அவள் சொன்ன அடையாளம்
ஒரு மைல் தூரம் நடந்தால்தான் சின்ன செவத்தாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் வரும். சோலையம்மா நான்கு எட்டு தூரத்தை ஒரே எட்டில் பாயுற வேகத்தில் தாண்டிக்கிட்டு இருந்தா. அவளுக்கு பெயரில் மட்டும்தான் சோலை. இந்த மண்ணுல பொறந்ததில இருந்து வாழ்க்கையில வெறும் பாலைதான். ஒவ்வொரு எட்டு வைக்கும் போதும் அவளோட வயிற்றுக்கும் நெஞ்சுக் குழிக்கும் நடுவில் கனமான பந்துகள் ஏழெட்டு உருளுற மாதிரி இருந்தது. இடது கையாலே தன்னோட அடிவயித்த அழுத்திப் பிடிச்சிக்கறா. ஊட்டி ரேசுல பந்தயக்குதிரங்க ஓடுற குழம்படிச் சத்தம் அவ நெஞ்சுக்குள்ளே கேக்குது.
“ஆத்தாடி, இது என்ன? புருசன பஞ்சாயத்துல வச்சு தூக்கிக் கொடுத்தப்போ கூட இப்படி அடிச்சுக்காத நெஞ்சு இப்ப இப்படி படார் படார்னு அடிச்சுக்குதே”னு அவ வாய் முனுமுனுக்குது. குளம் நெறஞ்சு கரைய ஒடச்சிட்டு தண்ணி ஓடியாறது மாதிரி அவ கண்ணுக் குளம் நெறஞ்சு கண்ணீர் ஓடியாறது.
”ஏலே சோலே எங்கினே விடிகாலையிலே கெளம்பிட்டே, இம்புட்டு வெரசா போறவ” என்று கேள்வி கேட்டு அரசாணி அவ முன்னால நிற்கிறா.
தனக்கு முன்னால ஒருத்தி நின்னதோ, அவ கேள்வி கேட்டதோ எதுவும் தெரியாமல், காத்துல கரஞ்ச சத்தமும், கண்ணுல தெரிஞ்ச உருவமும் மறைய, எட்டி நடை போட்டா சோலையம்மா.
”என்னத்த காணாததக் காணப் போறா இவ! ஒரு பதிலு கூடச் சொல்லாம பேயறஞ்சவ மாதிரி போறா” என்று முணகிக்கிட்டே அரசாணி போனா. அவ எட்டு ஊருக்குக் கேக்குற மாதிரி கத்தி பேசினதே இவ காதில விழுகல்ல. இந்த முணகலா இவளுக்குக் கேட்கப் போகுது? சித்தபிரம்ம பிடித்தவளா நடந்துகிட்டு இருக்கிறா.
நெத்தியில இறங்கிய வேர்வை புருவத்தில் எறங்கி, கண்ணீரோட சேந்து வடியுது. இந்தத் தண்ணியில வெள்ளாமை செஞ்சிருந்தா ஒரு ஊரே ஒரு வருசம் ஒக்கார்ந்து சாப்படலாம்.
முகத்தில வடியற வேர்வையைத் தொடைக்க இழுத்து சொறுகின முந்தானையை அவள அறியாமலேயே அவ கை எடுக்குது. ஆனா தொடக்காமயே மறுபடியும் சொருகுது. வெடித்துச் செதர்ற பாறைங்க எங்கெங்கோ போயி நொடியில் மண்ணுக்கே திரும்புறது மாதிரி அவ நெனப்புங்க எல்லாம் எங்கேயோ போனாலும் போலீஸ்காரர் சொன்ன அந்த சேதிக்கே திரும்பத் திரும்ப வந்து நிக்குது.
