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்ததோடு அவற்றை ஆன்மிகத்தைத் தாண்டியும் பொது உடைமை, சமத்துவம்,
ஏழ்மை, உயிர் தத்துவம், வாழ்க்கை என்று வேறு பல தளங்களுக்கும் கொண்டு சேர்த்தவர் கவிக்கோ.
வறுமையும் வளமையும் எப்போதும் போல் மாறாமல் இருக்கும்
இந்தியத் திருநாட்டில் பிச்சைக்காரர்கள் இன்னும் பிச்சைக்காரர்களாக உள்ளனர். அவர்களுக்குப்
பிச்சை இடாத வன் நெஞ்சர்களும் இன்னும் வன் நெஞ்சர்களாகவே வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.
அதனால்தான் இரவு பிச்சைக்காரனின் விரிப்பில் நாணயங்கள் ஏதும் விழுவதில்லை என்பதை,
“இரவுப்
பிச்சைக்காரனின்
அழுக்கு
விரிப்பில்
நட்சத்திர
நாணயங்கள்” (ப.514)
என்று கூறும் ஏழ்மைக் கவிதை வானத்து நட்சத்திரமாக
மின்னுகிறது.
“கல்லைத்/ தெய்வம் என்று/ நினைப்பது
போல்/ உன்னைப்/ பெண் என்று/ நினைத்தேன்” என்று கூறும் போதும் “தூங்காத கடவுளுக்குத்/ தூங்குகிறவன்/ பள்ளியெழுச்சி/
பாடுகிறான்” என்று கூறும் போதும் பெரியாரியப் பகுத்தறிவு சிந்தனையைக் கையில் எடுக்கிறார்.
வெற்றி பெற்றுக்கொள்வதற்கும் தோல்வி கற்றுக்கொள்வதற்கும் உகந்தது. அதுபோல ஒருவர்க்கு
அவர் செய்யும் தவறுகளால் மட்டுமே கற்றல் அனுபவம் கிடைக்கும். தவறுகள் செய்யாதவர்கள்
அவ்வனுபவத்தைப் பெற மாட்டார்கள் என்பதைனை, “தவறு
செய்யாதவன்/ மிகப் பெரும்/ தவறு செய்கிறான்/ அவன் பாடம் கற்கும் வாய்ப்பை/ இழக்கிறான்”
என்று தன்னம்பிக்கையை விதைக்கிறார்.
உயிர்கள் எங்கிருந்து வருகிறது? மாண்ட பின்பு உயிர்கள் எங்கு செல்கிறது என்னும்
உயிர் பற்றிய தத்துவ வினாக்குறிகளைத் தூக்கிக் கொண்டு வருகிறது பின் வரும் இக்கவிதை.
“விளக்கில் ஏற்றும் சுடர்/ எங்கிருந்து வருகிறது?
அணைக்கப்பட்ட சுடர் எங்கே போகிறது?(ப.570)
சமுதாயத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்கள் படைப்பு அடிப்படையில் பிரிக்கப்
பட்டதை, “ஒன்றாகத்தான் இருந்தோம்/ படைப்பு
நம்மை/ வகிடெடுத்துப் பிரித்துச்/ சடைபின்னிப்/ பூ வைத்தது”(ப.562) என்று கூறுகிறார்.
“நேற்றுப் பார்த்தேன்/ ஆலயம் இருந்தது/ மனிதனுக்கும்/
மனிதனுக்கும் இடையில்/ இன்று பார்த்தேன்/ ஆலயம் மட்டும்/ இருக்கிறது” (ப.567) என்று
கூறும் இக்கவிதை மனிதனைத் தின்று விழுங்கி ஆல விருட்சமாக ஓங்கி நிற்கும் சமயங்களையும்
சமயப் பூசலால் அழிந்து மண்ணாகும் மானுடத்தையும் இதை விட அழகாகக் கூறி விட முடியுமா?
என்று வியக்க வைக்கிறது.
நிறைவாக……
“நான்
தீவிரமான மரபுவாதி. எனவே வசன மொழி பெயர்ப்பை ஆசிரியப்பா ஆக்கினேன் என்று கூறிய கவிக்கோ
அவர்களே யாப்பிலும் புதுக்கவிதை முயற்சியை மேற்கொண்டவர். “இன்று பலர் புதுக்கவிதை எழுதுகின்றார்/ எழுதுகின்ற கவிஞர்களுள் அப்துல் ரஹ்மான்/
முன்நிற்கும் மோனையைப் போல் முன்நிற்கின்றார்” என்று உவமைக்கவிஞரால் பாராட்டப்
பெற்றார். கவியரங்க மேடையில் முதன் முதலாகப் புதுக்கவிதையை ஏற்றியவர்; முதன் முதலில்
‘கீத்’ என்னும் இசைப்பாடல் வடிவினை அறிமுகம் செய்து வைத்தவர்; இரண்டே சீர் கொண்ட ஓரடிக்
கவிதை என்னும் புதுமையைப் படைத்தவர்; கஸல் என்னும் கவிதை மொழியில் முதல் முதலில் காதலியுடன்
கனிமொழி பேசியவரும் கவிக்கோ அவர்களே. அதனால்தான் “புதுமைகளை அடைகாக்கும் சிந்தனைகள் வேண்டுமாயின் அப்துல் ரஹ்மான் நூலாம் இந்நூல்
போதும்” என்று அன்னாரது புதுமைச் சிந்தனையைப் பாராட்டுகிறார் கவிஞர் சுரதா.