புள்ளயோட வயசக் கூடச் சொல்லத் தெரியாத பெத்தவ அவ. ”நம்ம புள்ளக்கு ஒம்பது வயசு இருக்குமா, இல்ல பத்து வயசு இருக்குமா” ன்னு நெனச்சுப் பார்த்தவ, பக்கத்து வீட்டு மாரியம்மாவும் அவளும் ஒரே மாசத்துல புள்ள பெத்தவங்க. அவ புள்ள இசக்கி வயசுதானே நம்ம புள்ளக்கும் இருக்கும். அவ ஒரு வாரத்துக்கு முன்னே பேசும்போது “கழுதெக்குப் பத்து வயசு ஆவுது; களச்சு வூட்டுக்கு வர்ற ஆத்தா அப்பனுக்கு ஒரு கொவள தண்ணி மோந்துத் தரத் துப்பில்ல” ன்னு சொல்லி பொலம்பினது நெனப்பு வர நம்ம புள்ளக்கும் பத்து வயசுதானே இருக்கும். இப்ப எம்புட்டு வளந்திருக்கும்? இசக்கி ஒசரம் இருக்குமோ. அப்ப காது மடல் புதுநெறமாத்தான் இருந்துச்சு. எல்லாரும் புள்ள நல்ல நெறமுன்னு சொன்னாக. புள்ள இப்ப புது நெறமாத்தான் இருக்குமா இல்ல அவங்க அப்பன மாதிரி கருகருன்னு இருக்குமா?னு நெனச்சிக்கிட்டே நடைய எட்டிப் போட்டா.
கால் முன்னாடி எட்டு வச்சாலும் மனசு என்னமோ பின்னாடிதான் எட்டு வச்சு போய்ட்டு இருக்கு அவளுக்கு. கொழந்த பொறந்தப்ப, அது கெவர்மெண்ட் ஆசுபத்திரி. இவ மயக்கம் தெளிஞ்சு கண்ணத்தொறந்து பாத்தப்ப, கொழந்த பொறந்துடுச்சும்மான்னு டாக்டரு சொன்னது, நர்சுங்கல்லாம் இவளப் பாத்து ஒரு மாதிரி சிரிச்சிட்டே அந்தப்பக்கமும் இந்தப் பக்கமும் போனது, “கொழந்த நல்லாத்தான் லச்சனமா அவுக அப்பன உரிச்சு வச்ச மாதிரி இருக்கு, ஆனா இப்படி ஆயிடுச்ச்சே”ன்னு பாத்தவங்க எல்லாரும் சொன்னது, மாடசாமி ஒத்தப் பார்வையில நெருப்ப அள்ளிக் கொட்டிட்டு ஆசுபத்திரியை விட்டு போனது எல்லாம் அடுக்கடுக்கா நினைவுக்கு வருது. ஒரு நொடியில் ஓராயிரம் நெனப்புகள அசை போடும் வாமனமா வளருது அவ மனசு.
அன்னக்கு அப்படித்தான் குழந்தையைக் குளிப்பாட்டி, அதுக்குப் பொட்டு வச்சு, கண்ணே, எங்கண்மணியே உங்கப்பன் உன்னக்காணா பாவியா இருக்கானேன்னு பொலம்பிக்கிட்டே தொட்டில்ல போட்டுட்டு, குறுநொய்யைப் போட்டு கஞ்சியும் சோறுமா வடிச்சி, தொட்டுக்க உப்பு, பச்சமொளகா, புளி சேத்து ஒரு துவையல அரைச்சு கஞ்சியயும் துவையலையும் தூக்குச் சட்டியில போட்டு எடுத்துட்டு வந்து தொட்டிலைப் பார்த்தா, அங்க புள்ளையக் காணோம். குய்யோ முறையோன்னு அழுதது, ஊரு முழுக்க கொழந்தையைத் தேடி அழுத்தது, அப்பறம் நாள், வாரம், மாசம், வருசம்னு புள்ள நெனப்ப மனசு நெறையவும், கஞ்சிய வயிறு கொறையவும் வச்சிட்டு இத்தனை வருசத்தை ஓட்டினதெல்லாம் நெனச்சிகிட்டே வந்தவ எப்படித்தான் இவ்வளவு வெரசா நடந்தான்னே தெரியாம போலிசு டேசனுக்கு வந்து சேந்துட்டா..
”நாந்தான் சோலையம்மா, எங்கொழந்த கெடச்சிருக்குன்னு சொன்னீங்களே.. எங்கே? எங்கே? எங்கே?” ன்னு படபடப்பா கேட்டா.
போலிசுகாரர் “ஒங்குழந்தைக்கு என்ன அடையாளம்னு சொல்லும்மா” ன்னு கேட்க, அவ கண்ணு முன்னாடி வருது பத்து வருசத்துக்கு முன்னால நடந்த அந்த ஊர்ப் பஞ்சாயத்து.
பஞ்சாயத்துல மீசையை முறுக்கி விட்டுக்கிட்டு, கண்ணு முழி ரெண்டும் வெளிய வந்து விழுந்துரும் போல பிதுங்க, வேட்டிய மடிச்சு கட்டி, நெஞ்ச நிமித்திக்கிட்டு வெறப்பா மாடசாமி வந்து நின்னது, ”வெரவா ஒரு முடிவுக்கு வாங்கப்பு”ன்னு ஊர் பெருசுங்க சொன்னது, பொட்டுல அரைஞ்ச மாதிரி அவன் அந்தப் புள்ளய அனாதை ஆசிரமத்துல விட்டுட்டு வந்தா வச்சு வாழுறேன்னு மாடசாமி சொன்னது, கண்ணுல கொடங்கொடமா தண்ணி கொட்ட, ”நமக்குன்னு பொறந்தது, அத எப்படி அனாதையா விடறது”ன்னு அவ அழுதது, அதற்கு அவன் ”கை, கால் இல்லாம பெத்திருந்தாலும் பரவால்ல வளத்துக்கலாம், சான் புள்ளயினாலும் ஆண் புள்ளன்னு சொல்லிக்கலாம், ஊமை குருடா பொறந்து இருந்தாலும் ஒன்னுமில்லாத்துக்கு ஒரு ஊமைப் பொண்ணுனு சொல்லி வளத்துக்கலாம். ரெண்டுலயும் சேத்துக்க முடியாத இந்தக் கழுத பெத்த புள்ளய என்ன பொறப்புன்னு சொல்லி வச்சுக்கிறது? என் முடிவ நா சொல்லிட்டேன். அவ புள்ளய விட்டுட்டு வரதுன்னா வரட்டும். இல்லாட்டி அத்துக்கிட்டு போகட்டும்”னு சொன்னது, அவ அழுகையோட ஆனால் அழுத்தமா “அவருக்கு நா இல்லாட்டி வேற ஒருத்தி வருவா, இந்தப் புள்ளக்கி என்னவிட்டா யாரு தொண, நா எம்புள்ளயோடவே இருந்துக்கிறேன்” என்று சொல்லி தாலியை அறுத்துக் கொடுத்துட்டு வந்தது, எல்லாம் ஒரு சினிமாவா அவ கண்ணுல வர, அவ அப்படியே கல்லா நிக்கறா.
போலீஸ்காரர் “ஏம்மா என்ன அடையாளம்னு கேட்டா எதோ லச்ச ரூவா குடுத்துட்டு புள்ளய கூட்டிட்டுப் போன்னு சொன்ன மாதிரி செலயா நிக்கறே” என்று மீண்டும் ஒரு அதட்டு போட்டார்.
இத விட வேற என்ன அடையாளத்தை அவளால பெருசா சொல்லிட முடியும்? தன் பிள்ளையை ஆம்பளையா பொம்பளையான்னே சொல்ல முடியாத அவ, ”நான் பொம்பள போலீசுகிட்ட பேசனும்” னு சொன்னா.
”ஏம்மா ஆம்பிளகிட்டயே பேசாத ஊருல பொறந்த மாதிரி பன்றே, சொல்லும்மா அடையாளத்தை” என்று மீண்டும் அவர் கத்த, அவளுக்கு வாயிலிருந்து வார்த்தகள் வரல்ல. கண்ணுல இருந்து தண்ணிதான் வருது.
அப்போ அந்தப் பக்கமா ஒரு பெண் போலிசு வர,, அவ ஒடிப்போய் அவங்க காதுல ஏதோ சொல்ல, அவங்க சங்கடத்தோட, திருதிருன்னு முழிச்சி கிட்டிருந்த அந்தக் கொழந்தையைத் தன் ரூமுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. சோலையம்மாவும் பின்னாலயே போனா. அழுகையோடவும், ஆனந்தத்தோடவும், அடையாளம் கூட சொல்ல முடியாத அவளோட கொழந்தையோடவும் வெளியே வந்தா.